தமிழ் செய்திகள்  /  Entertainment  /  It Has Been 51 Years Since The Release Of Raja Raja Chozhan Movie

பொன்னியின் செல்வனாக சிவாஜி கணேசன்.. முழுமையான காவியம்.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராஜராஜ சோழன்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 05:45 AM IST

Raja Raja Chozhan: ராஜராஜ சோழன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 51 ஆண்டுகளாகின்றன. வரலாற்றை சித்திரமாக்கி வரலாறாக மாறிய திரைப்படம் இந்த ராஜ ராஜ சோழன் என்று கூறினால் அது மிகையாகாது.

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவின் நடிப்பு திலகமாக விளங்கி வருபவர் சிவாஜி கணேசன். பொன்னியின் செல்வன் திரைப்படம் வருவதற்கு முன்பாகவே ராஜராஜ சோழன் இப்படித்தான் இருப்பார் என்பதை தமிழ் மக்களுக்கு காட்டியவர் சிவாஜி கணேசன்.

அந்த காலத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை ராஜராஜ சோழன் திரைப்படம் செய்துள்ளது. தற்போது இருப்பவர்களுக்கு புரியும் மொழியில் கூற வேண்டும் என்றால் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ராஜா எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ராஜராஜசோழன் திரைப்படத்தை பார்த்தால் போதும். அந்த அளவிற்கு தனது நடிப்பில் கம்பீரத்தை வெளிக்காட்டி இருப்பார் நடிகர் சிவாஜி கணேசன்.

சிறிய துறையில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக இந்த ராஜராஜ சோழன் வெளியானது. தமிழில் இந்த திரைப்படத்தை தயாரித்த பொழுது பல்வேறு விதமான இடையூறுகள் வந்துள்ளன.

இந்த ராஜராஜ சோழன் திரைப்படத்தில் போர் காட்சிகள் இருக்காது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழன் எப்படி கட்டினார். அவருடைய மகன் ராஜேந்திர சோழன், குந்தவை, விமலாதித்தன், வேங்கி நாட்டு விடுதலை என அனைத்து இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும்

ராஜேந்திர சோழனாக சிவகுமாரும், குந்தவையாக நடிகை லட்சுமியும், வேங்கி நாட்டு மன்னனாக இருக்கும் விமலாதித்தன் கதாபாத்திரத்தில் முத்துராமனும் நடித்திருப்பார்கள். முக்கியமாக வேங்கி நாட்டின் குல குருவாக நடிகர் நம்பியார் நடித்திருப்பார்.

படம் முழுக்க ராஜராஜ சோழன் ஆன சிவாஜி கணேசனை வைத்தே நகரும். ஒரு மன்னன் எப்படி எல்லாம் இருப்பார் என்பதை இந்த திரைப்படம் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். தஞ்சை பெரிய கோயிலை கட்டிக்கொண்டு இருப்பார், அவ்வப்போது மகளோடு அன்பாக பழகுவார், ராஜதந்திரத்தை மகன் ராஜேந்திர சோழனுக்கு சொல்லிக் கொடுப்பார், தனது மகளை காதலிக்கும் மன்னனான விமலாதித்தனை மதிப்பார். அதே நேரம் எதிர்ப்பது போல் எதிர்த்து மகளின் காதலை சேர்த்து வைப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசப்படுத்தி சிவாஜி கணேசன் ஒரு மன்னனின் வாழ்க்கையை அப்படியே வெளிக்காட்டு இருப்பார்.

வேங்கி நாட்டு குல குருவாக விளங்கிவரும் பால தேவர் யாருக்கும் தெரியாதது போல் இராஜராஜ சோழனோடு பழகி அரசவையில் இருந்து வருவார். நம்பியாருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார் இராஜராஜ சோழன். இதனைக் கண்டு ராஜேந்திர சோழன் குந்தவை என அனைவருமே ராஜராஜ சோழன் மீது வெறுப்பை காட்டுவார்கள்.

ஒரு கட்டத்தில் பாலதேவர் கூறுவதை ராஜராஜசோழன் அப்படியே செய்வார். ராஜ்யமே பறிபோகும் அளவிற்கு பால தேவர் சூழ்ச்சிகளை உருவாக்குவார். கடைசியில் நம்பியாரின் நாட்டைச் சேர்ந்த ஒற்றர் ஒருவர் வருவார் அவரிடம் அனைத்து விஷயங்களையும் பால தேவர் உளறி கொட்டி விடுவார். கடைசியில் அந்த ஒற்றவனாக வந்தது ராஜராஜ சோழன்.

பாலா தேவர் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார் என்பதை அறிவதற்காகவே அவர் சொல்வதை அனைத்தையும் கேட்டு நடக்கும் மன்னனாக ராஜராஜ சோழன் நடித்திருப்பார். மேலும் யாருக்கும் தெரியாமல் பால தேவரிடமே தனது ஒற்றை ராஜராஜசோழன் வைத்திருப்பார். அதுவும் ஒரு பெண்ணை ஒற்றவனாக வைத்திருப்பார். இதுபோன்ற ஏராளமான சுவாரசியமான காட்சிகள் இந்த திரைப்படத்தில் நிறைந்து காணப்படும்.

படத்தில் மிகப்பெரிய அளவில் போர்க்காட்சிகள் இல்லாவிட்டாலும் படம் முழுவதும் ராஜராஜன் சோழனாக சிவாஜி கணேசனின் நடிப்பு படத்தை மிகப்பெரிய வெற்றிக்கு கொண்டு சென்றது. முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட சினிமாஸ்கோப் டெக்னாலஜி மக்களை ஆச்சரியப்படுத்தியது. குன்னக்குடி வைத்தியநாதனின் இசை என அனைத்துமே இந்த திரைப்படத்தில் முழுமை செய்தது.

ஆயுதம் இல்லாமல் ஒரு நாட்டை மன்னன் எப்படி தனது திறமையால் வழி நடத்துகிறார். என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். ராஜராஜ சோழன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 51 ஆண்டுகளாகின்றன. வரலாற்றை சித்திரமாக்கி வரலாறாக மாறிய திரைப்படம் இந்த ராஜராஜ சோழன் என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்