Oscar 2024: 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு கெளரவம்! எதற்காக தெரியுமா?
Mar 11, 2024, 07:17 PM IST
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பிடித்த நாட்டு நாட்டு பாடல். தற்போது நடந்து முடிந்திருக்கும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்து கெளரவிக்கப்பட்டது.
96வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டில் வெளியான படங்கள், அதில் இடம்பிடித்த சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து 96வது ஆஸ்கர் விருதில் சிறந்த படத்துக்கான விருதை உலக முழுவதம் கொண்டாடப்பட்ட ஓபன்ஹெய்மர் படம் வென்றது. கிறஸ்டோபர் நோலன் இயக்கிய இந்த படத்துக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளன.
ஆர்ஆர்ஆர் படத்துக்கு கெளரவம்
எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்த இந்திய சினிமாவான ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கெளரவம் அளிக்கப்பட்டது.
சினிமாக்களில் ஸ்டண்ட் இயக்குநர்கள், கலைஞர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக சிறந்த ஸ்டண்ட்களை கொண்டிருக்கும் படங்களின் காட்சிகள் ஸ்கிரீன் செய்யப்பட்டன. இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் ஸ்டாண்ட் காட்சிகளும் சில விநாடிகள் தோன்றின.
இதன் பிறகு ஸ்டண்ட் காட்சிகளும், அதை உருவாக்குபவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவமும் தொகுப்பாளர்கள் ரயான் கோஸ்லிங், எமிலி பிளண்ட் ஆகியோரால் பாராட்டப்பட்டது.
சிறந்த ஸ்டண்ட் காட்சிகள் கொண்ட சினிமாக்களில் இந்திய சினிமாவான ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சிகளும் இடம்பிடித்திருந்தது பெருமைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான விடியோவை ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அதில், “மற்றொரு இனிமையான சர்பைரஸ். உலக சினிமாக்களில் சிறந்த சண்டை காட்சிகள் இடம்பிடித்திருக்கும் சினிமாக்களில் ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சியையும் சேர்த்திருப்பதில் மகிழ்ச்சி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் பாடல்
இந்த படத்தில் இடம்பிடித்திருக்கும் நாட்டு நாட்டு என்ற பாடல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இதன் மூலம் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய சினிமா என்ற புகழை பெற்றது. அத்துடன் இந்திய சினிமாவுக்கு பெருமை மிக்க தருணமாகவே இது அமைந்தது.
ஆர்ஆர்ஆர் படம்
பீரியட் ஆக்ஷன் திரைப்படமான ஆர்ஆர்ஆர் இந்திய சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்ட இரு நண்பர்களை பற்றிய கதையாக அமைந்திருந்தது. படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
படம் ரிலீஸின்போது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ரூ. 1,200 கோடிக்கு மேல் அள்ளியது.
படத்துக்கு எம்எம் கீரவானி இசையமைத்திருப்பார். இவரது இசையில் நாட்டு நாட்டு பாடல் உலக பேமஸ் ஆனது. இதனால் பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. தற்போது படத்தின் ஸ்டாண்ட் காட்சிகளும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த ஸ்டண்ட் காட்சிகளை கொண்ட படங்களில் இடம்பிடித்திருக்கிறது.
குறிப்பாக இந்த படத்தின் இடைவேளை காட்சி ஒட்டி வரும் ஸ்டண்ட், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஸ்டண்ட் பெரிதாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் படத்தில் வரும் பிற ஸ்டண்ட் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
எஸ்எஸ்ராஜமெளலி அடுத்த படம்
இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தனது அடுத்த படத்தை தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவை வைத்த உருவாக்க உள்ளாராம். இந்த படம் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9