விடிய விடிய.. சாலைகளில் வெள்ளநீர்.. ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டை பதம் பார்த்த கனமழை.. என்ன இப்படி ஆயிப்போச்சு?
Oct 16, 2024, 12:33 PM IST
ரஜினிகாந்த் -ன் போயஸ் கார்டன் வீட்டை வெள்ள நீர் ரஜினிகாந்தின் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கிறது
சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகள், தெருக்கள், சாலைகள் என அனைத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ரஜினிகாந்தை பதம்பார்த்த மழை
சாமானிய மக்கள் சாதனையாளர்கள் அனைவரது இருப்பிடத்தையும் பதம்பார்த்த இந்த கனமழை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் வீட்டையும் விட்டுவைக்கவில்லை. ஆம், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி நாலாபுறமும் கனமழை பெய்ததின் காரணமாக அங்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வானிலை அறிவிப்பின் படி அக்டோபர் 16ம் தேதியான இன்றைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், வேலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நாளையும் மழை இருக்கிறது
அக்டோபர் 17 ஆம் தேதி நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 17ஆம் தேதி காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்றும், அதன் காரணமாக, தென் கடலோர மற்றும் ராயலசீமாவில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்து கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’ . இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 6 வது நாள் முடிந்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தத்திரைப்படத்தின் வசூல் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வேட்டையன் வசூல் எவ்வளவு
ஆம், நேற்றைய தினம் ‘வேட்டையன்’ திரைப்படம் 4.25 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான அன்றைய தினம், 31.7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 24 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் 26.75 கோடி வசூல் கிடைத்த நிலையில், நான்காம் நாளில் 22.3 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 5ம் நாளான நேற்று முன் தினம் வேட்டையன் திரைப்படம் 5.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
வேட்டையன் திரைப்படம் இதுவரை மொத்தமாக இந்திய அளவில், 114.60 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் நிலையில், உலகளவில் 264.31 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டாபிக்ஸ்