என்ஜினியர் டூ டைரக்டர்! இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் கார்த்திக் சுப்பராஜ்
Mar 19, 2023, 06:30 AM IST
HBD Karthik Subbaraj: இதுவரை 7 படங்களையும், 3 வெப் சீரிஸ்களையும் இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்பராஜ் தற்போது பெரிதும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பார்ட் 2 என்ற எதிர்பார்ப்பை கடந்து படம் மீது ஆவலை ஏற்படுத்தியிருப்பது வித்தியாசமான மாஸ் டீஸர்தான்.
நானும் மதுரைக்காரன்தான் டா என்ற விஷால் நரம்பு புடைக்கு மாஸ் காட்சியை போல் மதுரை மண்ணின் மைந்தனாக திகழும் கார்த்திக் சுப்பராஜ் படித்தது மதுரை தியாகராஜ காலேஜ்ஜில் என்ஜினியரிங்கள். பெங்களூருவில் ஐடி வேலை, அங்கிருந்து அமெரிக்க பறந்த கார்த்திக் சுப்பராஜின் பார்வையை சினிமா பக்கம் திருப்பியதில் முக்கியமானவராக, சொந்த ஊரான மதுரையில் பிறந்து திரையுலகினரால் கொண்டாடப்படும், ஒவ்வொரு நடிகர்கள் ஒரு முறையாவது இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மணிரத்னம் தான்.
2010 காலகட்டத்தில் சினிமா மீது தீராத காதல் கொண்ட இளைஞர்களை கண்டறியும் களமாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்டு கோலிவுட்டில் இயக்குநராக ஜொலித்த நலன் குமாரசாமி, பாலாஜி மோகன், முண்டாசுபட்டி ராம்குமார், பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் போன்ற இயக்குநர்களின் வரிசையில் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர்.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் காட்சிப்பிழை படம் மூலம் கவனத்தை ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ் அடுத்தடுத்த எபிசோடுகளில் தனது படங்களல் கவர்ந்தார். இதையடுத்து 2012ஆம் ஆண்டில் வெளியான சிறிய பட்ஜெட் சஸ்பென்ஸ் கலந்த திகில் படமான பிட்சா மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களை கவர்ந்த சூப்பர்ஹிட்டாக அடுத்த மியூசிக்கல் கேங்ஸ்டர் படமாக ஜிகர்தண்டா படத்தை மதுரையை மையமாக வைத்து இயக்கினார். இந்த படமும் ஹிட், பின் எமோஷனல் டிராமா பாணியில் மூன்று பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையம்சத்தில் வெளிவந்த இறைவி படத்தை இயக்கினார்.
ஹாட்ரிக் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கு புதிய பாணி திரைப்படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் உருவாக்கிய இவர் நான்காவது படமாக பிரபுதேவாவை வைத்து மெர்குரி என்ற டயலாக் இல்லாத சைலண்ட் த்ரில்லர் படத்தை இயக்கினார்.
இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கார்த்திக் சுப்பராஜ் என்ற இயக்குநர் மீதான இமேஜை உயர்த்தியது. இதன் காரணமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஒரு பேன் பாயாக ரஜினி பாணி கமர்ஷியல்கதையை வைத்து முழுக்க முழுக்க அனைவரும் ரசிக்கும் விதமாக பேட்ட படத்தை உருவாக்கியிருந்தார். காதல், காமெடி, தங்கை செண்டிமென்ட், ஆக்ஷன் என ரஜினியை பழைய பீஸ்ட் மோடில் திரையில் கொண்டு வந்து கிளாப்ஸ் அள்ளினார்.
இதைத்தொடர்ந்து தனுஷை வைத்து ஈழ மக்களின் வலி மற்றும் வேதனை கடந்த பின்னணி சொல்லும் விதமாக ஜகமே தந்திரம், காந்தியவாதி குடும்பத்தை சேர்ந்தவரின் வாழ்க்கையில் குடியால் நிகழ்ந்த திருப்புமுனை என தனது வித்தியாசமான படைப்புகளால் தனித்துவம் பெற்ற இயக்குநராக கோலிவுட் சினிமாவில் வலம் வருகிறார்.
இதுதவிர ஓடிடி படங்களான புத்தம் புது காலை, நவரசா, பென்டாக்கிஸ் ஆகியவற்றின் ஒரு கதையை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில இயக்குநர்கள் தங்களது வித்தியாசமான படைப்புகளின் மூலம் தனியொரு பெயரெடுத்து ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள்.
அப்படி பெயர் எடுத்தவர்களில் 2000ஆவது ஆண்டுக்கு முன்பு பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், மணிவண்ணன், கேஎஸ் ரவிக்குமார் போன்ற சில இயக்குநர்களை குறிப்பிடலாம். இவர்களின் பெயருக்கு பின்னால் இந்த இயக்குநர்களின் சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கம் என திரையுலகில் காலத்தால் அழியாமல் இருந்து வருகிறது.
அதேபோன்று தனது படைப்புகளால் ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சினிமாவை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவே இருந்து வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்த நூற்றாண்டில் தமிழ் சினிமாவால் அடையாளம் காணப்பட்ட முக்கிய இயக்குநர்களில் வரிசையில் கார்த்தி சுப்பராஜுக்கு தனியொரு இடம் உண்டு. ஏனென்றால் கார்த்திக் சுப்பராஜ் பாணி என்று சொல்லும் விதமாக தனது படைப்புகளை பற்றி பேச வைத்துள்ளார்.
இதற்கு சிறந்த சான்றாக தற்போது அவர் இயக்கி வரும் தனது சூப்பர்ஹிட் படமான ஜிகர்தண்டா இரண்டாம் பாகம். இந்த படத்தை பற்றி வெறும் அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் படத்தின் மீதான் ஹைப்பை ஏற்றும் விதமாக டீஸர் ஒன்றை உருவாக்கி கோலிவுட் இயக்குநர்களின் மத்தியில் மாற்று சிந்தனை விதைத்துள்ளார். இன்று கார்த்திக் சுப்பராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்