இன்றும், என்றும் மவுசு குறையாத ஒரு படம்.. முதலில் ஹீரோ வடிவேலு தானாம்.. 25 ஆண்டுகளை கடந்த துள்ளாத மனமும் துள்ளும்!
Jan 29, 2024, 05:45 AM IST
25 ஆண்டுகளை கடந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், இன்றும் துள்ளிக்கொண்டிருக்கிறது என்றால் உண்மையில் அதன் கதையும், திரைக்கதையும், வசனமும், பாடல்களும், நடிகர்களின் நடிப்பு தான் முக்கிய காரணம்.
துள்ளாத மனமும் துள்ளும் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது குட்டி, ருக்கு தான். அந்த படத்தில் விஜய் பெயர் குட்டி, சிம்ரன் பெயர் ருக்கு. 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானது இந்தப் படத்தில் தான். எழில் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தாமு உள்ளிட்ட பலரும் நடிக்க, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனலாம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும் 200 நாட்கள் வரை வெற்றிகரமாக ஒடியது. மேலும், விஜய்யின் மார்க்கெட்டும் வேற லெவலில் பிக் அப் ஆனது இப்படத்தின் மூலம் தான். இன்றோடு 25 ஆண்டுகளை கடக்கிறது துள்ளாத மனமும் துள்ளும். பாடலை மூச்சாக கொண்ட ஒரு இளைஞன். பாடலை உயிராக நேசிக்கும் ஒரு இளம் பெண். இருவரும் அருகே இருந்தாலும், அவர்களுக்குள் அறிமுகம் இல்லை. ஆனால், அவனின் பாடலை அவள் ரசிக்கிறாள்.
அறியாத அவன் குரலை அவளுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் அதே இளைஞன் உடனான சந்திப்பில், அவன் மீது வெறுப்பு வருகிறது. அதுவும் அவன் தான் அந்த பாடகன் என்பது தெரியாமலேயே. ஒரு கட்டத்தில் அந்த இளைஞனால் பார்வையிழக்கிறாள் ருக்கு. தன்னால் பார்வையிழந்த பெண்ணுக்கு பார்வை தர, தன் சிறுநீரகத்தை தானம் செய்து, சிறைக்குச் செல்லும் குட்டி, மீண்டும் திரும்பி வரும் போது, ருக்கு கலெக்டராக இருக்கிறாள். குட்டியை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.
தன் பார்வையை பறித்தவன் என்பதால், அவனை தாக்க உத்தரவிடுகிறாள். இறுதியில் அவன் தான் குட்டி என தெரிந்து, அழுது அணைத்து அவனை ஏற்கிறாள். இந்த க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்து, துள்ளாத மனம் இருந்தால், அது கட்டாயம் மனமாக இருக்காது. அந்த அளவிற்கு அனைவரையும் கட்டிப்போட்ட, காதல் கொள்ள வைத்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். வடிவேலுக்கு எழுதிய திரைக்கதை பின்னர் நடிகர் விக்னேஷிற்கு போய், அதன் பின் இறுதியாக விஜய்க்கு வந்து, தமிழ் சினிமாவை ஒரு கட்டத்திற்கு உயர்த்தி சென்ற திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.
அதாவது இந்தப் படத்தில் வடிவேலு தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எழில், இப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். ஆனால், ஹீரோயினுக்கு கண் தெரியாது என கூறியதும் பலரும் பின்வாங்கிவிட்டனர். அதன்பின், வடிவேலுவை சந்தித்து துள்ளாத மனமும் துள்ளும் கதையை கூறினேன், அவர் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார். அவரே தன்னை பல தயாரிப்பாளர்களிடம் கூட்டிச் சென்றார். அப்போது அவர்கள் கதை ஓக்கே ஆனால் வடிவேலு ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி. சௌத்ரி சார் தான் இந்த கதையை ஓக்கே சொன்னதோடு, விஜய்யிடமும் கால்ஷீட் வாங்கினார்”என தெரிவித்திருப்பார்.
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அப்படி ஒரு அருமையான காதல் காவியம். விஜய், சிம்ரன் இருவருக்கும் அவர்களின் சினிமா பயணத்தில் கல்வெட்டில் எழுதப்பட வேண்டிய படம். சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரிக்கு லாபத்தை அள்ளித் தந்த படம். தமிழில் கிடைத்த அசுர வெற்றியால், அண்டைய மாநிலங்களிலும் ரீமேக் ஆன திரைப்படம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கொண்டாடப்பட்டாலும், கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்.
25 ஆண்டுகளை கடந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், இன்றும் துள்ளிக்கொண்டிருக்கிறது என்றால் உண்மையில் அதன் கதையும், திரைக்கதையும், வசனமும், பாடல்களும், நடிகர்களின் நடிப்பு தான் முக்கிய காரணம். இன்றும், என்றும் மவுசு குறையாத ஒரு திரைப்படம் என்றால் அது துள்ளாத மனமும் துள்ளும் படம் தான். இதை யாராலும் மறுக்க முடியாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9