Kanaka: ‘வீட்டு சிறையில் கனகா.. சாப்பாட்டுக்கு என்ன செய்றாளே?’ கங்கை அமரன் ஷாக் பேட்டி!
Jun 17, 2023, 06:00 AM IST
Gangai Amaran: தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். அவளுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அவள் எண்ணம் எல்லாம் அது தான் நிறைந்திருக்கிறது. ஏதோ ஒரு தோல்வியை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள். அதனால் யாரும் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டாள்.
இயக்குனர், இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல துறைகளில் தேர்ந்தவர் கங்கை அமரன். அவரின் சூப்பர் ஹிட் படமான கரகாட்டக்காரன் படத்தில் 35ம் ஆண்டையொட்டி யூடியூப் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, நடிகை கனகாவின் தற்போதைய நிலை பற்றி ஷாக் தகவல்களை கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘கரகாட்டக்காரன் திரைப்படம் 35 ஆண்டுகளை கடந்து விட்டது. இன்றும் அந்த திரைப்படம் போட்டால் மாற்றாமல் பார்க்கிறார்கள். கலைஞானம், கலைமணி, காமெடி நடிகர் வீரப்பன் ஆகியோர் சேர்ந்து தான் வாழைப்பழம் காமெடியை எழுதினோம். மலையாளத்தில் அந்த காமெடி வரும். அதை நாங்கள் டெவலப் பண்ணோம்.
கரகாட்டக்காரன் தானாக அமைந்த படம். அது எனக்கும் மட்டும் சொந்தமில்லை. ஸ்டோரி டிஷ்கஷனில் சீன் அமைந்தது தான் எல்லாம் கூடி வந்தது. வழக்கமாக அண்ணன் முதல்நாள் படம் பார்த்துவிட்டு, மறுநாள் தான் ரீரிக்கார்டிங் பண்ணுவார். அன்று வேறுஒரு படத்திற்கு ரீரெக்கார்டிங் பண்ணுவதாக இருந்து, அது ரத்து ஆனதால், கரகாட்டக்காரனை கொண்டு வரச் சொல்லி ரீரெக்கார்டிங் போட்டார்.
கரகாட்டக்காரன் மட்டும் தான் கதை கேட்காமல், இசையமைத்து, பின்னணி போட்ட படம். ஓராண்டு படம் ஓடியது. அண்ணனை அசந்து போய்விட்டார். க்ளைமாக்ஸில் மாரியம்மா பாடலுக்கு கரகம் தூக்கியதும், தியேட்டரில் பலருக்கு சாமி ஆட்டம் வந்தது.
இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அர்ஜூனை வைத்து அண்ணனுக்கு ஜே படம் எடுத்தேன். அது பெரிய ஹிட் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அது தோல்வியடைந்தது. எந்த படம் வெற்றி தரும் என்பது நமக்கே தெரியாது.
என் வீட்டுக்கு பக்கத்து தெருவில் தான் கனகா வீடு இருந்தது. தேவிகா வாக்கிங் போனதைப் பார்த்து அவரை வீட்டுக்கு அழைத்தேன். அப்போது தான் கனகாவை பார்த்தேன். என் மனைவி தான் கனகாவை பார்த்து ரொம்ப அழகா இருக்கா, அவளைப் போடுங்க என்று கூறினாள். அதன் பிறகு தான் கனகாவை கேட்டு சம்மதிக்க வைத்தேன்.
கனகா இப்போது ஆதரவு இல்லாமல் இருப்பதாக செய்திகளைப் பார்த்தேன். இரண்டு மூன்று முறை போன் செய்தேன். அவள் அழைப்பை எடுக்கவில்லை. வாய்ஸ் மெஜேஜ் ஒன்றை அவளுக்கு அனுப்பினேன். அதில் ‘மாங்குயிலே பூங்குயிலே… பாடலை பாடி, நான் தான் அனுப்பியிருக்கிறேன், உடனே என்னை கூப்பிடு’ என்று வாய்ஸ் மெஜேஜ் அனுப்பினேன். அப்போதும் அவள் திருப்பி அழைக்கவில்லை.
தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். அவளுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அவள் எண்ணம் எல்லாம் அது தான் நிறைந்திருக்கிறது. ஏதோ ஒரு தோல்வியை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாள். அதனால் யாரும் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டாள். எனக்கு அவளை பார்க்க வேண்டும் என்றும் ஆசை. இந்த நேரத்தில் தான் ஆதரவு வேண்டும்.
இந்த பேட்டியை பார்த்தால் கனகா என்னை அழைக்க வேண்டும். மெயின் கேட்டை பூட்டிவிட்டாள், வீட்டு கதவையும் பூட்டிவிட்டாள். யாரும் உள்ளேயே போக முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. யார் சென்றாலும் அவளுக்கு தெரியாது, வீட்டு பெல் கூட அடிக்க முடியாது. பால்காரன் பாலை வைத்துச் சென்றால், அதை மட்டும் காலையில் எடுத்துக் கொள்கிறாள். மற்றபடி சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாள் என்பதே தெரியவில்லை. வீட்டிற்குள் எப்படி போவது என்றே தெரியவில்லை. எதுக்கு ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? பாவம். அவளை எப்படி சரிசெய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. பேசாமல், என்னை பார்சல் செய்து அவள் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். அப்படியாவது அவளை பார்த்துவிடலாம்,’’
என்று அந்த பேட்டியில் கங்கை அமரன் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்