Rama Narayanan: தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் ராம நாராயணன் நினைவு நாள் !
Jun 22, 2023, 05:45 AM IST
பல்வேறு மொழிகளில் சுமார் 125-க்கும் மேற்பட்ட படங்களை எடுத்து சாதனை புரிந்த இயக்குநர் ராம நாராயணனின் நினைவு நாள் இன்று (ஜூன் 22).
இயக்குநர் ராமநாரயணன் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இராமசாமி - மீனாட்சி ஆச்சி தம்பதிக்கு மகனாக பிறந்தார். சிறுவயது முதலே எழுத்தின் மீதும், சினிமாவின் மீதும் காதல் கொண்டவராக திகழ்ந்த ராம நாராயணன் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 1976-ல் காரைக்குடியில் இருந்து சென்னை வந்தார்.
ஆரம்பத்தில் தனது நண்பர் காஜாவுடன் சேர்ந்து ராம்-ரஹீம் என்ற புனைப் பெயரில் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த ராம நாரயணன் ‘சுமை’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகுக்கு இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'சிவப்பு மல்லி', 'இளஞ்ஜோடிகள்', 'சூரங்கோட்டை சிங்கக்குட்டி', 'மனைவி சொல்லே மந்திரம்' உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலாய் உள்பட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். குறிப்பாக நாய், குரங்கு, பாம்பு உள்ளிட்ட விலங்குகளை முக்கியக் கதாபாத்திரங்களாக வலம்வரச் செய்து படங்களை எடுத்தது இவரின் தனிப்பெரும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இவரின் இயக்கத்தில் வெளிவந்த 'ராஜ காளியம்மன்', 'அன்னை காளிகாம்பாள்', 'பாளையத்தம்மன்', 'மாயா', 'கோட்டை மாரியம்மன்' போன்ற பக்திப் படங்கள் இன்றும் சின்னத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் பல படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார் ராம நாராயணன். திரைப்படங்களைத் தாண்டி இயல் இசை நாடக மன்றத் தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் ராம நாராயணன் வகித்துள்ளார். கலைமாமணி உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்த ராம நாராயணன் 1989-ல் காரைக்குடி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். திரைப்படத்துறையில் சாதனை மன்னனாக வலம்வந்த ராம நாராயணன் உடல்நலக்குறைவால் கடந்த 2014 ஜூன் 22 ஆம் தேதி தன்னுடைய 65வது வயதில் காலமானார். மறைந்த ராம நாராயணின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..! இந்நாளில் ராம நாராயணன் குறித்து நினைவு கூர்வோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்