HBD SV Ranga Rao: திரைத்துறையின் பொக்கிஷம் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாள் இன்று!
Jul 03, 2023, 04:30 AM IST
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைத்துறைக்கு முக்கிய பங்காற்றிய பழம்பெரும் நடிகர் ரங்காராவின் 105-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 3).
தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த படங்களில் கதாபாத்திரங்களாக வாழ்ந்த நடிகர்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்தவகையில் சினிமாத் துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் எஸ்.வி. ரங்காராவ். 1918 ஆம் ஆண்டு ஜூலை 3-ல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள நூஜ்வீத் என்ற கிராமத்தில் பிறந்தார். கண்ணியமான தோற்றம், அலட்டல் இல்லாத நடிப்பு, கணீர் குரல், அஜானுபாகுவான தோற்றம் என தமிழ் மற்றும் தெலுங்கில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார் ரங்காராவ்.
1946 ஆம் ஆண்டே திரைத்துறைக்குள் வந்துவிட்டார் இருந்தாலும் பெயர் சொல்லுமளவுக்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. இருப்பினும் 1951-ஆம் ஆண்டு வெளியான 'பாதாள பைரவி' திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் ரங்காராவுக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. பெரும்பாலும் ரங்காராவ் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வயதான தோற்றம் கொண்டவை. எனினும் அந்த கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பால் உயிரோட்டம் தந்தார் ரங்காராவ். 1952-ல் வெளிவந்த 'கல்யாணம் பண்ணிப் பார்' படத்தில் இவர் சாவித்ரியின் தந்தையாக 60 வயது முதியவராக நடித்தார். அப்போது அவரது வயது வெறும் 34. புராண படங்களில் ரங்காராவின் தோற்றம் அச்சு அசலாக பொருந்தி இருக்கும்.
ராவணன், துரியோதனன், பீஷ்மர், அக்பர், கீசகன், ஹிரண்ய கஷிபு, நரகாசுரன், கம்சன், உக்கிரசேனன், எமன், கடோத்கஜன் என அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் வித்யாசம் காண்பித்திருப்பார். 1957-ல் வெளியான 'மாயா பஜார்' படத்தில் கடோத்கஜனாக நடித்த ரங்காராவ், இரு மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகராக முத்திரை பதித்திருப்பார். ஒட்டுமொத்த கல்யாண வீட்டு சாப்பாட்டை ஒற்றை ஆளாக சாப்பிடும் அந்த, 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்' என்ற பாடல் மறக்க இயலாது.
30 ஆண்டு திரை வாழ்க்கையில் தமிழில் 53 படங்களும், தெலுங்கில் 109 படங்களும் என மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் ரங்காராவ். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றது. 'நர்த்தன சாலா' திரைப்படத்தில் அவர் நடித்த கீசகன் கதாபாத்திரத்துக்காக ஆப்ரிக்க ஆசிய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
தமிழில் கடைசியாக 1974-ல் நடித்த 'அன்புச் சகோதரர்கள்' படத்தில் 'முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக, அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக' என பாடி குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் சொக்க வைத்திருப்பார் ரங்காராவ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைத்துறைக்கு முக்கிய பங்காற்றிய ரங்காராவின் 105-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 3). மண்ணை விட்டு மறைந்தாலும் திரையில் மட்டுமல்ல இன்றளவும் பல ரசிகர்களின் நினைவில் வாழ்கிறார் எஸ்.வி.ரங்காராவ்.
டாபிக்ஸ்