தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: மோகன்லால் முதல் சோனு சூட் வரை.. பிறமாநில திரைப்பிரபலங்கள் விஜயகாந்துக்கு இரங்கல்

RIP Captain Vijayakanth: மோகன்லால் முதல் சோனு சூட் வரை.. பிறமாநில திரைப்பிரபலங்கள் விஜயகாந்துக்கு இரங்கல்

Marimuthu M HT Tamil

Dec 28, 2023, 08:51 PM IST

google News
RIP Captain: நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு பிற மொழி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ..
RIP Captain: நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு பிற மொழி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ..

RIP Captain: நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு பிற மொழி நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ..

Captain Vijayakanth Passed Away: தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலை(டிசம்பர் 28) காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிற மாநிலங்களைச் சார்ந்த திரைப்பிரபலங்கள் நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்தின் மறைவு குறித்து மலையாள நடிகர் மோகன்லால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயஞ்சலியைப் பகிர்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்தின் மறைவு குறித்து மலையாள நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பை திரையுலகினர், திரையுலக ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் நானும் ஆழமாக உணர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்தின் இழப்பு குறிப்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நமது புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர், வெகுஜன மக்களின் நாயகன், ஒரு பன்முக ஆளுமை மற்றும் ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதி. அவர் நேரடி தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர்.

எங்களின் அன்பான ‘கேப்டன்’ நம்மை விட்டு வெகு சீக்கிரத்தில் சென்றது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஏராளமான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் காலமான செய்தியறிந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரு உண்மையான அதிகார மையமாக இருந்தவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்கும்’எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயகாந்த் இயற்கை எய்திய செய்தியறிந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது இரங்கலைப் பதிவுசெய்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் விஜயகாந்தின் மறைவு குறித்து உருக்கமாகப் பதிவிட்டதாவது, ‘“கள்ளழகர்” என்னுடைய முதல் படம். லெஜண்ட் “விஜயகாந்த்” சார் கொடுத்த பரிசு அது. என்னுடைய இந்த ஸ்டில் அவர் கண்ணில்பட்டது. அடுத்த கொஞ்ச நேரத்தில் நான் அவருடன் படப்பிடிப்பில் இருந்தேன். என் கேரியருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் உங்களை மிஸ் செய்வேன். ஆழ்ந்த இரங்கல் கேப்டன்' எனத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை