Anuradha Krishnamoorthy:குஷ்பு பாவம்.. பெரிய ஆப்பு வைக்க ஒருத்தி வருவா- அனுராதா!
Mar 12, 2023, 06:10 AM IST
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக பெண் ஒருவள் வருவார் என்று பிரபல பாடகியும் நடிகையுமான அனுராதா கிருஷ்ணாமூர்த்தி பேசி இருக்கிறார்
நடிகை குஷ்புவை பற்றி அறிமுகம் தேவை இல்லை. பல ஆண்டுகளாக இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.
அண்மையில் இவர் தான் சிறு வயதில் தன்னுடைய அப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதில், “ எனது அம்மாவிற்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை அமைந்தது. எங்களுக்கு மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவன் அமைந்தார். தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை தன்னுடைய பிறப்புரிமை போல் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு எட்டு வயதாகும் போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். அவருக்கு எதிராக துணிச்சலுடன் நான் பேசும் போது எனக்கு 15 வயது. ஒருவேளை நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. அதன் காரணமாகவே நான் பல ஆண்டுகள் அமைதி காத்து வந்தேன். இதை நான் கூறினால் எனது அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது? என்ற அச்சம் எனக்கு இருந்தது. எனக்கு 16 வயது கூட இருக்காது அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார்.” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் வாவ் தமிழா சேனலுக்கு பேட்டியளித்த பிரபல பாடகியும் நடிகையுமான அனுராதா குஷ்புக்கு நடந்தது குறித்தும், சினிமாவில் நடக்கும் பாலியல் சமாச்சாரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ ஆண் பெண் இடையேயான பிரச்சினைகள் எவ்வளவு காலத்திற்கு தொடரும்; எங்கேயோ ஒரு இடத்தில் நிச்சயமாக அது முட்டி நிற்கும். இதில் நான் ஆண்களையும் சேர்த்தே சொல்கிறேன்.
இப்போது ஆண்கள் சில பெண்களிடம் அவள் வெளியே சொல்ல மாட்டாள் என்று அத்துமீறுகின்றனர். ஆனால் எவளோ ஒருத்தி பெரிய ஆப்பாக வைப்பாள். இன்னொன்று இந்த காலகட்டத்தை யார் கொண்டு வந்தார்; நாம்தானே கொண்டு வந்தோம் அப்படியானால் நாம் தான் அதை சரி செய்ய வேண்டும்.” என்றார்.
மேலும் குஷ்புவுக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றி பேசிய அவர், “இது ஒரு ஜனநாயக நாடு. உங்களுக்கு கருத்து சுதந்திரம் என்பது இருக்கிறது. நடக்கும் போது சொல்லாமல் நீண்ட காலம் கழித்து சொல்வது என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு; அதில் எனக்கு எடுப்பதற்கென்று ஒன்றும் கிடையாது. ஆனால் அவர் சொன்னதைக் கேட்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. பாவம்.” என்றார்.
சினிமாவில் நடக்கக்கூடிய பாலியல் சமாச்சாரங்களை பற்றி பேசிய அவர், “ மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை; எனக்கு நடந்ததை பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்; என்னிடமே பல பேர் சில நடிகர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்; ஆனால் உண்மையில் நான் அவர்களை அணுகும் பொழுது அவர்கள் என்னிடம் மிகவும் கௌரவமாக நடந்து கொண்டார்கள்.” என்றார்.
டாபிக்ஸ்