Mohana Sundaram: ‘ஜோசப் விஜய் யாரு?’ வாரிசை கலாய்த்த ‘துணிவு’ மோகன சுந்தரம்!
Jan 02, 2023, 06:16 AM IST
Thunivu Mohana Sundaram Interview: ‘வாரிசு குடும்ப படம் என்பது அவர்கள் சொல்லி தான் தெரியும். நீங்க போய் பார்த்தா தான் அது குடும்ப படமா? சண்டை படமா? என்பது தெரியும். குடும்பத்தோடு பார்க்கிற படம் என்னவென்றால், நல்ல கதை அம்சம் கொண்ட எல்லா படமும் குடும்பத்தோடு பார்க்கும் படம் தான்’ -மோகனசுந்தரம்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், துணிவு படத்தில் நடித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, முதலில் அறிமுகம் செய்யப்பட்டது மோகனசுந்தரத்தின் கதாபாத்திரம் தான். சமீபத்தில் துணிவு படம் தொடர்பாக பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் மோகன சுந்தரம். அதில் வாரிசு படத்தை கடுமையாக விமர்சித்தார் அவர். இதோ அவரது அந்த பேட்டி:
வாரிசு குடும்ப படம் என்பது அவர்கள் சொல்லி தான் தெரியும். நீங்க போய் பார்த்தா தான் அது குடும்ப படமா? சண்டை படமா? என்பது தெரியும். குடும்பத்தோடு பார்க்கிற படம் என்னவென்றால், நல்ல கதை அம்சம் கொண்ட எல்லா படமும் குடும்பத்தோடு பார்க்கும் படம் தான்.
அப்படிப்பட்ட படம் தான் துணிவு. வாரிசு என்கிற பெயரில் என்ன இருக்கிறது? துணிவு என்று வைத்திருக்கிறோம் நாங்க! அதை விட என்ன வேண்டும்? வாரிசாக இருந்தால் வெற்றி என்கிறீர்கள் நீங்கள்; நாங்க என்ன சொல்கிறோம் என்றால் துணிவா இருந்தாலே வெற்றி என்கிறோம்.
அஜித் சார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்று படத்தை விளம்பரப்படுத்த வேண்டிய தேவை துணிவு படத்திற்கு இல்லை. வாரிசு படம் பற்றி வெளியே பாசிட்டிவ்வாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை; எனக்குத் தெரிந்து துணிவு படம் பற்றி தான் பாசிட்டிவ்வாக தெரிகிறது.
அதுக்கு முக்கிய காரணம், அதில் நான் நடித்திருக்கிறன். அதனால் முதல் நாள் முதல் ஷோ துணிவு பார்த்திடுவேன். ஒரு வாரம் கழித்து வேண்டுமானால் வாரிசு பார்க்கிறேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
வெற்றி இயக்குனர், வெற்றி ஹீரோ, பெரிய கம்பெனி, நிறைய செலவு பண்ணி துணிவு படத்தை எடுத்திருக்காங்க. ஒரு வித்தியாசமான கதை களம். கட்டாயம் துணிவு வெற்றி பெறும். அதை முதலில் பார்ப்பது தான் சரியானதாக இருக்கும்.
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டில் விஜய் பேசியதை நான் இன்னும் பார்க்கவில்லை. ஷூட்டிங் முடிந்ததுமே நான் பிஸியாகிவிட்டேன்,’’ என்று மோகனசுந்தரம் பேசினார்.
‘தனக்கு போட்டி ஜோசப் விஜய் தான்’ என்று விஜய் பேசியிருக்கிறாரே என்கிற கேள்வியை முன்வைத்து, ‘அது யாரு?’ என்று எதிர்கேள்வி கேட்டார் மோகன சுந்தரம். அதன் பின் பேச்சை தொடர்ந்த அவர்,
‘‘எனக்கு போட்டியாளர் நான் தான் என விஜய் சொல்கிறார். அது அவருடைய விஷன். 10 வருடத்திற்கு முன்னாள் நடித்தது, இப்போது நடிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. அனைத்து துறை பிரபலங்களையும் தேர்வு செய்து, படத்தில் உபயோகித்திருப்பது திறமையான விசயம்.
வினோத் சார் தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகப்படுத்தினார். ‘சார்… இவரு பட்டிமன்ற பேச்சாளர், எதிர் தரப்பு வாதிடுவோரை நக்கலா பேசுவார்’ சார் என்று அறிமுகம் செய்தார். அதையே அஜித்சார் பிடித்துக்கொண்டார். பேசும் போதெல்லாம், ‘சார்… பட்டிமன்றம் மாதிரி எதையாவது பேசிடப் போறீங்க’ என்று கலாய்ப்பார்.
அஜித் சார் மரியாதை கொடுப்பார் என்று பலரும் கூறியதை கேட்டு நான் யோசிப்பேன், இது உண்மை தானா என்று! உண்மையில் அவர் அப்படி தான். செட்டில் 50 பேர் இருந்தால், இவரே போய் எல்லாருக்கும் குட்மார்னிங் சொல்வார். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் சொல்வார். ஷூட் முடிந்து போகும் போதும் என்னிடம் கூட சொல்லிவிட்டு தான் கிளம்புவார். போகும் போது, ‘ஓய்வு எடுங்க, வீட்டுல பேசுங்க’ என்று சொல்லிவிட்டு தான் போவார்,’’
என்று அந்த பேட்டியில் மோகன சுந்தரம் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்