பெண்களுக்கு எதிரான வன்முறையை உரக்கச் சொல்லிய படங்கள்!
Mar 13, 2022, 12:30 PM IST
மிழ் சினிமாவில், பெண்களுக்கு எதிரான வன்முறையை மையமாக கொண்டு உருவான படங்களின் வரிசையைக் காண்போம்.
சினிமாவில் அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு கதை கலங்களைக் கொண்டு திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ஒரு சில பெரிய நடிகர்கள் கூட பல உண்மை கதைகளில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில், பெண்களுக்கு எதிரான வன்முறையை மையமாக கொண்டு உருவான படங்களின் வரிசையைக் காண்போம்.
அருவி
அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியான திரைப்படம், 'அருவி'. இந்தப் படம் பேசும் களம் சற்று மாறுபட்டது. தன்னிச்சையாக நடந்த ஒரு சம்பவத்தினால் பாதிக்கப்படும் ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார். அதற்காக அந்தப் பெண் கொடுக்கும் பதிலடி சமூகத்திற்கு சவுக்கடியாக விழிக்கிறது. இந்தப் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தெறி
தளபதி விஜய் நடிப்பில் வெளியான, 'தெறி' திரைப்படம் அட்லியின் இரண்டாவது படம். இத்திரைப்படம் பயணிக்கும் தொனி ஒரு அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட போலீஸ் என்றாலும் இந்த கதையின் பின்னணியில் ஐடியில் வேலை பார்த்த ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்படுகிறார். அதற்கு போலீசாகவும், பொது மக்களின் மனநிலையாக ஒரு குற்றவாளி எப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதை காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் விஜய்யின், சினிமா பயணத்தில் ஒரு முக்கிய படமாக இடம் பெற்றது.
திரௌபதி
இந்த வரிசையில் அடுத்ததாக இருக்கும் திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய, ' திரௌபதி' . என்ன தான் படத்தில் சொல்லப்பட்ட கருத்து முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும், ' போலித் திருமணங்கள் என்ற ஒரு முக்கிய புள்ளி இந்தப் படத்தை தாங்கியது என்றே சொல்லலாம்.
சென்னையில் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டுதான் இந்த திரைக்கதையை உருவாக்கினேன் என இயக்குநர் மோகன். ஜி கூறியிருந்தார்.
இறைவி
ஆண்களால் சூழப்பட்ட இந்த உலகத்தில் ஒரு பெண் என்னவாக நடத்தப்படுகிறாள், எப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இருக்கிறார், ஆண்களால் ஒரு பெண் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை ஆழமாகக் கூறிய இருக்கிறது, ' இறைவி ' திரைப்படம். இத்திரைப்படத்தில் பல தரப்பட்ட பெண்கள் இருப்பினும், ஆண்கள் ஒரே விதமாகத் தான் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருப்பார் சுப்புராஜ். தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய ஒரு சில படங்களில் இந்தப் படமும் ஒன்றாகும்.
அயோக்கியா
விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம், ' அயோக்கியா '. ஒரு நேர்மையில்லாத போலீஸ் அதிகாரி தன்னுடைய சுயநலத்திற்காகச் செய்த ஒரு விஷயம் எப்படி ஒரு பெண்ணை பாதிக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதியைத் தடுக்க அந்த போலீஸ் அதிகாரி போராடி குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் இந்த படத்தின் மையக் கதை. இந்த சமூகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் எப்படி தங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி சுலபமாக தப்பித்து விடுகிறார்கள், அவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திரைப்படம்.
எதற்கும் துணிந்தவன்
இந்தப் படங்களின் வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ' எதற்கும் துணிந்தவன்' படமும் இணைந்துள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு செய்தி எந்த அளவிற்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையும், அந்தக் குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் திரைப்படம். அப்படி பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் கண்ணபிரான் ஆக சூர்யா நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.