HBD Actor NT Rama Rao: புகழ்பெற்ற நடிகர் என்.டி.ராமாராவ் பிறந்தநாள் ஸ்பெஷல்..சினிமா முதல் அரசியல் வரை சாதித்தது என்ன?
May 28, 2024, 07:22 PM IST
HBD NT Rama Rao: “தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ராமர், கிருஷ்ணர் போன்ற கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் நினைவுக்கு வருபவர் என்.டி.ராமாராவ் தான்.”
மறைந்த புகழ்பெற்ற நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் 101-வது பிறந்தநாள் (மே 28) இன்று கொண்டாடப்படுகிறது.
ஆந்திர மாநில வரலாற்றில் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்.டி.ராமா ராவ் என்ற பெயர். அவர் உயிருடன் இருந்தவரை அந்திர மக்களுக்கு வாழும் கடவுளாகவே விளங்கினார். செல்வந்தராக பிறந்து அனைத்தையும் இழந்து ஏழ்மையில் வாடி பின்னர் திரைத்துறையில் அகிலம் போற்றும் நாயகராகி செல்வந்தராக மறைந்தவர் என்.டி.ஆர்.
பிறப்பு
ஆந்திர மாநிலம் திம்மகுரு என்ற கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு மே 28 ம் தேதி செல்வசெழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார் நந்தமுரி தாரக ராமாராவ். பள்ளிப்படிப்பை விஜயவாடாவில் முடித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் ஆந்திர பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படிப்பில் அதிக ஆர்வம் காட்டினாலும் கலை ஆர்வம் தான் அவரை ஊக்கப்படுத்தியது. கல்லூரி காலங்களில் மேடை நாடகங்களில் ஒரு நட்சத்திரமாகவே மின்னத் தொடங்கினார்.
முதல் திரைப்படம்
பெரும் கனவுகளோடு வாழ்ந்த என்டிஆருக்கு 1947ஆம் ஆண்டு 'மனதேசம்' என்ற தெலுங்கு படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கிய திரைப்பயணம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு அடையாளத்தை உருவாக்கித் தந்தது. சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சில படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார்.
தமிழ் சினிமாவிலும் கோலோச்சிய என்.டி.ஆர்
தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ராமர், கிருஷ்ணர் போன்ற கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் நினைவுக்கு வருபவர் என்.டி.ராமாராவ் தான். தமிழ் திரையுலகின் பொக்கிஷமாக கருதப்படும் திரைப் பாடல்களில் ஒன்றான ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்.. உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா’ என்ற பாடலில், வயோதிகராக வந்து அசத்தி இருப்பார் ராமராவ். என்.டி.ஆரின் கலைச் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடத்தில் இவர் நடித்த ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), கர்ணன் (தமிழ், 1964) மற்றும் தான வீர சூர கர்ணன் (1977) உட்பட 17-க்கும் மேற்பட்ட படங்கள் இவரை தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் ஆக்கியது.
3 முறை முதலமைச்சர்
நடிப்பை தாண்டி அரசியலிலும் கால் பதித்த என்.டி.ஆர்., காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய ஆந்திர மாநிலத்தில், 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆட்சியை பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். 1983 ஆம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்திய என்.டி.ராமாராவ் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தினார்.
அரசியலில் சரித்திர சாதனை படைத்தார் என்.டி.ஆர்.
தமிழகத்தில் எப்படி எம்.ஜி.ஆர் போற்றப்படுகிறாரோ, அதேபோல் ஆந்திராவில் அப்படி தான் என்.டி.ஆர்., சினிமாவில் துவங்கி அரசியலில் சரித்திர சாதனை படைத்தார் என்.டி.ஆர். தலை முறைகளை கடந்தும் என்.டி.ஆர்., பெயரில் அரசியல் நடக்கிறது, திரைத்துறை இயங்குகிறது என்றால் அது தான் ஆந்திராவில் அவர் உருவாக்கிய மூன்றெழுத்து மந்திரம். சினிமா, அரசியல் என முத்திரை பதித்து மறைந்த என்.டி.ஆரின் 101வது பிறந்த தினம் இன்று..! இந்நாளில் அவரை நினைவு கூறுவது நமது கடைமை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்