Director Sasikumar: ‘தோள்ல இல்ல தலையில தூக்கி வைச்சு கொண்டாடினாங்க; ரொம்ப நன்றி; 15 வருட சுப்ரமணியபுரம் பற்றி சசிகுமார்!
Jul 04, 2023, 12:43 PM IST
இயக்குநர் சசிகுமார் சுப்ரமணியபுரம் திரைப்படம் 15 வருடங்கள் நிறைவு செய்ததை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்தத்திரைப்படம் கடந்த 2008ம் ஆண்டு ஜுலை 4 ம் தேதி வெளியானது. இந்தப்படத்தில் அவருடன் நடிகர்கள் ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சுவாதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. பாலிவுட் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், இயக்குநர் கெளதம் மேனன் உட்பட பல இயக்குநர்கள் இந்தத்திரைப்படத்தை பாராட்டி பேசியிருக்கின்றனர். இந்தப்படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் நிறைவு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் அந்தப்படம் குறித்து இயக்குநர் சசிகுமார் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய சசிகுமார், “ சுப்பிரமணியபுரம் திரைப்படம் வந்து 15 வருடம் ஆகிவிட்டது. 15 வருடம் சென்றதே தெரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்தது போல இருந்தது. ஆனால் அதற்குள் 15 வருடம் நிறைவாகிவிட்டது. 15 வருடமாக சுப்ரமணியபுரம் படத்தை நினைவு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மக்களின் ஆதரவு.
முதலில் அவர்களுக்கு என்னுடைய நன்றி. இந்த படம் வெளியான பொழுது மக்கள் இந்த படத்தை தோளில் வைத்து கொண்டாடவில்லை, தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். என்றைக்குமே நான் அதை மறக்க மாட்டேன். இவ்வளவு தூரம் சினிமாவில் நான் பயணப்பட்டதற்கு சுப்ரமணியபுரம் திரைப்படம் ஒரு முக்கியமான காரணம்.
எல்லோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் குறிப்பாக பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என்னுடைய நன்றி. அதேபோல இந்த படத்தில் பணியாற்றிய என்னுடைய நண்பர்கள் ஆன கஞ்சா கருப்பு, சமுத்திரகனி, விஜய் ஜேம்ஸ் வசந்தன் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 15 வருடத்தில் சினிமாவில் நல்லது கெட்டது என அனைத்தையும் நான் அனுபவித்து இருக்கிறேன். கத்துக்கிட்டேன் என்று சொல்வதை விட அனுபவித்து கடந்து வந்திருக்கிறேன் என்று சொல்லலாம். இது மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்” என்று பேசினார்.
சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த நண்பர் சசிகுமாருக்கு தன்னுடைய நன்றியினை தெரிவித்து இருக்கிறார்.
டாபிக்ஸ்