The Goat Life Trailer: ‘மரியான்’ பட சாயலில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் - உயிரைக் கொடுத்து நடித்துள்ள பிருதிவிராஜ்!
Mar 09, 2024, 09:51 PM IST
The Goat Life Trailer: பிளெஸ்ஸி இயக்கத்தில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பென்யமின் எழுதிய மலையாள நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
The Goat Life Trailer: இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள திரைப்படம்,ஆடுஜீவிதம். இப்படம் 2008ஆம் ஆண்டு பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கிளாஸிக் கதை ஆகும். கிட்டத்தட்ட தமிழில் பொன்னியின் செல்வன்போல, ஆடுஜீவிதம் நாவலை மலையாளத்தில் படிக்காதவர்களே மிகவும் சொற்பம் எனலாம். இந்நிலையில் தான் 2009-ம் ஆண்டு முதல் தயார் ஆகி வந்த 'ஆடுஜீவிதம்' திரைப்படம் இறுதியாக வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர்.
டிரெய்லர்:
நடிகர் பிருத்விராஜ், நஜீப் என்ற மலையாள புலம்பெயர்ந்த தொழிலாளியாக நடித்துள்ளார். சவூதி அரேபியாவில் ஒரு பண்ணையில் ஆடு மேய்ப்பவராக அடிமையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப் போன்று உணரவைக்கிறார். சோதனைகள், இன்னல்கள் மற்றும் பாலைவனத்தில் தப்பிப்பிழைத்தல் நிறைந்த அவரது பயணம் கதையைக் கொண்டு செல்கிறது. மொத்தம் 1 நிமிடம் 33 விநாடிகள் நீளமுள்ள இந்த டிரெய்லர், படம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு பார்வையை அளிக்கிறது.
நஜீப் வீட்டிற்குத் திரும்புவதற்கான பதற்ற மனநிலை, நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. பிருத்விராஜ் சடைமுடி மற்றும் தாடியுடன் கிட்டத்தட்ட அடையாளம் காண முடியாதவராக இருப்பதைக் காணலாம்.
இது எளிதான பயணம் அல்ல:
இது குறித்து நடிகர் பிருத்விராஜ் கூறுகையில், "இது ஒரு நீண்ட பயணம், எளிதானது அல்ல. பத்தாண்டு காலத்திற்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு, பார்வையாளர்கள் எங்கள் கடின உழைப்பு மற்றும் எங்கள் ஆக்ரோஷமான நடிப்பினைப் பார்க்கிறார்கள். கோவிட் நாட்கள் முதல் இன்று வரை, ஆடுஜீவிதம் திரைப்படம் யாரும் எதிர்பாராத மற்றும் மறக்க முடியாத பயணமாக உள்ளது. பிளெஸ்ஸி சாரின் இயக்கத்தில் நடிகனாக இருப்பதும், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஒரு மேஸ்ட்ரோ இசையை உயிர்ப்பிப்பதைப் பார்ப்பதும் ஒரு மரியாதைமிக்க செயலாகும்.
ஆடுஜீவிதம் என்பது எங்களுக்கு ஒரு திரைப்படத்தை விட அதிக அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இது நம் இதயங்களைத் தொட்ட ஒரு கதை. எப்போதும் நம்முடன் இருக்கும். பார்வையாளர்களும் அவ்வாறே உணர்வார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.
ஆடுஜீவிதம் எத்தகைய படம்:
பிளெஸ்ஸி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் 2009ஆம் ஆண்டு முதல் இப்படத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். பிளெஸ்ஸி பென்யமினுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திரைக்கதை எழுதத் தொடங்கியபோது, பட்ஜெட் கட்டுப்பாடுகள் படத்தின் முன்னேற்றத்தைத் தடுத்தன. 2015ஆம் ஆண்டில், படத்தில் நடித்த ஜிம்மி ஜீன்-லூயிஸ் மற்றும் ஸ்டீவன் ஆடம்ஸ் தயாரிப்பாளர்களாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் மாறியதன்மூலம் படம் ஒருதளத்திற்குச் சென்றது.
இந்தப் படம் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் படமாக்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக குழுவினர் ஜோர்டானில் 70 நாட்கள் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டது.
இப்படத்தில் அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் அரபு நடிகர்களான தாலிப்அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பில் பணியாற்றியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9