HBD Delhi Ganesh: தமிழ் சினிமாவின் மகா கலைஞன் டெல்லி கணேஷ் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இதோ..!
Aug 01, 2024, 06:30 AM IST
HBD Delhi Ganesh: எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடித்து புகழ்பெற்று மக்கள் மனங்களை வென்றவர் டெல்லி கணேஷ். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1976-ம் ஆண்டு வெளியான 'பட்டணப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
கதாபாத்திரங்களை உள்வாங்கி மக்கள் ரசிக்கும்படியாக நடிப்பதில் தமிழ் சினிமாவில் பல துணை நடிகர்கள் இருந்தாலும் நடிகர் டெல்லி கணேஷூக்கு என்று தனி இடம் உண்டு. திருநெல்வேலி மாவட்டம், வல்லநாட்டில் இதே ஆகஸ்ட் 1-ம் தேதி 1944-ம் ஆண்டு பிறந்தவர். இன்று அவருக்கு 80ஆவது பிறந்ததாள். இந்த நாளில் அவரது திரைப்பயணம் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ..!
முதல் திரைப்படம்
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடித்து புகழ்பெற்று மக்கள் மனங்களை வென்றவர் டெல்லி கணேஷ். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1976-ம் ஆண்டு வெளியான 'பட்டணப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
காமெடியில் முத்திரை பதித்த டெல்லி கணேஷ்
1980-களில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக ஆகிப்போனார். வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது டெல்லி கணேஷ் காமெடியிலும் கலக்க கூடியவர். 'மிடில் கிளாஸ் மாதவன்', 'அவ்வை சண்முகி' ஆகிய திரைப்படங்களை அவரது காமெடி நடிப்பிற்கு உதாரணங்களாக கூறலாம்.
ரஜினி, கமல் படங்களில் டெல்லி கணேஷ்
பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த விசுவின் படங்களில் டெல்லி கணேஷுக்கு குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. ரஜினி, கமல் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தார். 1985-ல் பாலசந்தர் இயக்கி உச்சம் தொட்ட காவியம் 'சிந்து பைரவி' படத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மிருதங்கக் கலைஞராக வெகு சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
இவர் நடிப்பில் வெளிவந்த சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இன்றும் பேசப்படக்கூடிய 'நாயகன்' திரைப்படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி மொழி பெயர்ப்பாளராக பக்கம்பலமாக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
பன்முக கலைஞர்
தொடர்ந்து 1990-களில் டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர், நகைச்சுவை வேடங்களே இருந்தது. ஆனால், 'சிதம்பர ரகசியம்', 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். 2000-க்குப் பின்னர் தந்தை, தாத்தா போன்ற வயதான வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சீரியல் புகழ்
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'வசந்தம்', 'கஸ்தூரி' போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'இரும்புத் திரை' போன்ற திரைப்படத்தில் ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தை வெளிக்காட்டி இருப்பார்.
600 திரைப்படங்கள்
சுமார் 600-க்கு மேற்பட்ட திரைப்படங்களைக் கடந்து இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது டெல்லி கணேஷின் நடிப்புப் பயணம். அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளம் மனதார தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது..! பிறந்தநாள் வாழத்துக்கள் டெல்லி கணேஷ்..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்