50 வயதைக் கடந்தாலும் குறையாத மார்க்கெட்.. கனவு, காதல், கிசுகிசு, சூழ புகழ் உச்சத்திற்கு சென்ற நடிகை.. HBD ஐஸ்வர்யா ராய்
Nov 01, 2024, 07:11 AM IST
உலக அழகி, 50 வயதைக் கடந்திருந்தாலும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் நடிகை ஐஸ்லர்யா ராய் இன்று தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
20 நூற்றாண்டுகளைக் கடந்த இந்த உலகில், எத்தனையோ பேர் தங்கள் அழகாலும் வசீகரத்தாலும் மக்களைக் கவர்ந்திருக்கலாம். ஆனால், 21வது வயதில் தொடங்கிய ஒரு பயணத்தால் மக்களை ஈர்க்கத் தொடங்கிய ஒரு நபர் 25 ஆண்டுகளைக் கடந்தும் துளி அளவும் மாறாமல் அதே ஈர்ப்போடு இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.. அவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
நிறைவேறாத மருத்துவர் கனவு
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஐஸ்வர்யா ராய். துளுவைத் தாய்மொழியாக கொண்ட அவரது குடும்பம் சிறுவயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்தது. இதனால், பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என எல்லாமே அங்கேயே பயின்றார்.
படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு சிறந்த மருத்துவராக வரவேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். ஆனால், படக்கும் சமயத்தில் அவர், நடனத்தின் மீதும் இசையின் மீதும் கொண்ட ஈடுபாடு அவரை மாடலிங் பக்கம் திருப்பியது. இதையடுத்து, அவருக்கு சிறு சிறு விளம்பர வாய்ப்புகள் வந்த நிலையில், ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர் நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் அவரை சினிமா துறைக்கு வரும் முன்பே மக்களிடம் பிரபலமாக்கியது.
உலக அழகி
விளம்பரத் துறைக்கு வந்தாலும் அவர் மாடலிங் துறையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு தான் வந்திருப்பார். அதன் விளைவு அவர் 1994ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பார். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்று அவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினம் தொட்டு, பலர் உலக அழகி பட்டங்களை தட்டிச் சென்றிருப்பர். ஆனாலும், இன்றுவரை இந்திய மக்கள் மத்தியில் உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராயின் பெயரும் உடன் சேர்ந்து வந்து விடுகிறது. அந்த அளவுக்கு இவரது வெற்றி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பெரும்பாலான வீடுகளில் டிவியே இல்லாத காலகட்டத்தில் உலகளவில் சென்று ஒரு இந்தியப் பெண், அதுவும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே முதல்முறை. அதனால், இவரது வரலாற்றுச் சாதனையை மக்கள் பலரும் பேசி பேசி தங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துவிட்டனர்.
மணிரத்தினத்தின் விருப்பமான கதாநாயகி
இப்படி, உலக அளவில் பிரபலமான ஐஸ்வர்யா ராயை சினிமா பக்கம் இழுத்தது, பலரது ஆஸ்தான இயக்குநரான மணிரத்னம் தான். மறைந்த முதலமைச்சர்களான கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான உறவு குறித்து அவர் எடுத்த இருவர் திரைப்படத்தில் நடிக்க அவர் ஐஸ்வர்யா ராயை அழைத்திருப்பார். இந்தப் படத்தில் அவரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
கண்கள் பேசும் நடிகை
ஏற்கனவே, இவரது அழகால் ஈர்க்கப்பட்ட மக்கள், இந்தப் படத்திற்கு பிறகு நடிப்பாலும் ஈர்க்கப்பட்டனர். கண்களில் காந்தத்தை வைத்து, நடிப்பால் மக்களை தன் வசமாக்கிவிட்டார் ஐஸ்வர்யா ராய். இதன் விளைவு, தமிழ் மொழியில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் மெல்ல மெல்ல அவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து, அவர் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்
அழகும் புகழும் ஒருசேர இருந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு செயலையும் மக்கள் அடுத்தடுத்து கவனிக்கத் தொடங்கினர். இதனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானதாக மாறியது. பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறிய ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். இதனால், இவர்கள் இருவர் குறித்தும் பல கிசுகிசுக்கள் மக்கள் மத்தியில் உலாவத் தொடங்கின. இந்த உறவு விரைவிலேயே முறிவுக்கு வந்தது. இதையடுத்து, ஐஸ்வர்யா ராய் மருத்துவர் ஒருவருடன் சேர்த்து வைத்துப் பேசப்பட்டார். இப்படி சுற்றி சுற்றி வதந்திகள் வந்தாலும், அவர் சினிமாவில் நடிப்பதை மட்டும் கைவிடவில்லை.
அபிஷக் பச்சனுடன் திருமணம்
இப்படி, வாழ்வின் பல இன்னல்களை சந்தித்து அதிலிருந்து மீண்டு எழுந்த ஐஸ்வர்யா ராய், பின்னர், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்தார். இவர்களின் காதலும் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. காரணம் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை விட வயதில் சிறியவர் என்பதால். இருப்பினும், இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத இருவரும், தங்கள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர், திருமணத்திற்கு பின் பெண்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார்கள் என்ற மாயபிம்பத்தை தகர்த்து, முன்பை விட தீவிரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதே சமயத்தில் கணவரோடு இணைந்து குடும்ப வாழ்க்கையையும் இவர், சந்தோஷமாக கொண்டு சென்றார். பின் இவர்களுக்கு ஆராத்யா எனும் பெண் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் பட்ட துயரங்களை அமிதாப் பச்சன் நினைத்து நினைத்து மருமகளை பல இடங்களில் பெருமைப்படுத்தினார்.
26 வருடங்கள் நாயகி
மகள் பிறந்த பின், இவர் சினிமாவை விட்டு விலகி விடுவார் என பலரும் நினைத்தனர். ஆனால், அப்போதும் அவரை சினிமா கனவு விடவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து தான் வந்தார். அம்மாவான பிறகு பல நடிகைகளுக்கும் துணை கதாப்பாத்திரமே கிடைக்கும். ஆனால், ஐஸ்வர்யா ராய் தற்போது வரை கதாநாயகியாகவே நடித்து வருகிறார். தற்போது சினிமா துறைக்குள் நுழைந்து 26 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் அவர் இன்றுவரை கதாநாயகியாகவே வலம் வருகிறார். அதுமட்டுமின்றி, மக்களை இன்றளவும் அவர் தன்வசமாக்கி வைத்திருக்கிறார்.
பெருமை மிகு இந்தியர்
இப்படி சினிமாவில் வெள்ளி விழா கண்ட இவருக்கு, சினிமா துறையில் பல விருதுகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இவருக்கு, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரை கௌரவப்படுத்தும் விதமாக, பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
அதுமட்டுமின்றி, இவர் முதல் இந்தியர் எனும் பெருமையை பல இடங்களில் தக்க வைத்துள்ளார். உதாரணமாக, ஐஸ்வர்யா ராய் தான் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினரான முதல் இந்திய நடிகை, ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட முதல் இந்தியர், மேடம் துசாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் சிலை என பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர்.
அதுமட்டுமா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், நந்தினி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து, தற்போதுவரை தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்து வருகிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக அவர் தொடர்ந்து பல விருதுகளையும் பெற்று வருகிறார்.
தொடரும் வதந்திகள்
இப்படி சினிமாத் துறையில் ஏறு முகமாக சென்று கொண்டிருக்கும் இவரது வாழ்க்கை, சமீப காலமாக பல இன்னல்களை சந்தித்து வருகிறது. ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே ஏதோ பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் விவாகரத்து பெற உள்ளனர் என நாளுக்கு நாள் இவரைச் சுற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில், தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராய், இந்த ஆண்டு அவர் வாழ்க்கையின் துயர்களை மறந்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர்.
டாபிக்ஸ்