அமரன் கொடுத்த பிரமாண்ட வெற்றி.. உடன் வந்த வெற்றிமாறன்.. உறுதியான கூட்டணி; தனுஷ் உடன் இணையும் ராஜ்குமார் பெரியசாமி!
Nov 08, 2024, 02:20 PM IST
அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷூடன் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31 ம் தேதி வெளியான இந்தப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலில் 150 கோடியை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்தப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. ஆம், தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார். இந்தப்படத்தை பிரபல ஃபைனான்சியரும், தயாரிப்பாளருமான அன்புச்செழியன் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது. இந்த பூஜையில் இயக்குநர் வெற்றிமாறனும் பங்கேற்று இருக்கிறார்.
D55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில்.., "தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்" என்றார்.
வசூலில் கெத்து காட்டும் அமரன்
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 6 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 3.99 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 92.69 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இந்திய அளவில் பார்க்கும் போது படம் 8 நாட்களில் 114.51 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 180 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது. இதன் மூலம் வார நாட்களிலும் அமரன் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.
படத்திற்கான புரோமோஷன் நிகழ்வில், இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராஜ்குமார் பெரியசாமி பேசி இருந்தார்.
ஏன் சிவகார்த்திகேயன்?
அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.
இந்த படத்தை இயக்கும்போது உங்களுக்கு சவாலாக இருந்த விஷயங்கள் பற்றி அவர் பேசியதாவது, “இது ஒரு உண்மைக் கதை. இந்தக் கதையின் ஆரம்பமும் முடிவும் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கதையைப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சொல்வது, யதார்த்தத்தையும் புனைவையும் சமநிலைப்படுத்துவது, அசல் சம்பவத்தை மீண்டும் உருவாக்குவது ஒரு சவாலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், நான் அதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டேன். யதார்த்தம் உள்ள படங்களை நான் மிகவும் ரசிக்கிறேன்.”
ஆக்ஷன் காட்சிகள், காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சிகள் என அனைத்துமே சவாலானவை. நான் ஒவ்வொரு சண்டை பகுதியையும் தெளிவாக எழுதியிருந்தேன். ஒவ்வொரு ஷாட்டையும் காகிதத்தில் திட்டமிட்டிருந்தேன். அவை அனைத்தையும் திரையில் அடைவது மிகவும் சவாலானது” இவ்வாறு அவர் பேசினார்.
டாபிக்ஸ்