Varisu: ‘வாரிசு’ ஹேப்பியானு கேட்டதுக்கு விஜய் சொன்ன பதில் என்ன? -வம்சி உருக்கம்
Jan 16, 2023, 04:37 PM IST
Varisu Success Meet in Chennai: நான் தெலுங்கு இயக்குனரோ தமிழ் இயக்குனரோ இல்லை. நான் முதலில் மனிதன். பிறகுதான் எல்லாம் - வாரிசு இயக்குனர் வம்சி
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக கடந்த 11ஆம் தேதி வெளியானது. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷ்யாம், கணேஷ் வெங்கட்ராம், சங்கீதா, ஜெயசுதா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் உலக அளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ‘வாரசுடு’ வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜனவரி 14-ல் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கிலும் வாரசுடு படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதன் கொண்டாட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குனர் வம்சி, "வாரிசு' திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதற்கு தமிழ் மக்களுக்கு மிகவும் நன்றி. தமிழில் பேசுறதுக்கு ட்ரை பண்றேன். ஏதாவது தப்பாக பேசிவிட்டால் மன்னித்து விடுங்கள். விஜய், தில்ராஜு மற்றும் படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம். அவர்களது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன். அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய்யிடம் இந்தக் கதை சொல்லும்போது, நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என சொன்னேன். என்னை பலரும் தெலுங்கு இயக்குனர்.. தெலுங்கு இயக்குனர் என கூறுவது காயப்படுத்துகிறது. நான் தெலுங்கு இயக்குனரோ தமிழ் இயக்குனரோ இல்லை. நான் முதலில் மனிதன். பிறகுதான் எல்லாம். தமிழ் மக்களின் நெஞ்சில் இடம் கொடுத்ததிற்கு நன்றி.
‘வாரிசு’ ஒரு பக்கா தமிழ் படம் என்பதைத்தான் நான் முதலில் இருந்தே கூறி வருகிறேன். நீங்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வரும்போது உங்களுக்கு தேவையான எல்லாம் இந்தப் படத்தில் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி இந்த படத்தில் தளபதி விஜய் நல்லா வொர்க் பண்ணி இருக்காரு. விஜய் குறித்து நான் எவ்வளவு சொன்னாலும் போதாது. அவரிடம் ‘சார் நீங்கள் ஹேப்பியா?’ என கேட்டேன். அவர் ‘ரொம்ப ஹேப்பி’ என்றார். அது போதும் எனக்கு. என் மீது நம்பிக்கை வைத்து இப்படம் கொடுத்ததற்கு நன்றி விஜய். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டார். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்” என்றார்.
டாபிக்ஸ்