Vennila Kabadi Kuzhu Actors: மூன்று பேரை இழந்தது ‘வெண்ணிலா கபடி குழு’
Dec 24, 2022, 09:44 AM IST
RIP Nitish Veera and Maayi Sundar And Hari vairavan: வெண்ணிலா கபடி குழு படத்தில் முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் நடித்த மூவர் காலமாகியுள்ளனர்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம். ஒரு குழுவாக பல நடிகர்கள் நடித்து, குறைந்த பட்ஜெட்டில் நிறைவான வெற்றியை பெற்ற திரைப்படம். 2009 ஜனவரி 29 ம் தேதி வெளியான இத்திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருந்தார்.
விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், சூரி, ஹரி பைரவன், மாயி சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு செல்வகணேஷ் இசையமைத்திருந்தார்.
கிராமத்தில் வசிக்கும் கபடி வீரர்களின் ஆசை, காதல், சோகம் என அனைத்தையும் இந்த படத்தில் திரைக்கதையாக தந்திருப்பார் இயக்குனர் சுசீந்திரன். அந்த படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்குமே வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மறுவாழ்வு தந்தது எனலாம்.
இன்றும் சேனல்களில் வெண்ணிலா குழு படத்திற்கு நல்ல டிஆர்பி கிடைக்கிறது. ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு, 2022 ம் ஆண்டு மோசமான ஆண்டாக மாறியுள்ளது.
குறிப்பாக, 2022 டிசம்பர் மாதம் வெண்ணிலா கபடி குழுவிற்கு கருப்பு மாதமாக அமைந்திருக்கிறது. அதில் நடித்த ஹரி வைரவன் டிசம்பர் 3 ம் தேதி உயிரிழந்தார். ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில், டிசம்பர் 24ம் தேதியான இன்று, அதில் நடித்த மற்றொரு நடிகரான மாயி சுந்தர் காலமானார்.
இருவருமே வெவ்வேறு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள். அடுத்தடுத்து ஏற்பட்ட இரு உயிரழப்பால், வெண்ணிலா கபடி குழு படத்தில் இருந்த இரு முக்கிய நடிகர்களை இழந்திருக்கிறது படக்குழு.
இதற்கு முன்பாக கடந்த 2021 மே 17 ம் தேதி வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். தற்போது ஹரி வைரவன் மற்றும் மாயி சுந்தரின் மறைவு மூலம், 3 முக்கிய நடிகர்களை வெண்ணிலா கபடி குழு திரைப்படம் இழந்திருக்கிறது.
மறைந்த மூன்று நடிகர்களுமே இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் சூரிக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்