Director cheran: கண் கலங்கிய அப்பா, அம்மா; குறித்த நொடியில் கை வந்த தேசிய விருது! - சேரன் வாழ்க்கையில் நடந்த ஆச்சரியம்!
Feb 04, 2024, 06:00 AM IST
துன்பமான காலகட்டங்களை நான் எனக்கான அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். அதிலிருந்து கற்றுக் கொள்கிறேன். ஆகையால் இறப்பை தவிர சோகமான காலகட்டம் என்ற ஒன்று யாருக்குமே கிடையாது.
பிரபல இயக்குநர் சேரன் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த மகிழ்ச்சியான தருணம் பற்றி அண்மையில் கலாட்டா சேனலில் பேசி இருந்தார்.
அவர் பேசும் போது, “என்னுடைய வாழ்க்கையில் மிக கஷ்டமான காலம் என்று எதையும் சொல்ல முடியாது. நான் எதிர்கொண்ட இன்ப, துன்பங்கள் என அனைத்தையுமே நான் சந்தோஷமாக அனுபவித்து இருக்கிறேன்.
துன்பமான காலகட்டங்களை நான் எனக்கான அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். அதிலிருந்து கற்றுக் கொள்கிறேன். ஆகையால் இறப்பை தவிர சோகமான காலகட்டம் என்ற ஒன்று யாருக்குமே கிடையாது.
காரணம் இறப்பு ஒன்று மட்டும்தான் மனதை அழுத்திக் கொண்டே இருக்கும். மற்ற எல்லா விஷயங்களையும், நம்முடைய முயற்சிகளால் நாம் கடந்து வந்து விட முடியும்.
மகிழ்ச்சியான தருணம் என்றால் நிறைய இருக்கிறது. எங்களுடைய ஒவ்வொரு படத்திற்கும் நாங்கள் போட்ட முயற்சியும் அந்த படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது. படத்தின் வெற்றியில் இருந்தும் தோல்வியிலிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய அம்மா அப்பாவை அழைத்துச் சென்று அவர்கள் முன்னால் நான் தேசிய விருது வாங்கியதை என்னால் மறக்க முடியாது. வெற்றிக்கொடிகட்டு படத்திற்காக எனக்கு தேசிய விருது அறிவித்தார்கள்.
அதனை வாங்குவதற்கு என்னுடைய அம்மா அப்பாவோடு அங்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் டிசம்பர் 12ம் தேதியாக அமைந்தது. டிசம்பர் 12ஆம் தேதிதான் நான் பிறந்திருந்தேன். சரியாக 7. 20 மணி துளிகளுக்கு நான் பிறந்தேன். அதே மணித்துளிகளில் எனக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது” என்று பேசினார்.
டாபிக்ஸ்