போதை பொருளுடன் கேங்ஸ்டர் கைது..அடிபட்ட பிசாசு பட நடிகை, மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் பெயர்! மலையாள சினிமா அடுத்த அதிர்ச்சி
Oct 08, 2024, 04:59 PM IST
கொச்சியில் போதை பொருளுடன் கேங்ஸ்டர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிசாசு பட நடிகை, மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் பெயர் அடிபட்டிருக்கும் நிலையில் போலீசார் அவர்களை விசாரணை வளையைத்துக்கு கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி புயலை கிளப்பியது. இதன் பின்னர் தற்போது மலையாள சினிமாவில் போதை பொருள் பயன்பாடு குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை போதை பொருள்களை பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் படப்புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாஸி, தமிழில் பிசாசு படத்தில் நடித்த பிராயாக மார்டின் ஆகியோரின் பெயர் அடிபட்டுள்ளது.
பிரபல ரவுடி கைது
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டடலில் ரவுடி கும்பல் தலைவரான ஓம்பிரகாஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் கூட்டாளி ஷிஹாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இருவரும் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரவுடிகளின் கைது பற்றி காவல்துறை தரப்பில் தெரிவித்தபோது, வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டு அதை பார்ட்டி மூலம் பல இடங்களில் விற்கவுள்ளதாகத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போது ஓம்பிரகாஷ், தான் தங்கியிருந்த ஹோட்டலில் பார்ட்டி நடத்தி போதைப்பொருள் விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஓம்பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் இரண்டு சினிமா நடிகர்கள் உட்பட மொத்தம் 20 பேர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று வந்துள்ளனர்.
ரிமாண்ட் அறிக்கையில் பிரயாகா மார்டின் பெயர்
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மலையாள நடிகர்கள் ஸ்ரீநாத் பாஸி, மற்றும் பிரயாகா மார்ட்டின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் இவர்கள் இருந்த அறையில் போதை பொருள் இருந்ததற்கான அடையாள காணப்பட்டிருப்பதால், போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
இதற்கிடையே இந்த பார்டியை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளரிடம் சிசிடிவி காட்சிகள் கோரியிருக்கும் போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.
பிரயாகா மார்டின் மறுப்பு
இந்த சம்பவம் தொடர்பாக பிராயாகா மார்டின் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரபல மலையாள ஊடகமான மனோரமா ஆன்லைன் தளத்துக்கு அளித்த பேட்டியில், "உண்மையை செல்வதென்றால் ஓம்பிரகாஷை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஒரு ஊடகவியலாளர் என்னை நேர்காணலுக்கு அணுகியபோதுதான், அவர் சொல்லிதான் அந்த பெயரையை நான் கேள்விப்பட்டேன்.
நண்பர்கள் சிலரைப் பார்க்க மருதுவில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். கோழிக்கோட்டில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக இரவில் வந்தே பாரத் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. அறையில் சிறிது நேரம் தூங்கி ஓய்வு எடுக்க வேண்டுமென நண்பர்களிடம் கேட்டேன்.
அங்கே மற்றொரு குழந்தையும் இருந்தது. நான் அந்த குழந்தையுடன் அறையில் இரண்டு மணி நேரம் தூங்கினேன். அந்த நேரத்தில் நான் அங்கு இருந்தது துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியுள்ளார்.
அத்துடன் தனது இன்ஸ்டா பதிவிலும், "ஹா ஹா ஹீ ஹீ" என எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும் பிரேம் ஒன்றை பகிர்ந்து, தன்னை இந்த விவகாரத்தில் சம்மந்தப்படுத்தியிருப்பதை கேலி செய்யும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.
பிரயாகா மார்டின் படங்கள்
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2012இல் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படம் மூலம் பிரபலமானவர் நடிகை பிராயாகா மார்டின். இந்த படத்துக்கு பின் தமிழில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் பிராயாகா மார்டின் கடைசியாக கடந்த ஆண்டில் வெளியான எந்தாடா சாஜி, டான்ஸ் பார்டி, புல்லட் டைரிஸ், ஜமாலிந்டே புஞ்சாரி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தமிழில் வெளியான நவரசா வெப்சீரிஸில் கிட்டார் கம்பி மேலே நின்று என செக்மெண்டில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில் பல்வேறு டிவி ஷோக்களிலும் இவர் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் செயல்பட்டுள்ளார்.