Rajini and AR Rahman: திரையுலக ஜாம்பவான்களின் சந்திப்பை உருவாக்கிய ஐஸ்வர்யா
Dec 01, 2022, 10:19 AM IST
தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் சந்தித்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படம், லால் சலாம். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை கடந்த மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர். இவர்கள் இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்களாவர்.
கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சுமார் 20 நிமிடங்கள் நடிக்கவுள்ளார்.
ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன் முறையாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் . லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி, அடுத்தாண்டு படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையும், நடிகருமான ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றாக இருக்கும் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார்.
அதில், “இரண்டு அற்புதமான மனிதர்கள் சந்திக்கும் போது அதற்கு நீங்கள் தான் காரணம் என்றால் உண்மையில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிச்சயமாக அவர்கள் சிறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களை இணைந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்