Mahesh babu family: ஒரே ஆண்டில் மகேஷ் பாபு குடும்பத்தில் 2 இழப்புகள்
Nov 15, 2022, 05:40 PM IST
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் மகேஷ் பாபு குடும்பத்தில் இந்த ஆண்டில் மூன்றாவது இழப்பு நிகழ்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரர், தாய் ஆகியோரை தொடர்ந்து தற்போது மகேஷ்பாபுவின் தந்தையையும் மரணித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கமே மகேஷ் பாபுவுக்கு சோகமான ஆண்டாக அமைந்தது. கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரும், மூத்த நடிகர் ஜி. கிருஷ்ணாவின் மகனுமான நடிகர் கட்டமனேனி ரமேஷ் பாபு 56 வயதில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தந்தையோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய சாந்தி எனது சாந்தி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். 1997ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பை விட்டு விலகிய அவர், திரைப்படங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
ராமேஷ் பாபு இறந்த 9 மாதங்கள் கழித்து மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார்.
தாயார் இறந்த துக்கம் மனதை விட்டு இன்னும் அகலாத நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் தந்தையும், தெலுங்கு சினிமாவில் 1970களில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த தனது தந்தையும், நடிகருமான கிருஷ்ணாவை இழந்துள்ளார் மகேஷ் பாபு.
79 வயதான நடிகர் கிருஷ்ணாவின் முழுப்பெயர் கட்டமனேனி சிவ ராம கிருஷ்ண மூர்த்தி. இவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் காலமானார்.
முன்னதாக, அதிகாலை 1.15 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் நிலைமை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் காலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
1980களில் காங்கிரஸில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் கிருஷ்ணா. இதையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின்னர் அரசியலில் இருந்து விலகினார்.
சிறந்த நடிகராகவும், வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குநராக இருந்தார் கிருஷ்ணா. 2009ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
தனது நீண்ட சினிமா வாழ்க்கையில், நடிகர் கிருஷ்ணா தமிழில் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் சிபிஐ தலைவராக நடித்திருந்தார்.
ஒரே ஆண்டில் மூன்று இழப்புகளை சந்தித்த மகேஷ் பாபுவின் குடும்பம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு திரை உலகினர், ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.