Jani Master: தேசிய விருது வழங்கும் விழா..நிபந்தனையுடன் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின்
Oct 03, 2024, 04:59 PM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நிபந்தணையுடன் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய விருது வழங்கும் விழாவை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாக்களில் பல்வேறு ஹிட் பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக செயல்பட்ட ஜானி மாஸ்டர், 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் ரீதியாக் துன்புறுத்தியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் ஜானி மாஸ்டர், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின்
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இவரது ஜாமின் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 10 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று டெக்கான் குரோனிக்கிள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது வழங்கும் விழாவில் அவர் முன்னிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவருக்கு வழங்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தேசிய விருது வென்ற ஜானி மாஸ்டர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 70வது தேசிய விருதுகள் வென்ற படங்கள், கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் திருச்சிற்றம்பலம் படத்துக்காக நடனம் அமைத்த மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடன இயக்குநர் தேசிய விருதை வென்றிருந்தார்.
இதையடுத்து தேசிய விருது விழா வழங்கும் நிகழ்ச்சிகள் வரும் வாரம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில், இதில் ஜானி மாஸ்டர் பங்கேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
இதுதொடர்பாக தெலுங்கில் வெளியாகும் பிரபல பத்திரிகையான சித்ரா ஜோதியில், "என்னால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவள் ஒரு நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகமானார்.
மைனராக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் பொய் சொல்கிறார். அவருடைய திறமையை அடையாளம் கண்டு எனக்கு உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன்.
மனரீதியாக டார்ச்சர்
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்தார். பலமுறை மிரட்டலும் விடுத்தார்.
எனக்கு எதிராக சதி நடக்கிறது. யாரோ பின்னால் இருந்து எனக்கு எதிராக சதி வேலை செய்கிறார்கள். எனது வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள்" என விசாரணையின் போது அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா இயக்குநருக்கு தெரியும்
இந்த விவகாரம் தொடர்பாக புஷ்பா பட இயக்குநர் சுகுமாரிடம் தெரிவித்ததாகவும், அவரும் அந்த பெண்ணை அழைத்து பேசினார் எனவும் ஜானி மாஸ்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண்ணிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என ஜானி மாஸ்டர் கூறியுள்ளாராம்.
ஜானி மாஸ்டர் கைது
ஜானி மாஸ்டரின் உதவியாளர் புகாரை தொடர்ந்து அவர் மீது ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீசார் ஐபிசி சட்டப்பிரிவு 376. 506, 323 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவாவில் தலைமறைவாகி இருந்த ஜானி மாஸ்டரை கைது செய்து ஹைதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். தற்போது அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.