Rip Bhavatharani: ‘வீட்டில் ஒரே மன உளைச்சலா இருக்கும்’ வைரலாகும் பவதாரணி பேட்டி!
Jan 25, 2024, 10:57 PM IST
Bavatharani: ‘எங்க வீட்டில் டைனிங் டேபிள் கொஞ்சம் வித்தியாசமானது. அண்ணன், தம்பி எல்லாரும் அவர்கள் கம்போஸ் செய்ததை அங்கு வந்து தான் போடுவார்கள். அப்பாவும் கேட்பார்’
3 ஆண்டுகளுக்கு முன் கலாட்டா தமிழ் சேனலுக்கு பவதாரணி அளித்த முக்கியத்துவமான பேட்டி இது. அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவரின் நினைவுகளை இந்த பேட்டி உங்களுக்கு தரும்.
சின்ன வயதில் இருந்து அப்பா கம்போசிங் போவார். விடுமுறையில் நான், யுவன், அண்ணா எல்லாரும் அங்கே போவோம். ஒரு அறையில் அண்ணன், இன்னொரு ரூமில் யுவன் கம்போசிங் பண்ணுவார். நான், எல்லா அறைகளிலும் மாறி மாறி போய் பார்ப்பேன்.
அவர்களுக்கு முதலில் நான் தான் ட்ராக் சிங்கரா இருந்தேன். அதிகமாக அண்ணனுக்கு ட்ராக் பாடுவேன். வீட்டிலேயே இது நடைமுறையாகிவிட்டது. காலையில் எழுந்ததும், அம்மா சிடி போடுவார். அது பெரும்பாலும் மேற்கத்திய இசையாக இருக்கும். அப்படி தான் எங்களுக்கு விடியும். இசைக்கு மத்தியில் தான், நாங்கள் எங்களை வேலைகளை செய்து கொண்டிருப்போம்.
வீட்டில் ஒரே மிருதங்கம் சத்தம், இன்னொரு பக்கம் யுவன் பாடிட்டு இருப்பான். எல்லா சத்தமும் சேர்ந்து ஒரே மனஉளைச்சலா இருக்கும். ஒரு கட்டத்தில் அழும் நிலைக்கு வந்துவிடுவேன். அம்மா தான் என்னை தாங்கிக் கொள்வார்.
அப்பாவுக்கு நிறை பாடல் பாடியிருக்கேன். அப்போ எனக்கு எதுவும் பெருசா தெரியாது. அப்போ சொல்வதை பாடுவேன். பின்னால் தான், நான் என் குரலை புரிந்து கொண்டேன். ‘இப்படி பாடலாம், இதை மாற்றி பாடலாம்’ என்று தெரிந்து கொண்டேன். அப்பாவிடம் பாடும் போது, அவர் சொல்வதை செய்ய வேண்டுமே என்கிற பதட்டம் தான் இருக்கும்.
அப்பா எல்லா இடங்களைப் போலவே, வீட்டிலும் கறாரா தான் இருப்பார். எங்க வீட்டில் டைனிங் டேபிள் கொஞ்சம் வித்தியாசமானது. அண்ணன், தம்பி எல்லாரும் அவர்கள் கம்போஸ் செய்ததை அங்கு வந்து தான் போடுவார்கள். அப்பாவும் கேட்பார். சில பாடல் வரிகளை அப்பா மாற்ற கூறுவார். அது நெகட்டிவ்வா இருக்கு, அது நல்லதல்ல என்பார். நிறைய இன்புட் அப்பா தருவார். எங்கள் டைனிங் டேபிள், பெரும்பாலும் இசையாக தான் நிரம்பி இருக்கும்.
பெரும்பாலும் எங்க அப்பா, கார்த்திக் உடன் தான் இசை பற்றி ஆலோசிப்பார். என்னிடமோ, யுவனிடமோ இசை பற்றி பேசமாட்டார். அவருக்கு கார்த்தி அண்ணா தான், இசைக்கு. கோவா படத்தில் வரும் ஏழேழு தலைமுறைக்கு பாடல், எங்கள் குடும்ப பாடலாக மாறிவிட்டது. அதை அவர்கள் நான்கு பேர் தான் பாடுவதாக இருந்தது. நான் தான், எனக்கு இரண்டு லைனாவது கொடுத்தே ஆகணும் என்று அடம்பிடித்து பாடினேன்.
ஹரீஸ் சாருக்கு ஆத்தாடி ஆத்தாடி பாடல் பாடினேன். அது நல்ல அனுபவம். பாடகர் கார்த்தி இசையமைத்த அரவான் படத்தில், உன்னை கொல்லப் போறேன் பாடல் பாடினேன். அதுவும் அவர்கள் சொன்னபடி தான் பாடினேன். அப்பா இசையில் காற்றில் வரும் கீதமே பாடல் தான், எனக்கு திருப்தியான பாடல்.
டாபிக்ஸ்