55 Years Of Adimai Penn: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இரட்டை வேடத்தில் கலக்கிய 'அடிமைப் பெண்' ரிலீஸான நாள் இன்று!
May 01, 2024, 06:30 AM IST
55 Years Of Adimai Penn: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இரட்டை நடித்த அடிமைப் பெண் திரைப்படம் வெளியாகி இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன. இப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள், தத்ரூபமான சண்டை காட்சிகள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்தவகையில் நடிகராக பல பரிமாணங்களில் பெரும் வெற்றிகளை தமிழ் சினிமா வரலாற்றில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரது நடிப்பில் வெளியான 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது 'அடிமைப்பெண்'.
டிரெண்டை மாற்றிய எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோவிலேயே படமாக எடுக்கப்பட்டுவிடும். வெளிப்புற காட்சிகள் மிகக் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் அன்றைய காலகட்டத்தில் இருந்தது. தன் படங்களின் மீது ரசிகர்களின் எண்ணத்தை மாற்ற 'அடிமைப் பெண்' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஊட்டி என பல இடங்களில் படமாக்கினார் எம்.ஜி.ஆர்.
'அடிமைப் பெண்' கதை சுருக்கம்
மன்னரான தன் தந்தையை கொன்று கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை மகன் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள தன் தாயை மீட்கும் கதை தான் 'அடிமைப் பெண்'. இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கருணாநிதியின் மைத்துனர் சொர்ணம் வசனத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இப்படத்தை இயக்கினார். இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்
அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடலை முதன் முதலாக எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை ஜெயலலிதா பாடி இருந்தார். 'அடிமைப் பெண் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, எம்.ஜி.ஆருக்கு (புஷ் குல்லா) வெள்ளை குல்லா பரிசாக கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அதையே தனது அடையாளமாக மாற்றிக்கொண்டார் எம்.ஜி.ஆர். 'அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் வெள்ளை குல்லா அணிந்திருந்தார்.
மாபெரும் சாதனை படைத்த அடிமைப் பெண்
அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட 'அடிமைப் பெண்' படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படமாக அசத்தியது. சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமும் இதுதான். இரட்டைவேடத்தில் நடித்து பெரும் வெற்றி பெற்ற 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் வசூல் சாதனையை 'அடிமைப் பெண்' முறியடித்து புதிய சாதனை படைத்தது.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிப்பில் வெளியான 'அடிமைப் பெண்' 1969ஆம் ஆண்டு இதே மே 01ம் தேதி வெளியானது. 'அடிமைப் பெண்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்கள் உருண்டோடினாலும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தது ‘அடிமைப் பெண்’.
மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் என்றும் மக்களின் மனதை விட்டுப் பிரியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதே நிதர்சனம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்