HBD T R Rajakumari : தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி..தனக்காக வாழாமல் தனது குடும்பத்திற்காக வாழ்ந்து தியாக குமாரி
May 05, 2024, 06:00 AM IST
HBD T R Rajakumari : தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னியாக திகழ்ந்த இவரின் படத்தில் நாட்டிய பேரொளி பத்மினி நாட்டியம் ஆடினார். கடைசி வரை தனக்காக வாழாமல் தனது குடும்பத்திற்காக வாழ்ந்து தியாக குமாரியாக இருந்தார்.
1922 ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சாவூரில் பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. டி.ஆர்.ராஜகுமாரி பிறந்த சில தினங்களிலேயே இவரின் தந்தை மரணம் அடைந்ததால் இவரது குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது. ராஜாயி என்ற இயற்பெயர் கொண்ட டி ஆர் ராஜகுமாரியை புகழ்பெற்ற இசை மேதையும் இவரின் பாட்டியுமான குஜலாம்பாலும், ரங்கநாயகியும் சேர்ந்து சினிமாவில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர்.
எட்டாம் வகுப்பில் தனது பள்ளி படிப்பை விட்டு விட்டு தனது அத்தை தனலட்சுமி போல நடித்து சம்பாதித்து குடும்ப வறுமையை போக்க ராஜகுமாரி முடிவெடுத்தார். குடும்ப வறுமையை போக்க நடிக்க ஆர்வம் காட்டிய ராஜகுமாரி நடிப்பதற்காக சென்னை சென்றார். அங்கு அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கே அமர்நாத் என்பவரை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அப்போது அவர் ராஜகுமாரிடம் உன்னிடம் அழகும் இல்லை நடிப்பும் சரியாக வரவில்லை எனக் கூறி இவரை நிராகரித்துவிட்டார்.
நடிகையும் இவரின் அத்தையும்மான தனலட்சுமி வீட்டில் இவர் வீட்டு வேலைகளை செய்து உதவி செய்து வந்தார். ஒரு நாள் இவரது அத்தையை படத்தில் ஒப்பந்தம் செய்ய வந்த இயக்குனர் கே சுப்பிரமணியத்திற்கு காபி கொடுக்க வந்த ராஜகுமாரியை பார்த்துவிட்டு கருப்பாக இருந்தாலும் கேமராவிற்கு உன்னுடைய முகம் பொருத்தமாக இருக்கும் அழகாகவும் இருக்கும் என கூறி தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
குமார குலோத்துங்கன் என்ற படத்தில் அறிமுகமான டி.ஆர். ராஜகுமாரி அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் போது அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜாயி என்ற இவரின் பெயரை மாற்றி டி ஆர் ராஜகுமாரி என்று பெயர் சூட்டினார். இவரின் முதல் படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு கடைசி வரை திரைக்கு வராமலே போனது.
டி ஆர் ராஜகுமாரி திருமணம் செய்து கொள்ளலவில்லை. தனது தம்பி ராமண்ணா மூன்று திருமணங்களை செய்து கொண்டார். கடைசிவரை தம்பிக்கு உதவி அவரை கை தூக்கி விட்ட பெருமை இவருக்கு உண்டு.
பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம்ஜிஆர், சிவாஜி கணேசன் தமிழகத்தின் அந்தக்கால ஐந்து சூப்பர் ஸ்டார் குழு நடித்த பெருமை இவருக்கு உண்டு. எளிமையாக அனைவரிடமும் பழகும் பண்பு மேலும் இவருக்கு பெருமையை சேர்த்தது.
சொந்த வீடு இல்லாமல் வருத்தத்தில் இருந்த ராஜகுமாரி கன்னியாகுமரிக்கு சென்று அங்கு உள்ள குமரி அம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தார். தான் சொந்த வீடு கட்டினால் உனது பெயரையே எனது இல்லத்திற்கு வைப்பேன் என பிரார்த்தனை செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இவருக்கு வீடு கட்டும் யோகம் வந்து வீடு கட்டினார் அவர் பிரார்த்தனை செய்தபடி அந்த வீட்டிற்கு அந்த அம்மன் பெயரையே வைத்தார். 1950 ஆம் ஆண்டு தைத்திருநாளில் சென்னை பாண்டி பஜாரில் டி ஆர் ராஜகுமாரி சொந்தமாக திரையரங்கு ஒன்றைக் கட்டி ஜெமினி அதிபர் எஸ் எஸ் வாசன் அதனை திறந்து வைத்தார். ராஜகுமாரி டாக்கீஸ் என பெயரிடப்பட்ட அந்த தியேட்டர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் முதல் தரமான ஏசி தியேட்டராக இருந்தது.
அதேபோல சென்னையில் தன் பெயரில் சினிமா தியேட்டரை திறந்த முதல் பெண் நடிகை என்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழ் திரைப்பட வரலாற்றில் மூன்று தீபாவளி கண்ட ஒரே படம் இவர் நடித்த ஹரிதாஸ் மட்டுமே. 110 நாட்கள் ஓடிய இந்த படத்தில் டி ஆர் ராஜகுமாரியும், தியாகராஜ பாகவதரும் நடித்திருந்தனர்.
நடிப்பு நடிப்பு என தனது வாழ்க்கையின் நடிப்புக்காக அர்ப்பணித்த இவர் நடிப்பை விட்டபோதும் கூட தனக்காக துணையை தேடாமல் தனது தம்பி ராமண்ணாவுக்கு கடைசி வரை உதவி செய்து அவருடன் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னியாக திகழ்ந்த இவரின் படத்தில் நாட்டிய பேரொளி பத்மினி நாட்டியம் ஆடினார். கடைசி வரை தனக்காக வாழாமல் தனது குடும்பத்திற்காக வாழ்ந்து தியாக குமாரியாக இருந்தார் ராஜகுமாரி. 1999 ஆம் ஆண்டு தனது 77 வது வயதில் இந்த மண்ணை விட்டு சென்றார்.இன்று இவரின் பிறந்தநாள். இன்றைய தினம் இவரை நினைவுகூறுவோம்.
டாபிக்ஸ்