Chettinadu Mutton Masala Powder : செட்டிநாடு மட்டன் மசாலாப் பொடி! கொஞ்சம் போட்டாலே போதும் வீட்டில் கறி விருந்துதான்!
Apr 27, 2024, 02:00 PM IST
Chettinadu Mutton Masala Powder : குறிப்பாக உணவிலே அனைத்தையும்விட் செட்டிநாடு உணவுகளுக்கு தனிச்சுவை உண்டு. எனவே இந்த செட்டிநாடு மட்டன் மசாலாப் பொடியை அரைத்து பாருங்கள்.
மசாலாப் பொருட்களை பொருத்தவரையில் நாம் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலே அரைத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் அது எவ்வித கலப்படமும் இல்லாமல் இருக்கும்.
ஆனால் அதில் எந்தப்பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற அளவு மட்டும்தான் நமக்கு தெரியாது.
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில், உட்பொருட்களை சேர்த்து மசாலாப் பொடியை செய்துவைத்துக்கொண்டால், அது சரியாக இருக்கும்.
குறிப்பாக உணவிலே அனைத்தையும்விட் செட்டிநாடு உணவுகளுக்கு தனிச்சுவை உண்டு. எனவே இந்த செட்டிநாடு மட்டன் மசாலாப் பொடியை அரைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வர மிளகாய் – 20
(மிளகாயின் காரத்திற்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்ள வேண்டும்)
வர மல்லி – 6 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
கிராம்பு – 7
ஏலக்காய் – 2
ஜாதிக்காய் – கால் பங்கு
பிரியாணி இலை – 2
கசகசா – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
முந்திரி பருப்பு – 10 – 15 (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
(முந்திரி அதிகம் சேர்க்கக்கூடாது. இது மட்டன் மசாலாவுக்கு நல்ல கெட்டித்தன்மை மற்றும் நல்ல சுவையையும் மசாலாவுக்கு தரும்)
அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு பொருளையும் வறுக்க வேண்டும். அப்போதுதான் மசாலா நன்றாக இருக்கும். கருகிவிட்டால், மட்டன் மசாலா நன்றாக இருக்காது.
செய்முறை
முதலில் வரமிளகாயை தனியாக கருகிவிடாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வரமல்லியையும் தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். மிளகையும் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை ஆகிய அணைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும்.
வாசம் வரும் வரை வறுத்து இறுதியில் கசகசாவை சேர்த்து வறுக்க வேண்டும். கசகசாவை ஆரம்பத்திலே சேர்க்கக்கூடாது. கடைசியில்தான் சேர்க்கவேண்டும்.
கசகசா குட்டியாக இருப்பதால், ஆரம்பத்திலே சேர்த்தால், அது கருகிவிடும். இறுதியில் சேர்த்து வறுக்கவேண்டும்.
அனைத்தும் வறுத்து மணம் வந்தவுடன், தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
கடைசியாக கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்தையும் சேர்த்து ஆறவைத்து, காய்ந்த மிக்ஸ் ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது 6 மாதம் வரை கெடாது. இதை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.
மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி, மட்டன் வறுவல் என அனைத்துக்கும் சேர்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் பொடி சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
இதை வெஜ் கிரேவிகளுக்கும் பயன்படுத்தலாம். வெஜ் வறுவல்களுக்கும் இது நன்றாக இருக்கும். வீட்டிலே எவ்வித கலப்படமும் இல்லாமல் செய்வதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காதது.
இதில் மட்டன் வறுவல் செய்வது எப்படி?
வழக்கமாக நீங்கள் சேர்க்கும் பொருட்களை சேர்த்து மட்டனை வறுத்து, கடைசியாக இந்தப்பொடியை தூவி, கொஞ்சம் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மட்டனை வேகவிடவேண்டும்.
தளதளவென எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், சிறிது நேரம் மட்டுமே வேகவைக்க வேண்டும். மசாலா குறைவாக வேண்டுமென்றால், நீண்டநேரம் குறைவான தீயில் அடுப்பை வைத்து வேகவிடவேண்டும். கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.