‘மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார்’ - இயக்குநர் பாலாஜி சக்திவேல்
May 17, 2023, 05:58 PM IST
தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாக மாற்ற கடினமாக இருக்கும் என்றார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது குட் நைட். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை பரிசளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், '' இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான... திறமையான கலைஞர்களை தேர்வு செய்த விசயத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்ற நுட்பமான ஆளுமைகளை கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் விநாயக்கை நான் மனதார வரவேற்கிறேன். குறட்டை என்னும் விஷயத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன். இவரை கண்டுபிடித்து இப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விநாயக்கை வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்வார் என்பது என்னுடைய நம்பிக்கை” என்றார்.
நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், '' இப்படத்திற்கு முதலில் விமர்சனம் செய்து மக்களிடம் குட் நைட் படத்தை பற்றிய அபிப்பிராயத்தை உருவாக்கியதற்காக பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக தூங்காது தற்போது வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளரை சந்தித்து, ஒரு முறை எங்களை எல்லாம் நம்பி படமெடுக்குறீர்களே... பயமில்லையா? என கேட்டேன். அதற்கு அவர்,‘ படத்தின் வெற்றி தோல்வியை கடந்து மனதிற்கு நிறைவை தரும் கதையை படமாக தயாரித்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி எனக்கு படப்பிடிப்பு தளத்திலேயே கிடைத்திருக்கிறது’ என்றார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியினை பதிவு செய்து கொள்கிறேன் “ என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், '' இது எங்களுடைய எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம். தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் 2014-ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. அந்த சூழலில் நான் வயதில் இளையவனாக இருந்ததால் தயாரிக்க முடியவில்லை. தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தார். அவர் இந்தப் படத்தின் கதையை கூறி தயாரிக்க இயலுமா? எனக் கேட்டபோது, இணைந்து தயாரிக்கலாம் என சம்மதித்தேன்.
நல்ல எண்ணம்..திறமையான கலைஞர்கள்.. ஆகியோருடன் இணைந்து தரமான படைப்பை வழங்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மே பத்தாம் தேதியன்று இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. அதன் பிறகு குட் நைட் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. சமூக வலைதளங்கள் மூலமாக இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது. பொதுவாக சிறிய பட்ஜெட்டில் உருவான தரமான படைப்புகளை ஊடகங்கள் தான் நேர்மையாக விமர்சித்து, அதனை வெற்றி பெறச் செய்யும் என சொல்வார்கள். இதனை இந்த படத்தின் வெற்றியின் மூலம் நான் நேரடியாக கற்றுக் கொண்டேன் “ என்றார்.
நடிகை கௌசல்யா நடராஜன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை நட்பு வட்டாரத்துடனும், உறவினர்களுடனும் என இரண்டு முறை திரையரங்கத்திற்கு சென்று பார்த்திருக்கிறேன். திரையரங்குகளில் இளைய தலைமுறையினர் அதிகளவில் வருகை தந்து படத்தை ரசிக்கின்றனர். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திரையரங்குகளில் சில காட்சிகளின் போது அவர்கள் வெடித்து சிரிப்பதை ரசித்து, அதை இயக்குநருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மணிகண்டனின் நடிப்பை பார்த்து ஆடிப் போனேன். ரமேஷ் திலக்கின் நடிப்பை பார்த்து அசந்து போனேன். ஒரு இயக்குநருக்கு மனைவியாக இந்த படத்தில் தான் முதன்முறையாக நடித்திருக்கிறேன். நான் வசந்த் போன்ற திறமை வாய்ந்த இயக்குநர்களுடன் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இளம் இயக்குநர் விநாயகக்குடன் பணியாற்றும்போது அவர் அணுகும் விதம் வித்தியாசமாக இருந்தது. மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இயல்பாக பணியாற்றியது மறக்க இயலாதது'' என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' குட் நைட் படத்தின் விமர்சனங்கள் அனைத்திலும் ஒரு நேர்மையும், உண்மைத் தன்மையும் இருந்தது. ஒரு படத்தை பற்றிய அபிப்பிராயம் தான் அப்படத்தின் வணிகத்தை பாதுகாக்கும். திரைப்படத்தைப் பற்றி படக் குழுவினர் என்னதான் உயர்வாக எடுத்துக் கூறினாலும், அதனை ஊடகங்கள் உறுதிப்படுத்தினால் தான் கவனம் பெறும். இதற்கு நட்சத்திர நடிகர்களும் விதிவிலக்கல்ல. திரைத்துறை கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஆரோக்கியமாக இயங்குகிறது என்றால் அது ஊடகங்களின் ஆதரவினால் தான். இதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பணியாற்றிய ‘ஜோக்கர்’ படத்தைப் பற்றிய ஊடகங்களின் விமர்சனங்கள் தான், அதனை சரியான உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இதன் மூலம் தரமான படைப்புகள் எப்போது வெளியானாலும்.. அதற்கு ஊடகங்களில் ஆதரவு உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முதலில் இப்படத்தின் திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு என்பதால் வாசித்தேன். இசையமைப்பாளருக்கு எதற்காக முழு திரைக்கதை வடிவத்தை வழங்க வேண்டும்? என சிலர் எண்ணுவர். ஆனால் வாசிப்பது முக்கியம் என கருதுகிறேன். ஏனெனில் திறமையை கற்றுக் கொள்ளலாம் அல்லது வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதனை எதற்காக பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் போது சில சிக்கல் வந்துவிடும். அதனால் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல், முதலில் ஒரு இசையமைப்பாளர் திரைக்கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தால் மட்டும்தான் இசையமைக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.
இப்படத்தின் திரைக்கதையை வாசிக்கும் முன்னர் குடும்ப படங்கள் என்றால் அதில் உள்ள நாயக மற்றும் எதிர் நாயக கதாபாத்திரங்கள் சற்று எல்லை கடந்ததாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் அந்த மரபு எல்லை உடைக்கப்பட்டு, குடும்பத்தில் உள்ள கதாபாத்திரங்கள் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சமுதாயத்தில் புழக்கத்தில் இருக்கும் சில சமூக சங்கிலிகளை எப்படி சில கதாபாத்திரங்கள் உடைத்து எறிகின்றன என்பதை கதாநாயகனின் அக்கா கதாபாத்திரம் பேசும் உரையாடலே சாட்சி.
நடிகை மீதா ரகுநாத் பேசுகையில், '' இப்படத்தின் தயாரிப்பாளர்கள், அனைத்து கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் சமமாக பாவித்து, நட்பாக மதித்து அனைத்து உதவிகளையும் செய்தனர். இது என்னை மகிழ்ச்சி அடைய செய்தது. இப்படத்திற்காக முதன் முறையாக இயக்குநர் என்னை சந்தித்தபோது, இந்த சந்திப்பு பத்து நிமிடம் தான் நீடிக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை நீடித்த போது, எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது.. இப்படத்தின் யதார்த்தமான திரைக்கதை தான். நான் உள்பட அனைத்து கலைஞர்களையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைத்தது. இந்தப் படத்தின் வலிமை என படத்தொகுப்பினை நான் கருதுகிறேன். இந்த படத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் மனிதநேயமிக்கவர். இதனை படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றும்போது உணர்ந்து கொண்டேன். இந்த திரைப்படத்திற்கு இசை தான் மிகப்பெரிய பக்கபலம். இதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசுகையில், '' இப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் நேர் நிலையான விமர்சனங்களுக்கு பிறகு தான் தீர்மானிக்கப்பட்டது. நல்ல திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பது மட்டும் மனநிறைவு உண்டாகாது. அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை எந்த வகையில் பெறுகிறது என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவான ‘சில்லு கருப்பட்டி’ படத்தை அதன் தரத்தை உணர்ந்து திரையரங்கில் வெளியிட்டு சாதித்தார் விநியோகஸ்தர் சக்திவேலன். அவர் இந்த திரைப்படத்திற்கும் பணியாற்றி வெற்றி பெற வைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்திவிட்டு, இந்த இடத்தில் இந்த இசை இடம் பெறும் என்பார். அதன் பிறகு இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மீதமுள்ள கதையை விவரிப்பார். பிறகு இசையை நிறுத்திவிட்டு, வேறொரு காட்சியில் இருந்து கதையை சொல்லத் தொடங்குவார். இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது.
முதல் பட இயக்குநர் மீதான அழுத்தத்தை அவர் எதிர்கொண்ட விதமும் எனக்கு பிடித்திருந்தது. அதே தருணத்தில் படத்தின் வெற்றிக்காக யார் எந்த கருத்தினை சொன்னாலும், அதில் உள்ள உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவரிடம் இருந்தது.. இயக்குநரிடம் இருக்கும் இந்த விசயங்கள் அவரை எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக உருவாக்கும்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்த கதை மீதும், மணிகண்டன் மீதும், இந்த பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார். எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாத போது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்திற்காக இயக்குநர் விநாயக்குடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் போதே இப்படத்தின் தொகுப்பாளரான பரத் விக்கிரமனின் பங்களிப்பு இருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
எனக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு அண்ணனாக ..வழிகாட்டியாக.. இருக்கிறாரோ.. அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார். அவரால்தான் இந்த படக் குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்'' என்றார்.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பேசுகையில், '' இப்படத்தின் வெற்றிக்காக பணியாற்றிய அனைவரது பெயரையும் இந்த மேடையில் குறிப்பிடுவது தான் வெற்றிக்கான அறம் என கருதுகிறேன். இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ் பி சக்திவேல், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிஷ், ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், பட தொகுப்பாளர் பரத் விக்கிரமன், கலை இயக்குநர் ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் மற்றும் பிரதீபா, நடிகர்கள் மணிகண்டன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, உமா, கௌசல்யா நடராஜன், அமுதா என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கதையை எழுதி முடித்த பிறகு அது முதலில் இயக்குநர் குழுவிற்கு தான் செல்லும். அந்த தருணத்திலிருந்து தொடங்கி, இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும் இந்த தருணம் வரை அவர்களது அயராத உழைப்பு தொடர்கிறது. இவர்களுக்குத்தான் என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து திரைப்படங்களும் கூட்டு முயற்சியில்தான் உருவாகிறது. தனிநபராக ஒரு திரைப்படத்தை உருவாக்கிட இயலாது. இதுதான் கலையின் அழகு என நான் நம்புகிறேன். மேலும் நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பால் உருவான திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் பணியை பத்திரிக்கையாளர்களான நீங்கள் தான் மேற்கொள்கிறீர்கள். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு பிறகு, நீங்கள் தெரிவித்த விமர்சனம்.. எழுதிய எழுத்துக்கள்.. ஆகியவை தான் இப்படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்தது. இதற்காக 'குட் நைட்' படக் குழு, உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
சிறிய முதலீட்டில் உருவான படம் இதற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கும்? எந்த தேதியில் வெளியாகும்? எந்த படங்களுடன் வெளியாகும்? என அச்சத்துடன் நாங்கள் இருந்தோம். எங்களின் அச்சத்தை அகற்றி, திரையரங்கத்தை வழங்கி, கை கொடுத்து மேலே உயர்த்திய விநியோகஸ்தர் சக்திவேலனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய வாழ்க்கையில் எல்லா காலகட்டத்திலும் முக்கியமான நபர்கள் அறிமுகமாவார்கள். அப்படி என் வாழ்க்கையில் அறிமுகமான நபர் தான்.. நண்பர்தான் யுவராஜ் கணேசன். இப்படத்தின் கதையை எழுதி மூன்றரை வருடங்கள் வரை பல நிறுவனங்களுக்கு சென்று கதையைச் சொன்னேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, நண்பர் யுவராஜிடம் ‘மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்ற திட்டமிட்டிருக்கிறேன்’ என சொன்னேன். உன் கதையை யாரும் தயாரிக்க முன்வரவில்லை என்றால், நான் தயாரிக்கிறேன் என நம்பிக்கை கொடுத்தார். அப்போது அவரிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. அதன் பிறகு அவருடன் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், அவரது தந்தை நாசரேத் பஸ்லியான் இணைந்தனர். இந்த மூவரும் இல்லை என்றால் இந்த படம் உருவாகி இருக்காது.
முதல் பட இயக்குநருக்கு பல்வேறு நெருக்கடிகளும், அழுத்தங்களும் இருக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு எந்தவித அழுத்தமோ... நெருக்கடியோ.. இல்லை. நான் எழுதிய கதையில் சிறிய அளவிற்கு கூட சமரசம் செய்யாமல், முழுமையான சுதந்திரத்துடன் படத்தினை உருவாக்கினேன். இதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்தப் படத்தின் வெற்றியால் துள்ளிக் குதித்து சந்தோஷத்தை கொண்டாடாமல் இயல்பாக இருப்பதற்கு இப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டனின் நட்பும், அவருடனான உரையாடலும் தான் காரணம். இப்படத்திற்காக இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தித்து அவரிடம் திரைக்கதையை வழங்கினேன். அவர் அதை வாசித்து விட்டு பாராட்டியது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்குரிய முன்னுரிமையும் முக்கியத்துவத்தையும் அளித்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். இப்படத்தின் திரைக்கதையை வாசிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்தது. ஆரோக்கியமான உரையாடலுக்காக நேரமும், வாய்ப்பும் அளித்ததற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் ஜோதிடர் ஒருவர் பேசும் காட்சியில் முதலில் அவருக்கான பதிலை ரமேஷ் திலக் தான் பேசுவதாக அமைத்திருந்தேன். அப்போது அக்காவாக நடித்த நடிகை ரேச்சல், 'இப்போதும் பெண்களுக்காக ஆண்கள்தான் பரிந்து பேச வேண்டுமா?' என கேட்டார். அவருடைய பேச்சிலிருந்த வீரியம் புரிந்து உறைந்து போனேன். அதன் பிறகு மணிகண்டனிடம் விவாதித்து அக்கா பேசுவது போல் உரையாடலை மாற்றினோம். இந்த காட்சியினை திரையரங்கில் காணும் போது கிடைக்கும் கைத்தட்டல்களுக்காக.. நான் இந்த தருணத்தில் நடிகர் ரேச்சலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
டாபிக்ஸ்