Colon Health: பெருங்குடலுக்கு நண்பனாக இருக்கும் உணவுகள்..தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
Oct 02, 2024, 02:56 PM IST
தினமும் மலம் வெளியேற்றம் செய்து பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். பெருங்குடலுக்கு நண்பனாக இருக்கும் உணவுகள் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதே வேலையில் குடலில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி, சமநிலையின்மை போன்ற சுகாதார கேடு ஏற்பட்டால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்கள் பெருங்குடலில் உள்ள தசை சிதைந்து, இரைப்பை சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
இதனால் குமட்டல் அடிக்கடி ஏற்படும். எனவே பெருங்குடலில் பிரச்னை ஏற்படுவதை அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மூலமே தவிர்க்கலாம். அதேபோல் உங்கள் உடலும் உங்கள் மூளையும் சிறப்பாக இயங்குவது உங்கள் வயிறு காலியாக இருக்கும் போதுதான். உணவைத் தொடர்ந்து உங்கள் ஜீரண மண்டலம் செரித்துக் கொண்டே இருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியானது அங்கே இயல்பாவே சென்று விடும்.
உடலை சுத்தப்படுத்துவதற்கு பல வழிகள் இருப்பது போல் பெருங்குடலையும் இயற்கையான முறையில் சுத்தப்படுத்துவதன் மூலம் பெருங்குடல் புற்று நோய், பாக்டீரியாக்கள் தொற்று போன்ற பல்வேறு பெருங்குடல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
குடல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் மலம் வெளியேற்றம்
அத்துடன் சிறுநீர் வெளியேற்றம் போல், மலத்தையும் சீரான இடைவெளியில் வெளியேற்றுவது பெருங்குடல் ஆரோக்கியத்தை பேனி காக்க உதவும். நாள்தோறும் ஒரு முறையாவது மலத்தை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பதை தடுக்கும்.
நீண்ட நேரம் மலத்தை வெளியேற்றாமல் தேக்கி வைப்பது உடலை பாதிக்கிறது. மலக்குடலில் இருந்து மலத்தை மீண்டும் பெரிய குடலுக்குள் தள்ள தசை செயல்படுகிறது. இதனால் மலத்தில் உள்ள நீர் மீண்டும் உடலில் உறிஞ்சப்பட்டு, மலம் வறண்டு போகும். இந்த செயல்முறைக்குப் பிறகு, நீங்கள் எளிதாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஒரு நபரின் மலம் பெருங்குடலில் நீண்ட நேரம் தங்கியிருந்தாலோ, நீண்ட நேரம் மலத்தை தேக்கி வைப்பது பாக்டீரியாக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது அதிகப்படியான இரைப்பை மற்றும் வாய்வு பிரச்னையை ஏற்படுத்தும்
அதிக நேரம் மலத்தை தக்க வைத்திருப்பது உங்கள் மலக்குடல் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மலம் கடினமாகி வறண்டு போகிறது. மலச்சிக்கல், மூலநோய் மற்றும் ஆசனவாய் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது
பெருங்குடலை இயற்கையாகவே சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்வாக அமையும் உணவுகள் இதோ
ஆப்பிள்
பெக்டின் அதிகமாக நிறைந்திருக்கும் ஆப்பிள், இயற்கையான மலமளிக்கியாவும், ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். நார்ச்சத்து அதிகமாக காணப்படும் ஆப்பிள் செரிமானத்துக்கு நன்மை தருவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பச்சை காய்கறிகள்
குறைவான மெக்னீசியம் அளவு கொண்ட உணவுகளினால் வயிற்று பிரச்னைகள், குடலில் எரிச்சல் உணர்வு ஏற்படும். பச்சை காய்கறிகள் உங்கள் குடலை ஆற்றுப்படுத்தி, ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கு வழி வகுக்கிறது. இதில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் பெருங்குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
சியா விதைகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள் குடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த உணவாக உள்ளது. குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரிய வளர்ச்சியை தடுத்து, நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் குடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது
ஓட்ஸ்
ஒவ்வொரு முறை ஓட்ஸ் சாப்பிடும்போது, உடலுக்கு போதுமான அளவு நார்ச்சத்து கிடைக்கிறது. பெருங்குடலுக்கு நன்மை தரும் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. ஓட்ஸ் உணவுகள் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கிறது.
இஞ்சி
ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த இஞ்சி, நொதித்தல், மலச்சிக்கல், இதர வயிறு சார்ந்த பிரச்னைகள் குறைக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்று வலி, அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் எடை குறைப்பு வழிவகுத்து, கொலஸ்ட்ரால் அளவை கடட்டுப்படுத்துகிறது. குமட்டலை ஏற்படுவதையும் குறைக்கிறது.
டாபிக்ஸ்