ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா! இன்று வரை தொடரும் தமிழர்களின் இந்தி புலமை
Mar 27, 2023, 12:02 PM IST
80ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டில் பிறந்த 2K கிட்ஸ்களும் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும் கல்ட் கிளாசிக் ரொமாண்டிக் காமெடி படமான ‘இன்று போய் நாளை வா’ வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகிறது.
1980 காலகட்டத்தில் தனது வித்தியாசமான பாணி கதை, திரைக்கதையின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநராக திகழ்ந்தார் கே. பாக்யராஜ். இயக்குநர் என்று இல்லாமல் தனது படங்களின் ஹீரோவாகவும் இவரே நடித்ததால் ரசிகர்களிடம் நன்கு தன்னை கனெக்ட் செய்து கொண்டார்.
பார்ப்பதற்கு எளிமையான தோற்றமும் பக்கத்து வீட்டு நபர் போல் இருக்கும் அவரது முக அமைப்பும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தனது ஒவ்வொரு படங்களிலும் தன் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு ஒரு வித அனுதாபத்தை ஏற்படுத்தி எளிதில் அவர்களின் மனதில் இடம்பிடிக்கும் வித்தையை கையாண்டு வந்தார்.
அந்த வகையில் பாக்யராஜ் படம் என்றாலே அநேகம் பேருக்கு நினைவுக்கு வருவது, ‘இன்று போய் நாளை வா’ என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் விதமாக அமைந்திருந்த இந்தப் படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக உள்ளது.
மூன்று இளைஞர்கள் ஒரே பெண்ணை காதலிக்க அதனால் ஏற்படும் முரண்பாடு காரணமாக, அவர்கள் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொருவரும் அவரவர் வழியில் அந்த பெண்ணை காதலில் விழ வைப்பதுதான் படத்தின் ஒன்லைன். இதை வைத்து படத்தின் ஆரம்ப காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை அனைவரையும் சிரிக்க வைத்து வயிற்றை புண்ணாக்கியிருப்பார் பாக்யராஜ்.
இந்த படம் மார்ச் 27, 1981இல் வெளியானது. சரியாக இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘உத்தரவின்றி உள்ளே வா’ படமும் இதே போல் ஒரு பெண்ணை பலரும் காதலிக்கும் கதையம்சத்தில் அமைந்திருக்கும். ஆனால் அந்த படத்தின் சாயல் கொஞ்சம்கூட இல்லாமல் உருவாக்கியதில் பாக்யராஜ் என்கிற ரைட்டர் அற்புதம் செய்திருப்பார்.
காமெடி என்பது திரைப்படங்களில் பல்வேறு வகைகளில் பிரதிபலிக்கப்படுகிறது. இதில் ஒருவர் படும் துன்பம், பார்வையாளனுக்கு இன்பமாக தெரியும் பாணியில் இந்த படத்தின் காட்சிகளை வைத்து படம் பார்ப்பவர்களை கலகலப்பூட்டியிருப்பார். இதனாலேயே இந்தப் படத்தில் இடம்பெற்ற காமெடிக்கள் போகிற போக்கில் சிரித்து விட்டு செல்லாமல், இன்றளவும் மனதில் நன்கு பதிந்து அனைவராலும் பேசப்படும் விதமாக உள்ளது.
குறிப்பாக படத்தில் இடம்பெறும் இந்தி ட்யூசன் காட்சி தமிழ் சினிமாவில் ஆக சிறந்த காட்சியாகவும், இன்றளவும் அனைவராலும் ரசிக்கும் தி பெஸ்ட் ட்ரோலாகவும் இருந்து வருகிறது. இந்தக் காட்சியில் பாட்டி தோலில் சாய்ந்தவாறு பாக்யராஜ் நண்பன் கதாபாத்திரத்தில் வரும் ராம்லி செய்யும் லூட்டி ஏ ஒன் ரகம்.
அத்துடன் இந்த சீனில் இடம்பெறும் ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ என்ற பிரபலமான வசனம் உருவாக்கத்தில் சுவாரஸ்ய பின்னணியும் உள்ளது. இதுகுறித்து பாக்யராஜ் ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.
"பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் ஒருவர் திடீரென மாணவர்களில் யாரையாவது அழைத்து ஒரு வார்த்தையை குறிப்பிட்டு ஸ்பெல்லிங் சொல்ல சொல்வார். அப்போது சிலர் ஒழுங்காக சொன்னாலும், பலரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட எழுத்து வரை சொல்லிவிட்டு திணறும்போது திரும்ப திரும்ப அவர்களிடம விடுபட்ட மீத எழுத்துக்களை சொல்லி வார்த்தையாக புரியவைப்பார். இதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தி டியூசன் காட்சி உருவாக்கியதாக தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் தான் படித்த காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, இந்தி வகுப்பு என்றாலே நகைப்புக்கு உரியதாக இருக்கும் என்பதால், அதை படத்திலும் வைக்க நினைத்து எடுக்கப்பட்ட இந்த காட்சி இவ்வளவு பெரிய அளவில் பிரபலமாகும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
இந்தி மொழி பற்றிய இந்த நகைச்சுவை காட்சியின் வசனம்தான் தமிழர்கள் பலரின் இந்தி புலமையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
இதேபோல் இப்போது வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு ரெபரன்ஸை தேடிப்பிடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருந்து வருவதோடு, இதை ஒரு வேலையாகவே செய்யும் கும்பலும் உள்ளது. அந்த வகையில் இன்று போய் நாளை வா படத்தில் ரெபரன்ஸ் பிரியர்களுக்கு தீணியாய் எக்கச்சக்க விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அதில் மிக முக்கியமான ஒன்றாக பிரியாணி ரெபரன்ஸ் ஒன்று கிளைமாக்ஸை ஒட்டிய காட்சியில் இடம்பிடித்திருக்கும். ராதிகாவை கடத்தி அரேபியா செல்ல நினைக்கும் வில்லன் கும்பல், காருக்கு பெட்ரோல் போடுவதற்கு செந்திலிடம் காசு கொடுக்க, ஆனால் அவர் அதை வைத்து வயிறுமுட்ட பிரியாணி சாப்பிட்டிருப்பார். கார் பாதி வழியிலேயே நின்ற பின்னர் செந்திலிடம் விசாரிக்கும்போது, அரேபியா பிரியாணி எப்படி இருக்குமோ, அதான் நம்மூர் பிரியாணியை கடைசியா ருசி பார்த்தேன் என அப்பாவியாய் அவர் சொல்வார். அந்த காலத்திலும் எவ்வளவு வெறித்தனமாக பிரியாணி வெறியர்கள் இந்திருக்கிறார்கள் என்பதற்கான ரெபரன்ஸாக, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் விடும் பிரியாணி லவ்வர்கள் சிலாகிக்கலாம்.
இந்த படத்தில் இவையெல்லாம் ஒரு சிறு துளிதான். மேற்கூறிய காட்சிகளை போன்று கல்லாப்பெட்டி சிங்காரம், காந்திமதி, சலவை துணிக்கடைகாரர் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த சின்ன ஸ்பேஸிலும் காமெடி தர்பாரே நிகழ்த்தியிருப்பார்கள்.
இளையராஜாவின் இசை ஒரு காமெடி படத்துக்கு வேண்டிய அனைத்து சந்தங்களையும் இனிதே செவிகளுக்கு விருந்தாக கொடுத்து ரசிக்க வைத்தது. மதன மோக சுந்தரி பாடல் படம் வெளியான காலகட்டத்தில் ஒவ்வொரு பட்டி தொட்டிகளிலும் ஒலிக்காத நாள்களே இல்லை.
ஒரு சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. அதற்கு முக்கிய காரணமாக ஒவ்வொரு முறை அந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதிது புதிதான விஷயங்கள் தென்படும் விதமாக அமைந்திருக்கும் கண்டென்ட் டீடெயில் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம் எவ்வித காரணமும் இல்லாமல் இருப்பதுதான். பார்த்து பழகிய அனைத்து விஷயங்களுமே மீண்டும் பார்க்கும்போது முதல் தடவை பார்த்த பரவசத்தையும், புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் எத்தனை தடவை பார்த்தாலும் ஏற்படுத்துவதுதான்.
அந்த வகையில், இன்று போய் நாளை வா, பார்ப்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப மேற்கூறிய இரண்டும் காரணங்களும் பொருந்திய படமாக இருப்பதுதான் கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற வைத்துள்ளது. ஆகவே இந்த படம் 80ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் 2K கிட்ஸ் வரை, 42 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்படுகிறது.
டாபிக்ஸ்