Lalitha Memorial Day: ‘திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர்.. புற்றுநோய் கொண்டு சென்ற கலைமகள்..’ யார் இந்த லலிதா?
Nov 23, 2023, 06:15 AM IST
Travancore sisters: ‘சகோதரிகளை வழிநடத்தியதிலும், குடும்பத்தை நிர்வகித்ததிலும் லலிதாவின் பங்கு பெரிது என்பார்கள். இன்று இதே நாளில் பிரிந்த லலிதாவின் சலங்கை ஒலி, என்றுமே நம் காதில் கேட்கும்’
திருவிதாங்கூர் என்ற உடனே நமக்கு சமஸ்தானம் என்கிற வார்த்தை தான் அடுத்ததாக நினைவுக்கு வரும். கேரள மாநிலம் திருவனந்தபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த பணக்கார ஜமீனான தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதியம்மா தம்பதிகளுக்கு மொத்தம் 4 குழந்தைகள். அதில் முதல் குழந்தை தான் லலிதா. 1930 ம் ஆண்டு பிறந்த லலிதாவைத் தொடர்ந்து, நாட்டிய போரொளி பத்மினி, ராகினி, சந்திரக்குமார் ஆகியோர் பிறந்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பஜாபுராவில் மலாயா காட்டேஜின் அரண்மனையில் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தின் வாரிசுகள் இவர்கள். இளம் வயதிலேயே கலை பயிற்சியில் ஈடபடத் தொடங்கினர். லலிதா மற்றும் பத்மினி ஆகியோர் கதகளி விரிவுரையாளர் கோபிநாத் என்பவரிடம், முறைப்படி நடனப்பயிற்சியை கற்றனர்.
மகிழ்ச்சி எப்போதும் நிலைத்து நிற்பதில்லை. அப்படி தான் செல்ல செழிப்பாக வாழ்ந்த அந்த குடும்பத்தில், தந்தையின் இறப்பு பேரிடியாக விழுந்தது. குடும்பத்தை தற்காக்கும் பொறுப்பு, சகோதரிகள் தலையில் விழுந்தது. மூத்த மகளாக லலிதாவிற்கு அது அதிகம் இருந்தது.
நீர் தேடி நகரும் பறவைகள் போல, சென்னை நோக்கி நகர்ந்தது குடும்பம். அங்கு பெரிய நட்டுவாணர், ராமையா பிள்ளை ஆகியோரிடம் நடன பயிற்சியை தொடர்ந்தனர். இந்த காலகட்டம் தான், அடுத்து வரவிருந்த அவர்களின் கலை பயணத்திற்கு முக்கிய அடித்தளமாக இருந்தது.
1950 ம் ஆண்டு தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கிய பிரசன்னா என்கிற மலையாள திரைப்படத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் அறிமுகமாகினர். படம் பெரிய வெற்றி பெற, அதன் பின் சகோதரிகள் மூன்று பேரின் நிலையும் மாறியது. ஆனாலும் அவர்களின் கலை தாகம் தீரவில்லை. மும்பையில் மகாலிங்கம் பிள்ளையிடம் பரத பயிற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
பின்னர் பத்மினி திருமணமாகி அமெரிக்கா சென்றாலும், லலிதாவும், ராகினியும் மலையாள சினிமாவை சூறாவளியாய் சுருட்டிக் கொண்டிருந்தனர். நடனம் என்றாலே அது லலிதா, பத்மினி, ராகினி என்ற முத்திரை குத்தப்பட்டது. தென்னிந்திய மொழிகள் எல்லாமே, அவர்களின் ஆக்கிரமிப்பில் வந்தது. பத்மினி ஒரு படிமேலே போய், இந்தி படங்களில் கூட நடிக்கத் தொடங்கினார்.
ஆனாலும், லலிதாவுக்கும், இளையவர் ராகினிக்கும் புற்றுநோய் அவர்களின் வாழ்நாளை கேள்விக்குறியாக்கியது. 1976ல் ராகினி புற்றுநோய் இறக்க, அடுத்த 6 ஆண்டுகளில் 1982ல் லலிதாவும் புற்றுநோயால் காலமானார். மூத்தவரும், இளையவரும் காலமாக, தனித்துவிடப்பட்டார் பத்மினி.
பத்மினியுடன் ஒப்பிடும் போது, லலிதா நடித்த படங்கள் குறைவு தான். ஆனாலும், திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர் என்கிற பேரும், புகழும் அவருக்கு இன்றும் இருக்கிறது. சகோதரிகளை வழிநடத்தியதிலும், குடும்பத்தை நிர்வகித்ததிலும் லலிதாவின் பங்கு பெரிது என்பார்கள். இன்று இதே நாளில் பிரிந்த லலிதாவின் சலங்கை ஒலி, என்றுமே நம் காதில் கேட்கும்!