வேட்டையன் முதல் நாள் காட்சி..ஒரே திரையரங்கில் பார்த்து ரசித்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - என்ன நடந்தது?
Oct 10, 2024, 04:59 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படத்தை நடிகர் தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஒரே திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர். இதுதொடர்பான விடியோக்கள் வைரலாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படமான வேட்டையன் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த படத்தின் முதல் நாள் காட்சியை ரசிகர்களை போல் பல்வேறு பிரபலங்களும் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் ஒரே தியேட்டரில் வைத்து வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர்.
ஒரே திரையரங்கில் வேட்டையன் படம் பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா
இதுததொடர்பாக சன் நியூஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விடியோவில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி சில்வர் ஸ்கிரீனில் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வேட்டையன் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
இதில் ரஜினிகாந்த் மனைவி லதா, அவரது மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் உடன் இருந்தனர். ஐஸ்வர்யாவுடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க நடிகர் தனுஷும் வேட்டையன் படம் பார்ப்பதற்காக ரோகிணி சில்வர் ஸ்கீரினுக்கு தனியாக வந்துள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "வேட்டையன் டே, சூப்பர்ஸ்டார் தலைவர் தரிசனம்" என பதிவிட்டிருந்தார்.
தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் ஒரே திரையரங்கில் வேட்டையன் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இதையடுத்து கடந்த 2022இல் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், "18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக இணைத்து இருந்தோம். இந்தப் பயணத்தில் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு, என இருந்தது.
இன்று எங்களது பாதைகள் வெவ்வேறு என புரிந்துகொண்டு பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யா மற்றும் நான் ஒரு ஜோடியாகப் பிரிந்து தனிமனிதனாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தனர். இந்த மனு மீதான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், அக்டோபர் 19ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா
முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த லால் சலாம் படம் வெளியீட்டின் போது தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன் தற்போது விவாகரத்து வழக்கு விசாரணையின்போது இருவரும் ஆஜராகாமல் தவிர்த்து இருப்பது ஒரு வேளை இருவரும் சேர்ந்து வாழ உள்ளார்களோ என சமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனுஷ் புதிய படங்கள்
கோலிவுட் சினிமாவில் பிஸியான நடிகராக இருந்து வரும் தனுஷ், தற்போது இயக்குநராகவும் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் என்ற படத்தையும், இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வரும் தனுஷ், பான் இந்தியா படமாக உருவாகும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். குபேரா படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
டாபிக்ஸ்