தளபதி சிம்மாசனம் எனக்கே.. விஜயை முந்திய சிவகார்த்திகேயன்.. புக் மை ஷோ கொடுத்த தரவுகள்.. கெத்து காட்டிய அமரன்
Nov 25, 2024, 03:43 PM IST
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் படைத்த சாதனையை முறியடித்து இருக்கிறது.
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையான அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம், மூன்று வாரங்களில் 300 கோடி வசூலை தொட்டு இருக்கிறது; இந்த நிலையில் அமரன் திரைப்படம் தற்போது இன்னொரு மைல்கல்லை தொட்டு இருக்கிறது.
ஆம், புக் மை ஷோ ஆப் கொடுத்த தரவுகளின் படி, அமரன் திரைப்படம் 4.52 மில்லியன் டிக்கெட்டுகளை விற்று இந்த ஆண்டில் அதிகம் டிக்கெட்டுகளை விற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான கோட் திரைப்படம் 4.51 மில்லியன் டிக்கெட்டுகளை விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். அதில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் விஜய் சிவாவின் கையில் துப்பாக்கியை கொடுத்து அங்கிருந்து செல்வார். அப்போது சிவா விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குச் செல்வதை மறைமுக குறிப்பிட்டு, நீங்கள் ஏதோ அவரச வேலையாக செல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகையால், நான் இதனை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுவார். இதனையடுத்து இனி தமிழ் சினிமாவின் விஜய் தான் தான் என்று அவர் மறைமுகமாக குறிப்பிடுகிறார் திரைவட்டாரத்தில் பேச்சு எழுந்தது. தொடர்ந்து கோட் படத்தில் நடித்ததிற்காக சிவாவிற்கு வாட்சையும் பரிசாக கொடுத்தார் நடிகர் விஜய்.
அது ஒரு அழகான நிகழ்வு
படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சிவகார்த்திகேயன் சந்தித்த போது இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நீங்கள் விஜய் சார் எனக்கு துப்பாக்கி கொடுத்தது பற்றி கேள்வி கேட்கிறீர்கள்? அதை நான் திரைப்படத்தில் நடந்த வழக்கமான நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன். ஒரு சீனியர் நடிகர், அவருடன் சேர்ந்த இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதில் அவ்வளவு தான் இருக்கிறது. நான் சினிமாவில் இன்னும் செய்ய வேண்டிய சாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன" என்று பேசினார்.
மேஜர் முகுந்த் வரதராஜன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
இந்தப்படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் தேவையில்லாத வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “இந்தப் படத்தில் தேவையில்லாத காட்சிகளையோ, வசனங்களையோ சேர்க்கவில்லை. இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமா க்ராஃப்டை நம்பி மட்டுமே எழுதப்பட்டது. இராணுவ வீரரின் கதையை எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியும் என்கிற எண்ணத்தை மட்டுமே முன்னே வைத்துக்கொண்டு எடுத்த படம் அமரன் எனக் கூறினார்.
இந்தப் படம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ. ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பான ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அதற்கான சான்றிதழ் படக்குழுவிடம் உள்ளது.
சொந்த கருத்துகளுக்கு படத்தில் இடமில்லை
அமரன் திரைப்படம் என்னுடைய அரசியல் பார்வையையும், சொந்த கருத்துகளையும் சொல்லும் படம் கிடையாது.எனக்கும் சில கருத்துக்கள் இருக்கிறது. அதை படத்தின் கதாபாத்திரத்தில் திணிக்கக்கூடாது என்பதில் ஒரு இயக்குநராக மிகவும் தெளிவுடன் இருக்கிறேன். சினிமாக்காரர்களுக்கு சமூக பொறுப்புகளும் இருக்கிறது. அதற்கு உட்பட்டு இந்த அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது” என்று பேசி இருந்தார்.
டாபிக்ஸ்