தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Ott Spl: நேபாளம் சென்று தீவிரவாதியை Nia பிடித்து வந்த உண்மைக் கதையை தழுவி உருவான படம்!

HT OTT SPL: நேபாளம் சென்று தீவிரவாதியை NIA பிடித்து வந்த உண்மைக் கதையை தழுவி உருவான படம்!

Manigandan K T HT Tamil

Dec 26, 2023, 07:00 AM IST

google News
இது 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஹிஷோர் சாலமன் எழுதி இயக்கியுள்ளார். (NETFLIX)
இது 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஹிஷோர் சாலமன் எழுதி இயக்கியுள்ளார்.

இது 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஹிஷோர் சாலமன் எழுதி இயக்கியுள்ளார்.

2006இல் இருந்து 2013 வரை நமது நாட்டில் பல தொடர் தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அதில், லும்பினி பார்க், கோகுல் சாட், தில்சுக்நகர், ஐதராபாத், புனே ஜெர்மன் பேக்கரி ஆகியவையும் அடங்கும்.

இந்த இடங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 303 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதலுக்கு காரணமாக யாசின் பட்கல் நேபாளத்தில் இருப்பதாக இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த என்ஐஏவுக்கு தெரியவந்தது. 5 என்ஐஏ அதிகாரிகள் கொண்ட குழு, நேபாளத்திற்கு சென்று யாசின் பட்கலை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வந்தனர்.

2016ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று, ஐதராபாத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் யாசினிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் வைல்ட் டாக் (Wild Dog). இது 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஹிஷோர் சாலமன் எழுதி இயக்கியுள்ளார்.

மேட்டினி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இத்திரைப்படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, தியா மிர்சா, சயாமி கெர் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர்.

2 ஏப்ரல் 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

படத்தின் கதை 13 பிப்ரவரி 2010 அன்று புனேவில் உள்ள ஜான்ஸ் பேக்கரியில் வெடிகுண்டு வெடித்ததில் பல அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கிறது. அதன் உயர் அதிகாரியான விஜய் வர்மா தலைமையிலான டீமை இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கிறது.

அந்த விஜய் வர்மா கதாபாத்திரத்தில் தான் நாகார்ஜுனா நடித்துள்ளார். இவரை வைல்ட் டாக் என்றும் படத்தின் கதைப்படி அழைக்கிறார்கள். தீவிர விசாரணை நடத்தும் வைல்ட் டாக் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட பயங்கரவாதக் குழுவின் தலைவனை கண்டறிகின்றனர்.

ஆனால், பலவித உத்திகளை தாண்டி நிகழும் ஒரு தற்செயலான சம்பவத்தால் அந்த பயங்கரவாதியை பிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

இதற்கிடையே, அந்த பயங்கரவாதி தப்பி நேபாளம் சென்றுவிடுகிறான்.

அவனை ஆஃப் தி ரெக்கார்டில் 'வைல்ட் டாக்' ஆபரேஷனில் பிடித்து தாய்நாட்டுக்கு கொண்டு வருவது எப்படி என்பது தான் மீதிக் கதை.

உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகவும் கவனத்துடன் கையாண்டு இருக்கிறார்கள். என்ஐஏ சீனியர் அதிகாரியாக கச்சிதமாக பொருந்திப் போகிறார் நாகார்ஜுனா. அவருடைய உடல்மொழி, வசன உச்சரிப்பு, பழக்க வழக்கங்கள் அப்படியே என்ஐஏ அதிகாரியை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

நேபாளத்தில் பயங்கரவாதியை பிடித்து தாய்நாட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் இதயத்துடிப்பு பார்வையாளர்களுக்கு எகிறும்.

பரபரப்பான திரைக்கதையுடன் தேவையற்ற காட்சிகளை திணிக்காமல் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.

தமனின் பின்னணி இசை தடதடக்கிறது. ஆக்ஷன் படத்துக்கு தேவையைத் தாண்டி Shaneil Deo கேமிரா படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. நேபாளத்தின் அழகையும் அள்ளியிருக்கிறது.

நேபாளத்தில் NIA ஏஜெண்டாக வரும் நடிகை யார் என கூகுளில் தேட வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் Bilal Hossein மிரட்டலான நடிப்பை வழங்கி படத்துக்கு முதுகெலும்பாக தாங்கிப் பிடிக்கிறார். அதுல் குல்கர்னி வழக்கம் போல் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். உண்மைச் சம்பவங்களை தழுவியது தான் என்றாலும் கதாபாத்திரங்களின் பெயர்கள் திரைப்படத்திற்காக மாற்றப்பட்டுள்ளன.

தெலுங்கு தவிர, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸில் இப்படம் காணக் கிடைக்கிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி