BiggBoss 7 Tamil: ‘ரெண்டே எபிசோடு.. ஒட்டுமொத்த இமேஜூம் க்ளோஸ்’ என்ன கமல் சார் இது?
Dec 11, 2023, 10:02 AM IST
BiggBoss Tamil: ‘என்னுடைய வீட்டில் ப்ராண்டிங் இருக்க கூடாது’ என்கிறார் கமல். திரும்பும் திசையெல்லாம் பல நிறுவனத்தின் பெயர்கள் இருக்கிறதே, அது என்ன ப்ராண்டிங்?
ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் இது போன்ற இன்னும் பிற கொதிப்பு நோய் இல்லாதவர்கள் அனைவருக்கும் நேற்று சிறிது நேரமாவது, அவை வந்து போயிருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனி, ஞாயிறு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலின் செயல்பாடு தான் அதற்கு காரணம்.
கடந்த வாரம் ஓட்டெடுப்பு நிறுத்தப்பட்டதால், வெளியேற்றம் இல்லாமல் போனது. வழக்கமாகவே மாயா, பூர்ணிமா தரப்பில் தான் பிரச்னைகள் இருக்கும். அதை கமல் சுட்டிக்காட்டுவார், பிறகு கடந்து போவார். இப்படி தான் ஒவ்வொரு வாரமும் இருந்திருக்கிறது.
இந்நிலையில் தான், தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு விவகாரத்தில் சனி, ஞாயிறு எபிசோடில் கமல் காட்டிய கறார், பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் ஒன்றும் கண்டிப்புக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. சரிக்கு சமமான குறைகள், அவர்கள் பக்கமும் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், இதற்கு முன் மற்றவர்களிடம் காட்டிய கறாரிலிருந்து பல மடங்கு அதிகமாகவே தினேஷ், அர்ச்சனா, விஷ்ணுவிடம் கறார் காட்டினார் கமல்.
இத்தனைக்கும் ரெட் கார்டு காட்டும் அளவிற்கு இழிச் செயல் செய்திருந்த நிக்சனை பேருக்கு சில நொடிகள் கண்டித்து விட்டு, மற்றவர்களை எந்த அளவிற்கு இறங்கி அடிக்க முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி செய்தார் கமல்.
பிரதீப்க்கு ரெட் கார்டு காட்டும் போது, புகார்தாரர்களை பேச வைத்து, குற்றம்சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு வழங்காமல் கமல் கடந்து போனார். இந்த முறை, புகார்தாரர் அர்ச்சனாவை பேசவிடாமல், குற்றம்சாட்டப்பட்ட நிக்சனை தான் மணிக்கணக்கில் பேச வைத்தார் கமல். இந்த ஒரு உதாரணம் போதும், கமலின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் காட்ட.
‘ப்ராண்டிங்’ கமல்!
ப்ராண்டிங் பற்றி கமல் பேசினார். அவர் பேசுவதற்காக தான் அந்த டாஃபிக்கை எடுத்தார் என்று கூட சொல்லலாம். பெரும்பாலும், பிக்பாஸ் நிகழ்வுகளை தன் அரசியல் ப்ராண்டிற்காக கையில் எடுப்பதை தான் கடந்த 7 சீசனாக கமல் செய்து கொண்டிருக்கிறார். அது ப்ராண்டிங் இல்லையா? ஒரு நிகழ்ச்சியை தன் கட்சிக்கான, தன் கொள்கைக்கான ப்ராண்டிங்காக கமல் எடுக்கலாமா? ஒவ்வொரு முறை முக்கிய டயலாக் பேசிவிட்டு, மக்களைப் பார்த்து ‘அவங்களும் தான்.. அவங்க தான்.. அவங்க மட்டும் தான்..’ என்பதைப் போன்ற செய்கைகள் இல்லாத எபிசோட் உண்டா?
சரி அதை கூட விடுங்க, ‘என்னுடைய வீட்டில் ப்ராண்டிங் இருக்க கூடாது’ என்கிறார் கமல். திரும்பும் திசையெல்லாம் பல நிறுவனத்தின் பெயர்கள் இருக்கிறதே, அது என்ன ப்ராண்டிங்? அது எதற்கான ப்ராண்டிங்? சமீபத்திய நிகழ்ச்சியில் தக்காளி சட்னி பற்றி கமல் பேசியிருந்தார். உண்மையில், அவர் தொகுத்து வழங்குவதைப் பார்க்கும் போது தான், ‘மத்தவங்களுக்கு வந்தா ரத்தம், உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.
இதில் எங்கே ‘மய்யம்’ இருக்கு?
சரி, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு எல்லாரும் தவறு செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் தவறும் செய்திருக்கிறார்கள். இரு எபிசோட் நிறைய அவர்களின் குறைகள் தான் பேசப்பட்டதே தவிர, ஆசைக்கு கூட விசித்ரா, மாயா, பூர்ணிமாவின் குறைகள் பேசப்படவில்லை. குறிப்பாக டாஸ்கில் நடந்த நிறைகுளைகளை பேசவே இல்லை. ‘இதற்கு முன் அவர்களை கேட்டிருக்கிறேன், இன்று இவர்களை கேட்கிறேன், நான் மய்யம்,’ என கமல் கூறலாம். மய்யம் என்பது பேலன்ஸ் செய்வது அல்ல, நடுநிலையாக பெர்ஃபாமன்ஸ் செய்வது. அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை.
திசை திருப்பும் முயற்சியா?
சமீபத்தில் சென்னை வெள்ளம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல் தெரிவித்த கருத்துக்கள், விமர்சனமாக எழுந்தது. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பொது தளத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் கமலை நேரடியாக விமர்சித்து வருகின்றனர். அதை மடை மாற்ற தான், கமல் இதை செய்கிறாரோ என்கிற சந்தேகமும் ஒரு சாராருக்கு வந்திருக்கிறது. காரணம், கமல் இப்போது அரசியல்வாதியும் கூட.
சாதாரண நிகழ்ச்சி தான், ஆனாலும் அதிலும் குறைந்தபட்ச நியாயம் இருக்க வேண்டும் என்பது தான், அதை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். அது, இந்த வார எபிசோடில் பறிபோயிருக்கிறது என்பது தான், பலரின் பதிவுகள் மூலம் அறியமுடிகிறது.