கூகுள் ப்ளே ஸ்டாரில் பயனாளர்கள் தரவுகளை கசியவிட்ட 14 செயலிகள்!
Apr 05, 2022, 12:28 AM IST
கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 14 செயலிகள் பயனாளர்களின் தரவுகளை கசிந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டார் லட்சக்கணக்கான செயலிகளின் வீடாக இருந்து வருகிறது. இதில் ஒரு சில செயலிகளைத் தவிர் பெரும்பாலான செயலிகள் இலவசமாகவே கிடைக்கின்றன. சில செயலிகளுக்கு குறைந்த அளவிலான பணம் பெறப்படுகிறது. இதனால் கூகுள் ப்ளே ஸ்டாரில் ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்களது ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்துகிறார்கள்.
இருப்பினும், இந்த செயலிகள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசிவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது உங்கள் சாதனங்களுக்கு தீங்கு இழைக்காமல், தவறான கட்டமைப்பின் காரணமாக நிகழ்கிறது. எனவே இதுபோன்ற செயலியை உருவாக்கிய மென்பொருள் பொறியாளர்தான் இந்தச் சிக்கலை சரி செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யும் வரை இது பயன்ளார்களுக்கு எதிர்மறையான பல விளைவுகளை ஏற்படுத்தும்.
இதுஒருபுறம் இருக்க, ப்ளே ஸ்டாரில் உள்ள 14 ஆண்ட்ராய்டு செயலிகள் பயனாளர்களின் தரவுகளை கசியவிட்டுள்ளது. இதற்கு மோசமான ஃபயர்பேஸ் (கூகுள் மொபைல் செயலி டெவலப்மென்ட் தளம்) கட்டமைப்புதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
கூகுள்தான் ஃபயர்பேஸ் தளத்தை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி மென்பொருள் பொறியாளர்கள் தாங்கள் உருவாக்கும் செயலிகளில் பல அம்சங்களை சேர்த்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் தரவுகளை கசியவிட்டுள்ளதாகக் கூறப்படும் செயலிகள் சுமார் 140 மில்லியனுக்கு மேலாக பதவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ப்ளே ஸ்டாரில் உள்ள பிரபல செயலிகளில் 55 பிரிவுகளாக பிரித்து சுமார் 1,100 செயலிகளை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர். அதில் மேற்கூறிய செயலிகளின் ஃபயர்பேஸ் சரியான முறையில் கட்டமைக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பயனாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட பல அடிப்படை தகவல்கள் கசிந்துள்ளது. இந்த செயலியின் யுஆர்எல் தெரிந்த யாராலும் எந்த அங்கீகாரமும் இல்லாமல் தரவுகளை அணுக முடியும்.
ப்ளே ஸ்டாரில் சுமார் 100 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களால் தங்களது சாதனங்களில் நிறுவப்பட்டுள்ள யுனிவெர்சல் டிவி ரிமோட், ஃபைன்ட் மை கிட்ஸ், சைல்ட் ஜிபிஎஸ், போன் டிராக்கர், ஹைபிர்ட் வாரியர், ரிமோட் ஃபார் ரோகூ, டன்கியான் ஆஃப் தி ஓவர்லார்டு, கோட்மேட்டிக்ஸ் உள்ளிட்ட சில செயலிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.