மனதை மயக்கும் மாயக்குரலோன்… ஹரிஹரன்… பிறந்த தினம் இன்று…
Apr 03, 2023, 07:00 AM IST
90களின் ஹிட் பாலடல்கள் பலவற்றை பாடியவர். வித்யாசமான குரலைக்கொண்டவர். எப்போதும் குட்டி போனிடெயில் போடும் அளவிற்கு முடி வைத்திருக்கும் ஸ்டைலிஷான நபர். தமிழ் மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடியவர். ஹரிஹரன் பிறந்த தினம் இன்று
அவள் வருவாளா… அவள் வருவாளா… என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா… அன்பே… அன்பே… கொல்லாதே…. என்னை தாலாட்ட வருவாளா…. சின்ன சின்னக்கிளியே… மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி வந்ததே…. குறுக்குச் சிறுத்தவளே… மழைத்துளி… மழைத்துளி மண்ணில் சங்கமம்…. சந்திரனை தொட்டது யார்…. நீ காற்று…. நான் மரம்… உன் பேர் சொல்ல ஆசைதான்…. துளித்துளியாய் கொட்டும் மலைத்துளியாய்… ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ….. வெண் மேகம் பெண்ணாக உருவானதோ…. என்று 90களை ஆண்ட பெரும்பாலான பாடல்கள் ஹரிஹரன் பாடியவைதான்.
ஹரிஹரன் அனந்தராமன் சுப்ரமணியன் 1955ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தவர். திரைப்பட பின்னணி பாடகர், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் அதிகம் பாடியவர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர். மலையாளம், கன்னடம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். அதிகமாக இந்தி, தெலுங்கு, தமிழில் பாடியவர். இருமுறை தேசிய விருதுகளைப்பெற்றவர். இசைத்துறையில் இவரின் சாதனைகளை பாராட்டும் வகையில், இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. தமிழில் இவரை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா படத்தில் இவர் பாடிய தமிழா… தமிழா… நாளை நம் நாடே… என்ற பாடலை முதலில் கேட்டபோது… நமது தேசப்பற்று ஊற்றெடுக்கும். அதுபோன்றதொரு காந்த குரல்தான் ஹரிஹரனுடையது. எந்த உணர்வுக்கு பாடுகிறாரோ, அந்த உணர்வை அப்படியே வெளிப்படுத்தி அதை கேட்பவர்களுக்கும் கடத்துவதுதான் ஹரிஹரனின் தனித்துவம். பாம்பே படத்தில் அவர் பாடிய உயிரே… உயிரே… வந்து என்னோடு கலந்துவிடு பாடல் காதலியை பிரிந்து வாழும் காதலனின் ஏக்கத்தை நமக்குள் கடத்திச்செல்லும். தொடர்ந்து அவர் பாடியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் நம் மனதை கவர்ந்தவைதான். கசல் பாடகர்களில் முன்னோடியாக இருந்தவர் ஹரிஹரன்.
அவருக்கும் ஏ.ஆர்,ரகுமானுக்கும் எப்போதும் ஒரு நல்ல புரிதல் இருக்கும் அதுகுறித்து அவர் கூறுகையில், “ஏ.ஆர்,ரகுமான், ஒரு பாடகராக என்னை மிக அழமாக புரிந்துகொண்ட நபர். எனது பாடும் திறன் அவருக்கு தெரியும். அவரது இசையால் என்னை எப்படி தூண்ட முடியும் என்று அவருக்கு தெரியும்“ என்று ஹரிஹரன் பெருமையாக கூறுகிறார். ஹை ராமா ஓர் வாரமா என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். ஏ.ஆர்.ரகுமானுக்கும், ஹரிஹரனுக்கும் இருக்கும் அந்த புரிதல் உங்களுக்கு புரியும். இசைக்குடும்பத்தின் வாரிசு என்பதால், இவரது பாடல்கள் இவரது குரலுக்கு இயற்கையிலே மயக்கும் தன்மை இருந்திருக்குமோ. இவரது தந்தை மணி, தாய் அலமேலு இருவருமே கர்நாடக இசை பாடக்ர்கள். இவரது தந்தை நிறைய கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியவர். இவருக்கு லலிதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இசைக்கலைஞர் ஹரிஹரனை, வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ அவரது பிறந்த நாளில் ஹெச்டி தமிழ் வாழ்த்துகிறது
டாபிக்ஸ்