Oscar: ஆஸ்கார் ரேஸ்... எதுதான் உண்மை... குழப்பிய நபரால் புலம்பும் ரசிகர்கள்... இதுதான் ஃபைனல்
Sep 25, 2024, 05:12 PM IST
Oscar: லபாதா லேடிஸ் திரைப்படம் இந்தியா சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் திரைப்படமும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக வந்த செய்தி சினிமா வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக படைப்பாளிகளின் மத்தியில் மிகப்பெரும் உயரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கார் விருது தான். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான படங்களை இறுதி செய்யும் பணியில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தீவிரமாக ஈடுபட்டது.
இதற்காக இந்திய அளவில், அதாவாது மொழி வாரியாக சிறந்து விளங்கிய திரைப்படங்களின் பட்டியலை சேகரித்து, அதில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான 29 படங்களின் பட்டியலை வெளியிட்டது.
பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்
அந்தப் பரிந்துரை பட்டியலில், தமிழ் மொழியில் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கிய `கொட்டுக்காளி’, நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய `மாஹாராஜா’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, பா இரஞ்சித் இயக்கிய `தங்கலான்’, பரி இளவழகன் இயக்கிய `ஜமா’, மாரி செல்வராஜ் இயக்கிய `வாழை’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.
தேர்வான படம்
இந்நிலையில், இந்த 29 படங்களிலிருந்து சிறந்த 5 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து. அந்தப் பட்டியலில் லபாதா லேடிஸ், தங்கலான், வாழை, உள்ளொழுக்கு, ஸ்ரீகாந்த் படத்தின் பெயர்கள் இடம்பெற்றன.
இந்த சமயத்தில் தான், இந்திய திரைப்பட கூட்டமைப்பினர், இந்த 5 திரைப்படங்களிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து, அதனை சிறந்த திரைப்படமாக கருதி இந்தியா சார்பில் விருதுக்கு பரிந்துரைப்பர். அப்படி, இந்திய திரைப்பட கூட்டமைப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட படம் தான் லபாதா லேடிஸ்.
சர்ச்சையை அதிகரித்த அறிவிப்பு
இந்திய திரைப்பட கூட்டமைப்பினர், இந்த அறிவிப்பு வெளியான நிலையில், திரைத்துறையில் பல்வேறு சலசலப்பு நிலவி வருகிறது. தமிழ் சினிமா வட்டாரத்தில், லபாதா லேடிஸ் நல்ல திரைப்படமாக இருந்தாலும், அது ஆஸ்காருக்கு செல்லும் அளவு சிறந்த திரைப்படம் இல்லை. அது சிறந்த இந்தி திரைப்படமா அல்லது இந்திய திரைப்படமா என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
குழப்பத்தை ஏற்படுத்திய வீர் சாவர்க்கர்
அதே சமயத்தில், இந்தி திரையுலகில் பிரச்சனை வேறு விதமாக சென்றது. லபாதா லேடிஸ் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் தனது தயாரிப்பில் வெளியான ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் திரைப்படமும் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்படத்தை தேர்ந்தெடுத்த இந்திய திரைப்பட கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் தலைவர் ரவி கோட்டகராவுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து, இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது லபாதா லேடிஸ் திரைப்படமா அல்லது ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் திரைப்படமா? இந்தியாவால் ஒரே நேரத்தில் 2 படங்களை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க முடியுமா? என்ற கேள்விகள் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்தத் தயாரிப்பாளர் இதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனக் குறிப்பிட்டதால், சினிமா வட்டாரத்தில் குழப்பங்கள் இன்னும் அதிகமாயின.
தெளிவுபடுத்திய இந்திய திரைப்பட கூட்டமைப்பு
இதையடுத்து இந்திய கூட்டமைப்பின் தலைவர் ரவி கோட்டகரா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தயாரிப்பாளர் சந்தீப் சிங்கின் பேச்சால், ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் திரைப்படமும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதாக பலரும் எண்ணி இருக்கலாம். சாவர்க்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சில தவறான தகவலை வழங்கியுள்ளார். அது குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட உள்ளேன். இந்தியாவிலிருந்து லபதா லேடீஸ் திரைப்படம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.
லபாதா லேடிஸ்
ஆமிர் கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய திரைப்படம் லபாதா லேடிஸ். இந்தியாவில் நடைபறும் திருமணத்தில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் குறித்து மிகவும் எளிதான வசனங்கள் மூலமும், சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பளீர் என கூறி பலரின் பாராட்டுகளை பெற்ற நிலையில், தற்போது, இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.