தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rudhraiya: அவள் அப்படித்தான் என்னும் பொக்கிஷம் தந்த இயக்குநர் சி.ருத்ரய்யாவின் நினைவு நாள்

Rudhraiya: அவள் அப்படித்தான் என்னும் பொக்கிஷம் தந்த இயக்குநர் சி.ருத்ரய்யாவின் நினைவு நாள்

Marimuthu M HT Tamil

Nov 18, 2023, 05:41 AM IST

google News
இயக்குநர் சி.ருத்ரய்யாவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இயக்குநர் சி.ருத்ரய்யாவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இயக்குநர் சி.ருத்ரய்யாவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.ருத்ரய்யாவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரின் திரை சாதனைகள் குறித்துப் பார்ப்போம். 

யார் இந்த சி.ருத்ரய்யா?: இயக்குநர் சி. ருத்ரய்யா 1947ஆம் வருடம், ஜூலை 25ஆம் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின், சென்னை தரமணியிலுள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை - இயக்கம் குறித்த பட்டயப்படிப்பினை முடித்தவர்.

தனது வாழ்நாளில் இரண்டே இரண்டு படங்களைச் செய்திருந்தாலும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய 10 இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார், சி. ருத்ரய்யா. அதற்கு முக்கியக் காரணம் அவர் இயக்கிய 'அவள் அப்படித்தான்’ என்னும் திரைப்படம் தான். 

தமிழ் சினிமாவில் பெண்ணின் உளவியல் சார்ந்த பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிய படம், அவள் அப்படித்தான். இப்படத்தை வெறும் 20 நாட்களில் மிகக் குறைவான வசதிகொண்ட ஆரி2பி கேமராவில் 27 ரீல்களுக்குள் எடுத்து கறுப்பு வெள்ளையாக எடுத்து முடித்தார், இயக்குநர் ருத்ரய்யா. ஏனெனில், அவர் தான் தனது முதல் படத்தின் புரொடியூசரும்கூட. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள், கையில் இருந்து கேமராவை இயக்கி படம்பிடிக்கப்பட்டன.

அவள் அப்படித்தான் படம் 1978ஆம் ஆண்டில் அக்டோபர் 30ல் வெளியானபின், ருத்ரய்யா இயக்கியபடம் கிராமத்து அத்தியாயம். இந்தப்படம் 1980ல் வெளியானது. ஆனால், இந்த இரண்டு படங்களுமே பொருளாதார ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனாலும், அவள் அப்படித்தான் திரைப்படம் ஆகச்சிறந்த படமாக திரைவிமர்சகர்கள் கொண்டாடப்பட்டது. 

அவள் அப்படித்தான் மூலம் சி.ருத்ரய்யா சொன்னது என்ன? விளம்பர நிறுவனம் நடத்தும் தியாகு, ஆவணப்படங்களை இயக்கும் தனது நண்பன் அருணை, தனது அலுவலகப்பெண்மணி மஞ்சுவிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறான். மேலும், அருணிற்கு ஆவணப்படத்தை எடுக்க உதவிகரமாக இருக்கவேண்டும் என தியாகு சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துகொள்கிறாள், மஞ்சு.

ஆரம்பத்தில் மிகவும் கடினமான பெண்ணாக இருக்கும் மஞ்சு, அருணுடன் ஏற்பட்ட நட்பில் தனது தாயின் திருமணத்தைத்தாண்டிய உறவினையும், தான் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதையும் சொல்கிறாள். இதனால் யாரிடமும் தான் ரஃப் டஃப் ஆக இருப்பதாகவும் கூறுகிறார். இதையெல்லாம் அறிந்த அருண், மஞ்சுவினை திருமணம் செய்ய புரோபோஸ் செய்கிறார். அது தோல்வியில் முடிவடைகிறது. பின், தன் வீட்டில் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார், அருண். அதன்பின் தன் காதலை உணரும் மஞ்சு மிகுந்த ஆற்றாமையுடன், திருமணம் முடிந்து சென்னை வரும் அருணை, ரயில் நிலையம் சென்று அழைத்து வருகிறார், மஞ்சு. பின், தனக்கான இடம் வந்தவுடன் இறங்கிவிடுகிறார். இதன்மூலம் அடுத்த வாழ்க்கையை வாழ அவள் தயாராகிவிட்டாள் என மறைமுகமாகப் புரியும் வகையில் எடுத்திருப்பார், இயக்குநர் ருத்ரய்யா.

இப்படத்தில் அருண் என்னும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், தியாகு என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தும், மஞ்சு என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியாவும் நடித்திருந்தனர். மஞ்சுவை பாலியல் சுரண்டலில் ஈடுபடும் மனோ கதாபாத்திரத்தில் சிவசந்திரன் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த ஸ்ரீபிரியாவின் நடிப்பிற்காக, தமிழக அரசின் சிறப்புப் பரிசினை வென்றார். மேலும் இப்படம் தமிழக அரசின் திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படத்திற்கான 2ஆம் பரிசை வென்றது. ஒளிப்பதிவுக்காகவும் இப்படம் பாராட்டப்பட்டது. 

பெண்கள் சொல்லத்தயங்கும் உளவியல் சிக்கலை, பெண்கள் சமூகத்தினால் எவ்வாறு பார்க்கப்படுகிறாள் என்னும் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பதிவுசெய்த ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தந்த இயக்குநர் ருத்ரய்யா, நவம்பர் 18,2014ஆம் ஆண்டு காலமானார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் நிலைத்து நிற்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி