நாற்காலிகள் உடைப்பு - திருப்பூர் சுப்பிரமணியம் எச்சரிக்கை!
Apr 03, 2022, 05:27 PM IST
விஜய் ரசிகர்கள் சிலர் திரையரங்கில் இருந்த நாற்காலிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’ பீஸ்ட் ‘ . நெல்சன் தீலிப் குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ( ஏப்ரல் 2 ) வெளியானது . இதனை முன்னிட்டு பிரபல திரையரங்குகளில் படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்பினர் .
அப்போது விஜய் ரசிகர்கள் சிலர் திரையரங்கில் இருந்த நாற்காலிகளை உடைத்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதற்குத் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் , ” பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் ஒரு சில திரையரங்குகளில் இலவசமாக ரசிகர்களுக்காகத் திரையிடப்பட்டு இருந்தது. குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் இலவசமாக திரையிடப்பட்டது. அந்த திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தனர் .
இலவசமாகத் திரையிடப்படுவதால் 500 பேர்கள் தாங்கும் திரையரங்குகளில் 2000 பேர் வருவதால் திரையரங்கிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அது மட்டுமின்றி இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் , அதற்கு முழுப் பொறுப்பு திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்று கொள்ள வேண்டும் நிலை ஏற்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’ இணைந்த கைகள் ‘ என்ற திரைப்படம் வெளியான போது , கோவை மாவட்டத்தில் இருக்கும் திரையரங்குகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்ந்தது . அதில் சிக்கி இரண்டு ரசிகர்கள் உயிரிழந்தனர் .
அப்போது அந்த திரையரங்கின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது . அதேபோன்று இலவசமாக முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ட்ரெய்லர் வெளியிடும் போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் திரையரங்கத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது .
எனவே திரையரங்கு உரிமையாளர்கள் தயவு செய்து இதுபோன்ற ட்ரெய்லர் வெளியாகும் போது இலவசமாக திரையரங்குகளில் வெளியிடுவதை தவிர்த்து கொள்வது நல்லது . அதே போல் திரையரங்கம் வெளியே எல். இ. டி ஸ்க்ரீன் மூலமாகவும் டீஸர் , ட்ரெய்லர் வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் ” என தெரிவித்து உள்ளார்.
டாபிக்ஸ்