HT Exclusive: “ ‘தேவர் மகன்’ தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட உளவியல் தாக்குதல்” - இயக்குநர் கெளதம் ராஜ் எக்ஸ்க்ளூசிவ்!
Jul 24, 2023, 07:18 PM IST
ஒரு தேர்தல் வருகிறது என்றால் 234 தொகுதிகளில் 30, 35 தொகுதிகளில் மட்டும் தான் ஜாதியம் சாராமல் சீட்கள் தரப்படுகிறது. சென்னை ஊரின் பிரதிபலிப்பாக இருப்பதினாலும், இங்கு ஜாதியத்தின் வீரியம் குறைவாக இருப்பதினாலும், ஜாதியே இல்லை என்ற ஒரு பொய்யான பிம்பத்தை வைக்க முயல்கிறார்கள்.
அருள்நிதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் ‘ராட்சசி’ படப்புகழ் சை கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த மே 26ம் தேதி வெளியான திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.
தேவர் சமூகத்திற்கும், பட்டியலின சமூகத்திற்கும் இடையே நடத்தப்படும் ஜாதிய அரசியலை கை நீட்டி குறை சொல்ல முடியாத அளவில் காட்சிப்படுத்தி இருந்தார் கெளதம்.
படத்தின் பல காட்சிகள் மற்றும் வசனங்கள் சமூகத்திற்குத்தேவையான பாடமாக அமைந்திருந்தன. ஓடிடியிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு. இந்த நிலையில் இயக்குநர் கெளதம் ராஜை தொடர்பு கொண்டு பேசினேன்.
‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதே?
சினிமா என்பது ஒரு என்டர்டைன்மென்ட் மீடியம். அதில் கருத்து சொல்வது என்பது அதிகபிரசங்கித்தனம். இந்திய சினிமாவில் சமூக மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுதலில் தமிழ் சினிமாவிற்கு எப்போதுமே ஒரு தனித்த இடம் இருக்கிறது. ஆனால் புராண சினிமாக்களுக்கு தமிழில் இடம் இல்லாமலேயே போய்விட்டது.
ஒரு பாகுபலிக்கோ ஆதிபுருஷ்கோ ஆந்திராவில் இடம் இருக்கிறது. ஆனால் தமிழில் அது போன்ற ஒரு திரைப்படங்களை எடுப்பதற்கான ஐடியாலஜியே இல்லை.
அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த திரைப்படங்களின் வெற்றி. ஆம், அது இங்கு மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டராக இருந்து இருக்கிறது. அதனுடைய நீட்சி மிகப்பெரியது.
கடந்த பத்து வருடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை பேசக்கூடிய படங்கள் வருகின்றன. அதற்கு ஒரு ஆரம்பபுள்ளி இயக்குநர் பா ரஞ்சித். இதுவரை தமிழ் சினிமாவில் வில்லனாகவே பார்க்கப்பட்ட ‘கபாலி’ என்ற பெயரை ரஜினிக்கு வைத்து ஒட்டுமொத்த சினிமாவின் நிறத்தையே அவர் மாற்றி விட்டார். அவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைச் சொல்லக்கூடிய படங்களுக்கு ட்ரெண்ட் செட்டர்.
தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான ‘சின்ன கவுண்டர்’ ‘தேவர் மகன்’ ‘எஜமான்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ஜாதி பெருமையை மட்டுமே பேசியவை. அந்தத் திரைப்படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அந்த வெற்றி வெறும் பெருமை பேசும் வெற்றியே.
இந்த மாதிரியான திரைப்படங்கள் தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட உளவியல் தாக்குதல் என்று சொல்வேன். இந்தப்படங்கள் எல்லாமே ஒரு ஊரில் உள்ள பணக்காரரைப் பற்றி பேசும் படங்களாக வந்தவை.
படத்தின் கதாநாயகன் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவராக இருப்பார். அவர்களின் அண்ணன் தம்பிக்குள் நடக்கும் பிரச்சினையை ஊரின் பிரச்சினையாக காட்டியிருப்பார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேபோல ஆதிக்க ஜாதி என்று சொல்லப்படக்கூடிய மக்கள் ஒருவேளை வறுமையில் இருந்தால், அவர்களும் சேரி மக்கள் போன்றுதான் இருப்பார்கள்.
ஆனால் ஒரு வித்தியாசம், அவர்களுக்கு நாங்கள் ஆதிக்க சாதி என்ற ஒரு எக்ஸ்ட்ராவான உளவியல் தூண்டுதல் இருக்கும். அந்த உளவியல் தூண்டுதலை செய்தவைதான் மேலே நான் குறிப்பிட்ட ஜாதி பெருமை பேசும் படங்கள்.
அது போன்ற திரைப்படங்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை திரைப்படமாக எடுத்து வெற்றி கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
படத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக காண்பித்து இருந்தீர்கள்? எப்படி படக்குழு அனுமதித்தது?
இப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட வலிகளை பேசும் படங்கள் ஒரு ட்ரெண்ட் செட்டிங்காக மாறியிருக்கிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. நான் இந்தக் கதையை எழுதும் பொழுது, இந்தத்திரைப்படமானது இரு தரப்பு பார்வைகளையும் தாண்டி மூன்றாவது பார்வையாக அமைய வேண்டும் என்று நினைத்தேன்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இரு பிரிவினரையும் யார் ஆட்டிப்படைக்கிறார்களோ அவர்கள்தான் வில்லன் என்ற பொதுப்புள்ளியில் இருந்து இந்தக்கதையை எழுதினேன்.
அருள்நிதி நீண்ட காலமாக இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை திரைக்கதையானது மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதில் அவருக்கு சமூக பொறுப்பும் இருக்கும்.
அவருக்கு இந்தக்கதையை சொல்லும் பொழுதே இந்தக் கதை என்ன சொல்ல வருகிறது என்பது புரிந்து விட்டது. இதனை ஒரு நட்பு சார்ந்த திரைப்படமாகவும், ஆக்சன் படமாகவும் நான் எடுத்துக் கொள்கிறேன்.
நீங்கள் திரைக்கதையில் ஒரு இயக்குநராக சொல்ல வேண்டியதை சொல்லுங்கள் என்று தெளிவாகச் சொன்னார். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு அரசியல் புரிதல் அதிகம். ஆகையால் அவருக்கும் இந்தப்படமானது அவரது சிந்தனைக்குள் ஒத்துப்போனது. இதனால் எனக்கான சுதந்திரம் என்பது மிகவும் நன்றாக கிடைத்தது.
நீங்கள் எடுத்துக் கொண்ட களம் என்பது மிகவும் ஆபத்தானது. இரு ஜாதி பிரிவினரை பற்றி பேசும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் பிறழ்வு ஏற்பட்டாலும் மிகப்பெரிய பிரச்சினை உருவாகி விடும்? எழுத்துப்பணி எவ்வளவு கடினமாக இருந்தது?
அடிப்படையிலேயே நான் ஒரு பத்திரிகையாளர். விகடனில் வேலை செய்யும் பொழுது, கட்டுரையின் உண்மைத்தன்மையில் மிகவும் கறாராக இருக்க வேண்டும் என்பதுதான் எனக்கு சொல்லப்பட்ட முதல் அறிவுரை. காரணம் கட்டுரையின் உண்மைத்தன்மை சிதறி விட்டால், அது நிச்சயம் கேள்விக்கு உள்ளாகும்.
அது நீதிமன்றம் வரை சென்று வழக்கை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் நான் மிக மிக கவனமாக இருப்பேன். அங்கு கிடைத்த அனுபவம் தான் எனக்கு இப்படியான ஒரு திரைக்கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது.
இன்னொன்று புத்தக வாசிப்பு. பத்திரிகையாளனாக இருக்கும் போது புத்தக வாசிப்பு என்பது இயல்பாவே நமக்கு வந்து விடும். முதலில் நான் இந்தக்கதையை எழுதும் பொழுது அது ஒரு புளூபிரிண்டாக என் கையில் இருக்கும்.
அதனை மீண்டும் எழுதும்போது எனக்கு சில சந்தேகங்கள் வரும். அந்த சந்தேகங்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்து, அது குறித்தான உண்மைத்தன்மையை முழுவதுமாக உள்வாங்கி விட்டுதான் அடுத்தக்கட்டத்திற்கே செல்வேன்.
கதை எழுதி முடித்துவிட்டு என்னுடைய பத்திரிகை நண்பர்கள் பலருக்கு அனுப்புவேன். படைப்பு உருவாக்கத்தில் ஏதேனும் பிழைகள் வந்தால் அதை நாம் சரி செய்து கொள்ளலாம். ஆனால் , உண்மை தன்மையில் எந்தப் பிழையும் வந்து விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன்.
உண்மையில் சென்சாரில் இந்தப்படத்தில் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டு விட்டன. அந்தக் காட்சிகளெல்லாம் படத்தில் இருந்தால் இந்தப் படம் இன்னும் வீரியமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும்.
படத்திலிருந்து தேவர் சார்ந்த அடையாளங்கள் அனைத்தையுமே வெட்டச் சொல்லிவிட்டார்கள். அதனால் 28 இடங்களில் இருந்த அது தொடர்பான அடையாளங்கள் எடிட் செய்யப்பட்டன.
உண்மையில் தேவர் சமூகத்தை ஒரு நேர்மறையான இடத்தை நோக்கி நகர்த்துவதற்கான வேலையைத்தான் நான் இந்தப்படத்தில் செய்திருந்தேன்.
அதற்காக படத்தின் களத்தையே கமுதியில் வைத்தேன். காரணம் முதுகுளத்தூருக்கும், கமுதிக்கும் இடையே இருக்கும் ஊர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஊர்.
அந்தப் பகுதியில் தற்போதைய சூழ்நிலை என்னவாக இருக்கிறது என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நான் அந்த களத்தை தேர்வு செய்தேன்.
ஆனால் நான் ஒரு விஷயத்தில் இன்னும் தெளிவாக இருந்தேன். அது இந்தக்கதையை யாரும் எதிர்த்து கேள்வி கேட்காத வகையில் எழுத வேண்டும் என்பதில். அதனால்தான் படம் வெளியான பின்புகூட யாராலும் இந்தப்படம் குறித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட முடியவில்லை
உங்களுக்கு வாசிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது?
வாசிப்பு மட்டும் தான் ஒரு சமூகத்தை பண்பட்ட சமூகமாக மாற்றும். அதேபோல நமது வாசிப்பை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்க கூடாது. நமது வாசிப்பானது எல்லா தளங்களையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
இதுதான் ஒருவரை ஆய்வுக்கு உட்படுத்தும். இந்தப் படத்தில் ஒரு வசனமே வைத்திருப்பேன். ஒருவன் பதில் சொல்ல முடியாத அளவிற்கு நமது கேள்வி இருக்க வேண்டும் என்று. வாசிப்பின் வீரியம் அப்படியானதாக இருக்க வேண்டும்.
இப்போது வந்த மாமன்னன் திரைப்படமும் ஒரு கேள்விதான். அந்தக்கேள்வி அவ்வளவு பலமுள்ளதாக வந்ததற்கு அதற்கு பின்னால் இருக்கும் ஆய்வு மிக முக்கியமானது.
மாரி செல்வராஜ் எடுத்த பரியேறும் பெருமாள் அல்லது கர்ணன் ஆகிய திரைப்படங்கள் கேள்வி கிடையாது. அது அந்த மக்களுக்கான வலி. ஆனால் மாமன்னன் திரைப்படம் ஒரு கேள்வி. யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!
சமூகத்தில் ஜாதியானது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் சூழ்நிலையில், மீண்டும் இது போன்ற வலிகளைச் சொல்லும் திரைப்படங்கள் மீண்டும் ஜாதி மனப்பான்மையை சமூகத்திற்குள் விதைக்கிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?
நகரம் சார்ந்த பயணம் என்பது எப்போதும் பொருளாதாரம் சார்ந்தது. சம்பாதிப்பதற்காகத்தான் ஒருவர் ஒரு நகரத்திற்கு வருகிறார்.
அவர் ஒரு முழு சமரசத்துடன்தான் வருகிறார். தன்னுடன் இருக்கும் சக நபர்களிடம் எதையும் அவர் எதிர்பார்ப்பதில்லை. அவரின் நோக்கம் அனைத்துமே பொருள் தேடல் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.
ஆனால் அவர் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தால் அப்போது அங்கு பிரச்சினை எழும். அப்போது ஜாதி, கலாச்சாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் பார்க்கப்படும்.
நகரத்தில் ஜாதி என்பது வெளிப்படையான அமைப்பாக இருக்காது. ஆனால் ஆழம் சென்று அது இருக்கத்தான் செய்யும். இந்த பொருள் தேடும் ஊர்கள் என்பது ஜாதியத்தை பெரிதாக அடையாளப்படுத்துவதில்லை.
பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும் பெரும்பாலும் நகரத்தில் இருப்பதினால் அவை நகரத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வையே பிரதானமாக பிரதிபலிக்க முனைகிறது.
ஒரு தேர்தல் வருகிறது என்றால் 234 தொகுதிகளில் 30, 35 தொகுதிகளில் மட்டும் தான் ஜாதியம் சாராமல் சீட்கள் தரப்படுகிறது. சென்னை ஊரின் பிரதிபலிப்பாக இருப்பதினாலும், இங்கு சாதியத்தின் வீரியம் குறைவாக இருப்பதினாலும், ஜாதியே இல்லை என்ற ஒரு பொய்யான பிம்பத்தை இங்கு வைக்க முயல்கிறார்கள்.
இந்த விஷயத்தை களைவதற்காகத்தான் இங்கு எல்லாருமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் இருக்கிறவர்கள் எங்களுடைய சுயஜாதியில் இருந்து எங்களை வெளியே கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் அங்குள்ள நிலைமையை மட்டுமே வைத்து பேசுகிறார்கள். வெளியே இன்னும் 200 தொகுதிகள் இருக்கின்றன. ஆக, அவர்கள் செய்வது பெரிய துரோகம்.
இன்று ஜாதிக்கு எதிரான படங்கள் பலவை வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பட்டியல் இனத்தவரின் வலியை பேசும் படங்கள் நிறைய வருகின்றன. அந்தப்படங்களில் சொல்லக்கூடிய கருத்து வன்முறை வேண்டாம், நமது பயணம் கல்வியை நோக்கி இருக்க வேண்டும் என்பது. ஆனால் அதில் இடம் பெறக்கூடிய பாடல்கள், வசனங்கள் உள்ளிட்டவை பட்டியல் இனத்தவர்களையும் ஒரு ஜாதி பெருமை பேசும் தளத்திற்கு கொண்டு செல்கிறதே?
ஆதிக்க ஜாதி என்பதற்கு அர்த்தம் அடிமைபடுத்துதல். அடிமைப்படுத்துதல் என்பது இன்றைக்கு குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அடிமைப்படுத்திய நானும் ஆதிக்க சாதியாகத்தான் இருந்தேன் சொல்வது குற்றவாளியாக நாம் மாறுகிறோம் என்று பொருள்படும்.
இது போன்ற உளவியல் தாக்குதலை இரு தரப்பினரிடையேயும் நிகழ்த்தக்கூடாது. இந்த இரு சமூகத்தில் உள்ள எத்தனை பேர் இன்றும் பெரிய அதிகாரிகளாக பதவி வகிக்கின்றனர். அப்படி உருவாகுவதற்கு இரண்டு பேருக்குமே இங்கு தடை இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளில் இங்கு சொல்லக்கூடிய ஆதிக்க ஜாதியினரும் கிடையாது, பட்டியல் ஜாதியினரும் கிடையாது.
உலகில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலிலும் இந்த இரண்டு ஜாதியினரும் இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே பொருந்தும். இவர்களுக்கு இந்த உண்மையான நிலவரத்தை புரிய வைக்க வேண்டும்.
இதை விட்டுவிட்டு என் முன்னால் கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்தால், நானும் உன் முன்னால் அப்படி உட்காருவேன் என்று சொல்வதில் எவ்வளவு சரி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த உளவியலை தான் நாம் உடைக்க வேண்டும். அதனை உடைத்தெறிந்தவர்தான் பெரியார். தலித் மக்களிடம் இருந்த மனநிலையை விட பிற வகுப்பினரிடம் அவர் இந்த உளவியல் தாக்குதலை நிகழ்த்தினார்.
பிசி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் பிராமணர் இடத்தை எடுத்து விட்டார்கள். ஆகையால் இன்னும் நாங்கள் போக வேண்டிய நீட்சி அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.
234 தொகுதிகளிலும் பிராமணர் அல்லாத அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்தியவர் பெரியார்.
அவர் தொடுத்த உளவியல் தாக்குதல் அப்படியானது. பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் போடுவதை அவமானம் என்று நினைக்க வைத்தார். இந்த உளவியலைத்தான் நாம் மக்களிடம் செலுத்தச் சொல்கிறோம்.
அவர்கள் எல்லாவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்று சொல்கிறேன். சண்டைக்கு மட்டுமே இரண்டு பேரையும் மல்லுக்கட்டும் இடத்தில் வைக்க கூடாது. அந்தப் புள்ளிக்கு நாம் போகக்கூடாது. அதைத்தான் நான் இந்தப்படத்தில் சொல்லி இருந்தேன். நாம் படிக்க வேண்டும். நம் கேள்விக்கு பதிலே சொல்ல முடியாத அளவிற்கு நாம் படிக்க வேண்டும்” என்று கூறி விடைபெற்றார்.
டாபிக்ஸ்