29 years of Aanazhagan: பேச்சிலருக்கு வீடு கிடைக்காததால் பெண் வேடம் தரிக்கும் நபர் மற்றும் அவரது நண்பர்களின் கதை!
Mar 11, 2024, 09:23 AM IST
29 years of Aanazhagan:ஆணழகன் திரைப்படம் வெளியாகி 29ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
29 years of Aanazhagan: பிரசாந்த், சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த், கே.ஆர். விஜயா, காந்திமதி, வைஷ்ணவி, மணிவண்ணன், ஒரு விரல் கிருஷ்ணா ராவ், லூசு மோகன், பயில்வான் ரங்கநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமரிமுத்து , வி.கே. ராமசாமி, டெல்லி கணேஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து 1995ஆம் ஆண்டு, மார்ச் 11ஆம் தேதி ரிலீஸான நகைச்சுவைத் திரைப்படம் தான், ஆணழகன். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியிருந்தார். இப்படம், சித்ரம் பலரே விசித்ரம் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்துக்குண்டான வசனங்களை பாபு - கோபு ஆகியோர் எழுதியிருந்தனர். ஒளிப்பதிவினை வி. ரெங்கா செய்திருந்தார். சுப்ரீம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தை பாலாஜி தயாரித்திருந்தார்.
ஆணழகன் திரைப்படத்தின் கதை என்ன?: ராஜா, சுதாகர், ராகவா, மருது ஆகிய நான்கு இளைஞர்களும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். பேச்சிலர்கள் இவர்கள் நால்வரும் ஒன்றாக, சென்னையில் ஒரு அறை எடுத்து தங்கி வருகின்றனர். இதற்கிடையே சிறிய பஞ்சாயத்தில், குடியிருக்கும் வீட்டில் இருந்து காலி செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். அப்போது வெளியில் வரும் நான்கு நண்பர்களும் வாடகைக்கு வீடு தேடி அலைகின்றனர். அப்போது திருமணம் ஆகாத பேச்சிலர் இளைஞர்களுக்கு வீடு கிடையாது எனப் பலர், அவர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கின்றனர்.
அப்போது ஒரு புதியவீட்டில் குடும்பத்திற்கு வீடு வாடகை விடப்படும் என அறிவிப்புப் பலகையைப் பார்க்கின்றனர். அப்போது திருமணம் ஆகாத அந்த நான்கு நண்பர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் போல் வேடம்போட்டு சென்று, வீடு கேட்கின்றனர். அதில் ராஜா, லக்கி என்ற ராஜலட்சுமி கேரக்டரில் சுதாகரின் மனைவிபோல் வேடமிட்டு நடிக்கிறார்.
சுதாகரின் சகோதரராக ராகவாவும், அவரது தந்தையாக வயதான தோற்றத்தில் மருதுவும் நடிக்கின்றனர். இதனால், வீட்டின் உரிமையாள அம்மாவுக்கு வீட்டினை வாடகைக்குத் தருகிறார். இதனால், ஒவ்வொரு நாளும் இவர்கள் நால்வரும் வீட்டு உரிமையாள அம்மாவுக்கு சந்தேகம் வராத வகையில் ஒப்பனை அலங்காரம் செய்து வீட்டில் உலா வருகின்றனர்.
அதுவும் பெண்வேடத்தில் நடிக்கும் ராஜா, தினம்தினம் கொடுமைகளை அனுபவிக்கிறார். ஒரு சிகரெட் குடிப்பதற்குக் கூட படாதபாடு பாடுகிறார். ஆனால், பெண் வேடம் தரிக்கும் ராஜாவோ, வீட்டு உரிமையாளரின் மகளான பிரியாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் பிரியாவும் ராஜாவை காதலிக்கிறார். ஒரு சூழலில், வீட்டு உரிமையாளப்பெண்ணிடம், லக்கி என்கிற ராஜலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக பொய் உரைக்கின்றனர், மீதமுள்ள மூன்று நண்பர்கள். அந்த பொய்யை மற்றொரு பொய் சொல்லி மறைக்க முயலும்போது இப்படம் பலரையும் சிரிக்க வைக்கிறது. இறுதியில் ராஜலட்சுமிக்கு வளைகாப்பும் நடத்துகிறாள், வீட்டு உரிமையாள அம்மா. இறுதியில், ஒரு நாள் வீட்டு உரிமையாள அம்மாவின் மகள் பிரியாவை, ஒரு கும்பல் கடத்திச் செல்கிறது. அதையறிந்த ராஜலட்சுமி வேடம் தரித்த ராஜா, அப்பெண்ணை மீட்டு கொண்டு வருகிறார். இறுதில் வீட்டு உரிமையாள அம்மாவுக்கு, அனைத்து உண்மைகளும் தெரிகிறது. ஆள் மாறாட்டம் செய்த ராஜாவை, தனது மகளை ரவுடிக் கும்பலிடம் மீட்டதற்காக மன்னிக்கிறார், வீட்டு உரிமையாள அம்மா. இறுதியில் காதல் ஜோடி இணைகிறது.
இப்படத்தில் பிரசாந்த், ராஜா என்கிற ராஜலட்சுமி கேரக்டரில் நடித்து இருந்தார். சுனேகா பிரியாவாகவும், வடிவேலு மருதுவாகவும், சார்லி சுதாகராகவும், சின்னி ஜெயந்த் ராகவாவாகவும் நடித்திருந்தார். மேலும் வீட்டு உரிமையாள அம்மாவாக கே.ஆர்.விஜயா நடித்து இருந்தார். இப்படத்துக்கு இசையினை இளையராஜா அமைத்து இருந்தார். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருந்தன.
தற்போது டிவியில் போட்டாலும் ரசிக்கும்படியான படமாக இருக்கும் இந்த ஆணழகன் திரைப்படம், இன்றுடன் ரிலீஸாகி 29ஆண்டுகளைத் தொட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்