தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women's Health: பெண்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள்

Women's Health: பெண்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள்

I Jayachandran HT Tamil

Jun 05, 2023, 04:45 PM IST

google News
பெண்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்னையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

முதுகு வலி-

நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள். சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம். சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம். நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும். சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம். தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம். சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம். வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம். கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம். மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது. திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம். உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.

தீர்வுகள்-

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள். உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.

ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள். முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள். உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது.

அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது. உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.

மூட்டு வலி-

ஒரு மாருதி காரையே தாங்கும் திறன் மூட்டுகளுக்கு உண்டு என்கிறார் சித்த மருத்துவர் ஒருவர். ஆனால், இதற்கு சீரான உணவுப் பழக்கமும் சரியான வாழ்வியல் பழக்கமும் உடலுழைப்பும் தேவை. இளம் வயதிலிருந்தே சத்தான உணவுகளை சாப்பிட்டு இருக்க வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் உள்ள உணவுகள் அனைத்தும் மூட்டுகளுக்கு வலுவூட்ட கூடியவை.

சிறுவயதிலே மூட்டு வலி வராமல் தடுக்க-

குழந்தையிலிருந்தே சத்தான உணவு அவசியம். 0-1 ½ வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. 2-5 வயது வரை தேங்காய்ப் பால் சேர்த்த காலை உணவுகள் 6-8 வயது வரை நவதானிய கஞ்சி ஏதாவது 1-2 வகை பழம் கீரை சாதம் அவரை பீன்ஸ், டபுள் பீன்ஸ் அனைத்துக் காய்கறிகள் ஒரு டம்ளர் மோர் பெரியவர்களும் இதையெல்லாம் சாப்பிடலாம். முக்கியமாக, முடக்கத்தான் கீரை தோசை, அடை சாப்பிடுங்கள். பச்சை பயறு தோசையும் அடையும் நல்லது.

விளையாட்டு-

குழந்தைகளை வியர்க்க வியர்க்க ஓடியாடி விளையாட விடுங்கள். தொப்பையுடன் குழந்தைகள் இருக்க கூடாது. பெரியவர்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம்.

பெரியவர்களுக்கும் தாய்மார்களுக்கான உணவு முறை-

புளி சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல… மூட்டுகளுக்கு எதிரி. தாய்மார்கள் புளி அதிகம் உணவில் சேர்க்காதீர்கள். தாய்மார்கள், பெரியவர்கள், குழந்தைகள் போன்ற யாரும் புளிக்குழம்பு, புளியோதரை, புளி சேர்த்து துவையல் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். உடல் எடை அதிகமாக இருந்தாலும் மூட்டு வலி வரும்.

தினமும் ஒரு கிண்ணம் அளவு பழத்துண்டுகளை சாப்பிடுங்கள். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். தினமும் 2 டம்ளர் மோர் குடிக்கலாம். ஃப்ரெஞ்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு உணவுகள், வாழைக்காய் உணவுகள் ஆகியவை தவிர்க்கலாம். வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் எடுக்க வேண்டாம். முடிந்தவரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மசாஜ் செய்து கொள்வதும் மூட்டு வலிக்கு நல்ல தீர்வு. ஆனால், சரியான இடத்தில் செய்து கொள்ளுங்கள்.

30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. தாய்மார்களுக்கு அதிக வேலை இருக்கும் எனினும் அரை மணி நேரமாவது ஓய்வு எடுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி