Shanthi Master: ‘இப்போ வர்ற பாடலை கேட்டா வேதனையா இருக்கு’ சாந்தி மாஸ்டர் ஃபீல்!
Jan 06, 2023, 06:53 AM IST
Kattil Audio Function: ‘இப்போ, அதையும் தாண்டி பிற மொழி வரிகளை வைத்து பாடல்களை ஹிட் செய்கிறார்கள். அதையும் நாம் ரசிக்கிறோம்’ -சாந்தி மாஸ்டர்!
சீரியலில் பிள்ளையார் சுழி போட்டு சினிமாவில் நடன இயக்குனராக வலம் வரும் சாந்தி மாஸ்டர், சமீபத்திய பிக்பாஸ் சீசன் 6 தமிழில் போட்டியாளராகவும் சென்று, தமிழக மக்களால் நன்கு அறிமுகம் அடைந்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த கட்டில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சாந்தி மாஸ்டர் பேசியதாவது:
‘‘அந்த காலத்தில் படங்களில் பாடல்கள் பார்த்தால், காதலுக்கு ஒரு பாடல், அழுகைக்கு ஒரு பாடல், குழந்தைக்கு ஒரு பாடல் இருக்கும். அந்த பாடல் பார்க்கும் போதே நாம் படத்தோடு ஒன்றிவிடுவோம். அந்த பாடல்கள், படத்தின் கதையை சொல்லும். கதையோடு சேர்ந்து இருக்கும், கதையே சொல்லும் பாடல்களாக அது இருக்கும்.
அதுக்கு அப்புறம் கமர்ஷியல் ஆகிவிட்டது பாடல்கள். கண்ணை மூடினால் பாட்டு, ஹீரோ நடந்து வந்தா பாடல், தொட்டால் பாடல், க்ளைமாக்ஸ் சலிக்காமல் இருக்க பாட்டு, சண்டை போடும் போது பாடல் என பாடல்கள் வியாபாரமாக போய்விட்டது.
அதையெல்லாம் பார்த்து வருத்தப்பட்டது உண்டு. 13 வயதில் நான் இந்த துறைக்கு வந்தேன். 30 ஆண்டுகளாக சினிமாத்துறையில் பயணிக்கிறேன். நான் நடன இயக்குனராக மாறிய பின், சில பாடல்களுக்கு நடனம் இயக்கும் போது யோசிப்பேன், இந்த படத்திற்கும் பாடலுக்கும் சம்மந்தமே இல்லையே? ஹீரோ குணம் வேற மாதிரி இருக்கு, பாடல் வேறு மாதிரி இருக்கே என்று தோன்றும், அதை நினைத்து வருத்தப்பட்டதும் உண்டு.
சில பாடல்கள் தான், எனக்கு ரொம்ப பிடித்து, கதையோடு கலந்து இருக்கும். இப்போ, அதையும் தாண்டி பிற மொழி வரிகளை வைத்து பாடல்களை ஹிட் செய்கிறார்கள். அதையும் நாம் ரசிக்கிறோம். இப்போ உள்ள 2K ஹிட்ஸ் அதையும் ரசிக்கிறாங்க.
ஹீரோக்காகவும் படம் பார்க்கிறாங்க… கதைக்காகவும் படம் பார்க்குறாங்க! எனக்கும் ரொம்ப நம்பிக்கை இருக்கு, கட்டில் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். கதைக்காக இப்போ நிறைய படம் ஓடுது. அதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன், கட்டில் படம் ரொம்ப நல்ல படம்.
கட்டில் படத்தின் பாடல்கள், பாட்டு என்று சொல்ல முடியாது, காவியம் என்று சொல்லலாம். ஸ்ரீகாந்த் தேவாவா? வைரமுத்து சாரா? யார் அதற்கு காரணம் என தெரியாது. பாடல் பார்க்கும் போதே, கதைக்குள் நாம் இருப்போம். பாடல்களுக்கு ஏற்ப ரவி சார் அருமையான ஒளிப்பதிவு செய்துள்ளார்,’’
என்று சாந்தி மாஸ்டர் அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
டாபிக்ஸ்