Home Remedy for Cold : கசாயம் இல்லாமல் ஒரே நாளில் நெஞ்சு சளியை கரைக்க எளிமையான வீட்டு வைத்தியம்!
Oct 14, 2023, 06:00 PM IST
கசாயம் இல்லாமல் ஒரே நாளில் நெஞ்சு சளியை கரைக்க எளிமையான வீட்டு வைத்தியம். வெற்றிலை, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை போதும் உங்கள் சளித்தொல்லை ஓடியே போய்விடும்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 10
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
(மிதமாக சுடவைத்துக்கொள்ள வேண்டும்)
கட்டி கற்பூரம் – 2 சிட்டிகை
(பச்சை கற்பூரம், டேப்லட் கற்பூரம் எடுத்துக்கொள்ளக்கூடாது)
எரியும் நல்லெண்ணெய் தீபம்
செய்முறை
மழைக்காலம் துவங்கிவிட்டது. ஆங்காங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி இருமலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரவில் மூக்கடைத்துக்கொண்டு இரவு படுத்து தூங்கும்போது, தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
எண்ணெயில் இருந்து லேசாக புகை வந்தவுடனேயே, அடுப்பை அணைத்துவிட்டு, கட்டி கற்பூரத்தை அதில் பொடியாக்கி சேர்க்க வேண்டும். எண்ணெயை கொதிக்கவிடக்கூடாது. எண்ணெய் கொதித்தால் கற்பூரம் சேர்க்கும்போது பற்றி எரியும். எனவே கவனமாக செய்ய வேண்டும்.
கட்டி கற்பூரம் சேர்த்து கரைந்ததும், உடல் பொருக்கும் சூட்டில் காய்ச்சிய இந்த கலவையை, நெஞ்சுப்பகுதியில் தேய்த்துவிடவேண்டும். குழந்தைகளுக்கு எனில் கை கால்களிலும் தேய்த்து விடலாம்.
பின்னர் வெற்றிலையை விளக்கில் வாட்டி, காய்ச்சிய எண்ணெய் தடவி பற்றுபோல் உடலில் போட்டுவிடவேண்டும். வெற்றிலை கருப்பாகும் வரை சூடாக்க கூடாது. அதேநேரத்தில் போதிய சூடு இருக்க வேண்டும்.
வெற்றிலையை விளக்கு தீயில் சுற்றி காண்பித்து சூடாக்க வேண்டும். சளியால் பாதிக்கப்பட்டு குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இது இதமளிக்கும்.
நெஞ்சுப்புறத்தில் 4 வெற்றிலையை சூடாக்கி போட்டுவிடவேண்டும். சிறிது நேரத்தில் வெற்றிலையில் நிறம் மாறும். அப்போது எடுத்துவிடலாம். பகல் இரவு என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை போட்டுக்கொள்ளலாம். இரவு நேரத்தில் போடும்போது, அப்போது ஏற்படும் மூக்கடைப்புக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.
எனவே மழைக்காலத்தில் சளி, இருமலால் அவதிப்படுவோர் இந்த எளிய மருத்துவத்தை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஆனால், அதிகப்படியான சளி, இருமல் தொல்லைக்கு கட்டாயம் மருத்துவரைத்தான் அணுகவேண்டும். இதை செய்து ஓரிரு நாளில் சளி சரியாகவில்லையென்றால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்