HBD Ramya Krishnan : நீலாம்பரி.. மேகி.. ராஜமாதா என ஹிட் கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று!
Sep 15, 2023, 06:10 AM IST
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம். இந்தி என ஐந்து மொழிப் படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நாள் இன்று.
நடிகை ரம்யா கிருஷ்ணன் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் கிருஷ்ணன்-மாயா தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். பழம்பெரும் நடிகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ ராமசாமியின் சொந்த தங்கை மகள் தான் இந்த ரம்யா கிருஷ்ணன்.
1983-ல் வெளியான வெள்ளை மனசு திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். அதுவே அவர் நடித்த முதல் படம். 1985இல் வெளியான ரஜினிகாந்தின் படிக்காதவன், 1987-ல் கமல்ஹாசனின் பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் நாகேஷ் இயக்கிய பார்த்த ஞாபகம் இல்லையோ திரைப்படத்தில் இரட்டை வேட நாயகியாக நடித்தார்.
1991-ல் பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கதையின் நாயகனாக நடித்த சிகரம் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார். மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பாலசந்தர் இயக்கத்தில் வெளியான வானமே எல்லை என்ற வெற்றி படத்தில் நடித்திருந்தார். விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் நடனமாடிய ஆட்டமா தேரோட்டமா பாடலும் பட்டிதொட்டி எங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது.
1995 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மன் என்ற படத்தில் நிஜ அம்மனாகவே தோன்றி தனது சினிமா ரசிகர்களுக்கு தெய்வீக காட்சி கொடுத்தார். 1999-ல் வெளியான மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ரஜினியின் படையப்பா மூலம் தமிழில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு மறுவருகை புரிந்தார்.
அந்தப் படத்தில் தன் காதலை மறுத்த நாயகியை பழிவாங்கும் நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் ரம்யா என்பதை விட நீலம்பரி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்தது.
இதைத் தொடர்ந்து பாட்டாளி, பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்தார். 2002-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் பஞ்ச தந்திரம். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மேகி கதாபாத்திரம் நகைச்சுவையாகவும், வில்லத்தனமாகவும் நடித்து அசத்தி இருப்பார்.
2006 முதல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், 2008 முதல் சீரியல் நாயகியாகவும் நடித்தார். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களில அவ்வப்போது நடித்து வந்தார். 2016-ல் சுந்தர் சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் நடித்தார்.
2015-ல் வெளியான பாகுபலியில் ராஜமாதா சிவகாமி கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் திரைவாழ்வின் உச்சம் என்று சொல்லலாம். இந்தக் கதாபாத்திரமும் இதில் அவருடைய நடிப்பும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த திரைப்படம் மூலம் சர்வதேச அளவில் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார் ரம்யா கிருஷ்ணன்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் பாலியல் திரைப்படங்களில் நடிப்பவராக நடித்தார். ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட குயின் என்னும் இணையத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
1990-களில் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயம், சந்திரலேகா போன்ற படங்களில் கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ரம்யா கிருஷ்ணனின் இரண்டு படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சையின் மேல் காதல் மலர்ந்தது. ஏழு ஆண்டு காதலுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் ரம்யா கிருஷ்ணன் வம்சி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ரித்விக் என்கிற ஒரு மகனும் உள்ளார்.
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது, சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிப் படங்களில் நடித்து எந்த பிம்பத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நாயகி ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று. இவரின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து கூறுவோம். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்