23 Years of Narasimha: வசனங்களால் மிரட்டிய விஜயகாந்த்.. ‘நரசிம்மா’ வெளியாவதற்கு முன்பே உயிரிழந்த இயக்குநர்!
Jul 13, 2024, 05:50 AM IST
'23 Years of Narasimha: சாதாரண மனுஷனுக்குத்தான் கரன்ட தொட்டா ஷாக் அடிக்கும்; நான் நரசிம்மா. என்னை தொட்டா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்' போன்ற வசனங்கள் அனல் பறக்கும் காட்சிகளாக அமைந்திருக்கும்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசனை தாண்டி தனக்கென்று தனி இடத்தை பிடித்து முன்னணி நட்சத்திரமாக கோலோச்சியவர் கேப்டன் விஜயகாந்த். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஊமை விழிகள்', வைதேகி காந்திருந்தாள்', 'கேப்டன் பிரபாகரன்', 'ரமணா', 'தவசி', 'வானத்தைப் போல', 'வல்லரசு' என பல திரைப்படங்கள் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் 2001ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'நரசிம்மா' படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
திருப்பதி சாமி இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிகை இஷா கோபிகர் நடித்திருந்தார். ரகுவரன், நாசர், ரஞ்சித், ஆனந்தராஜ், வடிவேலு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.அதிரடி காட்சிகள் நிறைந்த இந்தப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை ரம்பாவிடம் படக்குழு அனுகியது. ஆனால், கால்ஷீட் பிரச்னையால் ரம்பா இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதையடுத்து அந்த கதாபாத்திரம் இஷா கோபிகரிடம் சென்றது.
அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள்
'நரசிம்மா' படத்தில் தனக்கே உரிய ராணுவ வீரராக நடித்து கலக்கி இருப்பார் விஜயகாந்த். காஷ்மீர் பிரிவினைவாதத்திற்காகப் போராடும் தீவிரவாதிகள், தமிழகத்தில் முக்கியமானவர்களைக் கொலை செய்யவும், முக்கியக் கட்டிடங்களைத் தகர்க்கவும் திட்டமிடுகிறார்கள். அதைத் திறமையான அதிகாரியான நரசிம்மா (விஜயகாந்த்) எப்படி முறியடிக்கிறார் என்று கதை நகருகிறது. தனக்கே உரிய பஞ்ச் வசனங்களில் விஜயகாந்த் கலக்கி இருப்பார். 'சாதாரண மனுஷனுக்குத்தான் கரன்ட தொட்டா ஷாக் அடிக்கும்; நான் நரசிம்மா. என்னை தொட்டா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்' போன்ற வசனங்கள் அனல் பறக்கும் காட்சிகளாக அமைந்திருக்கும்.
மணிசர்மா அறிமுகம்
இந்தப்படத்தின் மூலம் தான் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் மணிசர்மா. இவரது இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய 'லாலா நந்தலாலா' பாடல் மிகவும் பிரபலமானது. ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி பாடிய 'எகிப்து ராணி' பாடல் பாடலாசிரியர் பா.விஜய்க்கு 100வது பாடலாக அமைந்தது.
கார் விபத்தில் மரணம் அடைந்த இயக்குநர்
இயக்குநர் திருப்பதி சாமி எடிட்டிங் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் துரதிஷ்டவசமாக இறந்தார். இதையடுத்து 'நரசிம்மா'வின் தயாரிப்பாளர்கள் பின்னர் இப்படத்தை அவருக்கு அர்ப்பணித்தனர்.
கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடித்த பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 'நரசிம்மா' பாக்ஸ் ஆபிஸில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கேப்டன் விஜயகாந்தின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாக இதுவும் மாறியது.
23 ஆண்டுகள் நிறைவு
2001 ஆம் ஆண்டு இதே ஜூலை 13-ஆம் நாள் இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 23 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஆனால் 22 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் விஜயகாந்தின் அதிரடி நடிப்புக்கு இந்தப்படமும் ஒரு மைல்கல்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்