வேட்டையனுக்கு கருத்து சொல்லப் போனவருக்கு வேட்டு வைத்த நெட்டிசன்கள்.. கருத்து சொன்னது குத்தமா?
Oct 13, 2024, 01:00 PM IST
வேட்டையன் திரைப்படம், நீட் குறித்து தான் பேசிய கருத்துகளை பேசியுள்ளது என சீமான் கூறியதைத் தொடர்ந்து, அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஜெய் பீம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் த.செ. ஞானவேல். இவர் தனது முதல் படத்திலேயே பழங்குடி இன மக்கள் படும் துயர்கள் குறித்து பேசி தனது முத்திரையை பதித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் போன்ற முன்னணி நடிகர்கள் கூட்டணியில் வேட்டையன் படத்தை இயக்கி வெளியிட்டார். கல்வி மாஃபியா, நீட் தேர்வு, கோச்சிங் நிறுவனம் குறித்தும், என்கவுண்டர் குறித்தும் படம் அழுத்தமாக பேசியிருந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த நடிகர், இயக்குநர். அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்ட சீமான் பாரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நான் பேசிய கருத்துகளை திரையில் பார்க்கிறேன்
அந்த அறிக்கையில், திரைக்கலை என்பது பொழுதுபோக்குவதற்கு அல்ல, நல்ல பொழுதாய் ஆக்குவதற்கு என்பதையும் தாண்டி, நாம் வாழும் சமூகத்தில் படர்ந்துள்ள பழுதை நீக்குவதற்கு என்பதை இத்திரைப்படம் மூலம் நிறுவியுள்ளார்கள்.
ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அன்புத்தம்பி ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்றறிந்தபோதே சமூகத்திற்கு நற்கருத்தைப் போதிக்கும் திரைப்படமாக வேட்டையன் வெளிவரும் என்று தம்பி தமிழ்க்குமரனிடம் தெரிவித்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே சமூக அக்கறை கொண்ட ஆகச்சிறந்த திரைப்படமாக வேட்டையன் வெளிவந்துள்ளது. நாட்டில் கல்வியின் பெயரால் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்தும், போலி மோதல் கொலைகள் (Fake Encounter) மூலம் நீதியும், மனிதமும் ஒருசேர கொல்லப்படுவது குறித்தும் தொடர்ச்சியாகப் பல மேடைகளில் நான் பேசி வந்த கருத்துகளைத் திரையில் கண்டது மிகுந்த பெருமிதமளிக்கிறது.
பரவசப் படுத்திய ரஜினிகாந்த்
இந்தியப் பெருநாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்களைக் கொண்டு தம்பி ஞானவேல் தன்னுடைய நேர்த்தியான படைப்பின் மூலம் தான் சொல்ல நினைத்த கருத்தை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் தன்னுடைய அறிமுகக் காட்சி முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் வழக்கம்போலக் காண்போரை பரவசப்படுத்துகிறார். தம்முடைய அனுபவமிக்க நடிப்பின் மூலம் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அதியனாகப் படத்தினைத் தாங்கி நிற்கிறார்.
இனி இதுபோன்று நடிக்கலாம்
ரசிகர்களுக்கானதாக மட்டுமில்லாமல் மக்கள் மனதில் மிக ஆழமான கருத்தை விதைக்கும் கலைப்படைப்பாக வெளிவந்துள்ள வேட்டையன் திரைப்படத்தினைப் போன்றே தொடர்ச்சியாகச் சமூக அக்கறைகொண்ட படங்களில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க வேண்டுமென்ற விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நறுக்கு தெறித்தாற்போன்ற திரைப்படத்தின் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சமூகத்தின் அவலத்தை சாடுகிறது.
வாழ்த்து
ஆகச்சிறந்த படைப்பினைத் தந்துள்ள இயக்குநர் ஞானவேல் மற்றும் திரைப்படத்தில் பங்காற்றியுள்ள அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்! சமூக அக்கறை கொண்ட வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!" என கூறியிருந்தார்.
வசைபாடிய நெட்டிசன்கள்
இதைக் கண்ட நெட்டிசன்கள், வழக்கம் போல அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். எந்த பிரபலம் கருத்து தெரிவித்தாலும், எந்த பாடல் ஒரு சமூக கருத்தை முன்வைத்தாலும், எந்த பொது விஷயம் மக்களுக்காக நடத்தப்பட்டாலும், எந்த பிரபலம் இறந்தாலும், அவர்களை சீமான் தன்னுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்.
இப்போது, நீட் விவகாரம் குறித்து பேசிய படத்தை பாராட்டியுள்ளார். அதிலும், அவர் தொடர்ச்சியாகப் பல மேடைகளில் நான் பேசி வந்த கருத்துகளைத் திரையில் கண்டது மிகுந்த பெருமிதமளிக்கிறது எனக் குறிப்பிட்டு அந்த இடத்தில் ஸ்கோர் செய்யப் பார்க்கிறார் என தொடர் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.
டாபிக்ஸ்